Sunday, August 1, 2010

நட்பைக்கொண்டாடுவோம் !

நட்பு…!


இந்த ஒரு வார்த்தை பரவசமானது.

இந்த ஒரு வட்டம் நம் வசம் உண்மையாக இருந்தால்,உலகம் நம் வசமாகும்.

உலகின் முதல் உறவு நட்பாகதான் இருக்கவேண்டும்.

ஆதாம் ஏவால் முதல் சந்திப்பே நட்புதான். முதல் பார்வையே சினேகப்பார்வைதான்.

உள்ளத்தில் ஏற்பட்ட கிளர்ச்சிதான் நட்புக்கு உயிர்கொடுத்தது.

அது உடல் கவர்ச்சி ஆனபோது காமம் வழிந்தது.

காமம் தணிந்து காதல் நின்றது.

காதல் என்று சொல்லும்போது.அது நட்பின் கொஞ்சம் கலப்பட நிலைதான்.

இன்றும் காதலுக்கு போடப்படும் தூண்டில் நட்பில்தான் ஆரம்பிக்கிறது.

முன் காமத்தில் நிறைந்து காதலில் முடிந்தது.

இன்று காதலில் நிரம்பி காமத்தில் முடிகிறது.

மற்ற உறவுகளை அந்த அந்த நிலையில் தான் நின்று பார்க்க முடியும்.

ஆனால் நட்பு மற்றும் எல்லா நிலைகளிலும் நின்று, வென்று பார்க்க உதவும்.

மற்ற உறவுகளை ஒரே கோணத்தில் தான் பார்க்கவேண்டும்.

ஆனால் நட்பின் பரிமாணம் அளப்பரியது,அளவில்லாதது.எல்லா கோணத்திலும் பார்க்கமுடியும்.

நீங்கள் தாயுடனும் தந்தையுடனும் மனைவியுடனும் நட்பாக நின்று பார்க்கலாம்.

நீங்கள் இங்கெல்லாம் நட்பாக நிற்கும்போது உங்களின் உயரம் சமன்படுகிறது. உள்ளம் மேலே மேலே செல்கிறது.

உங்களின் அம்மாவிடமும் அப்பாவிடமும் ஒரு நண்பனின் நிலையில் இருந்து பேசிப் பாருங்கள். பாசத்தின் வலிமை புரியும்.

உங்கள் மனைவியுடன் ஒரு தோழனைப்போல் உறவாடிப் பாருங்கள்,உரசல்கள்,விரிசல்கள் இல்லாத விரசமில்லாத காதல் பொங்கி வழியும்.

சாயுங்காலத்தில் நட்புதான் கை கொடுக்கும்.

பொக்கை வாய் சிரிப்புடன் ஒரு தாத்தனும் பாட்டியும் உறவாடும் காட்சியைப்பார்த்து இருக்கிறோம்.அங்கே அவர்கள் சாயும்காலத்தில் நிலைத்து நிற்பது நட்புதான்.

இன்றைய இயந்திர உலகில் குடும்ப உறவில் நிற்க வேண்டியது நட்புதான்.

ஆணுக்கு பெண் சமமாக கற்கிறாள் – உழைகிறாள் – சாதிக்கிறாள்.

இங்கே பாரம்பர்யமான கணவன் – மனைவி உறவு கை கொடுக்காது.

நட்பு கை கொடுக்கும்.

உங்களுக்கும் உங்கள் துணைவிக்கும் உள்ள நட்பு வீட்டை அழகாக்கும்.

நீங்கள் நட்போடு இருந்த நாளை எண்ணிப்பாருங்கள்,அன்று உங்கள் வீடே ரம்மியமாக இருந்திருக்கும்.

நட்பில் நிற்கும்போது தான் நாடுகள் வளம்பெற்று இருக்கின்றன.

நட்பில் நிலைத்து நிற்கும் போதுதான் உலகமே வளம் கொழிக்கும்.

மற்ற உறவுகளுக்கு பலவீனங்கள் உண்டு.

நட்புக்கு பலம் தவிர வேறில்லை.

மற்ற உறவுகள் சில நேரங்களில் ஆபத்தாக மாறிவிடுவது. நட்பின் கலவை அதில் குறைந்து போவதால்தான்.

எந்த பரிசும் அள்ள அள்ள குறைந்து வரும்.

நட்புதான் கொடுக்க கொடுக்க குறையாது! அமுதசுரபி!

உலகில் பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம் உறவுகள்.

ஆனால் பிரச்சனைக்களுக்கெல்லாம் தீர்வு நட்புதான்.

உறவுகள் மேம்பட ஒரு வழி நட்பு.

உலகம் அமைதி பெற ஒரே வழியும் நட்புதான்.

உங்கள் நட்பை உங்கள் எதிரிக்கு பரிசளியுங்கள் வஞ்சம்,சினமில்லா உலகம் உங்களை வரவேற்கும்.

நட்பின் நிலையில் என்றும் வளர்ச்சி கூடாது.

ஒரு குழந்தையின் மனநிலையிலேயே நட்பு இருக்கவேண்டும்.

நட்பில் உங்கள் மேதாவி தருணங்கள் எடுபடாது.

நட்புக்கு தகுதி தேவையில்லை ! நட்பே பெரும் தகுதிதான் !

அது என்றும் ஒரு குழந்தையைப் போல இருப்பது.

குழந்தையின் நட்புதான் கள்ளம் கபடமில்லாதது.

முதல் வினாடி ஒரு பென்சிலுக்காக சண்டை போடும்.

மறுவினாடி பல்லி மிட்டாயை டவுசர் நுனியில் வைத்து, பல்லில் கடித்து பசையாக்கி திகட்ட திகட்ட ஊட்டி மகிழும்.

உங்களின் குழந்தைகால நட்பை நினைத்துப் பாருங்கள்.

நீங்கள் இப்போதும் குழந்தையாகவே மாறிவிடுவீர்கள்.

நட்பில் மட்டும் முதிர்ச்சிக்கூடாது.

இப்பொழுதும் எப்பொழுதும் நாம் குழந்தையாகவே இருக்கவேண்டும்.

இதே குழந்தை மனோபாவத்தோடு எப்போதும் நட்பைக்கொண்டாடவேண்டும்.

நட்பு…!

இந்த ஒரு வார்த்தை பரவசமானது. இந்த ஒரு வட்டம் நம் வசம் உண்மையாக இருந்தால்,உலகம் நம் வசமாகும்.

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...