Thursday, January 2, 2020

புத்தாண்டில் நீங்கள் எடுக்கவேண்டிய உறுதிமொழிகள்


புத்தாண்டில் நமது உறுதிமொழிகள் பெரும்பாலும் பொருள் சார்ந்ததாக அல்லது உறவுகள் சார்ந்ததாகவே இருக்கிறது. 
“இந்த வருஷம் புதுசா ஒரு வீடு வாங்கிடணும்!”
“இந்த மாடல் கார் வாங்கிடணும்”
“ இப்படி ஒருத்தரை கல்யாணம் செய்துகொள்ளணும்”
“ இந்த ஊரையெல்லாம் சுத்திப்பாக்கணும்”
இப்படி ஒவ்வொரு விருப்பமும் ஒவ்வொரு வகையில் பொருள் சார்ந்த உறுதிமொழிகள்தான்.
நம்மில் எத்தனை பேர் ஆரோக்கியம் சார்ந்த உறுதிமொழிகளை எடுக்கிறோம்?
சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும்.
உடலமும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால் தானே எதையும் சாதிக்க முடியும். பல் போனபின்பு பகோடா வந்தால் எப்படி இருக்குமோ உடலும் மனமும் சிதைந்த நிலையில் உங்களுக்கு கிடைக்கும் பொருள்சார்ந்த வெற்றி எதுவும் பலன் தராது.
அமைதியான ஆனந்தமான வாழ்க்கைக்கு அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி ஐந்து விஷயங்களை முன்வைக்கிறார். அவை உடல்நலம்நீளாயுள்நிறைசெல்வம்உயர்புகழ் மெய்ஞானம். கடைசிக்கும் முதலுக்கும் இடையே இருக்கும் மூன்று விஷயங்கள் பொருள் சார்ந்தவை. முதலும் கடைசியும் அருள் சார்ந்தவை.
உடல்நலனை சரியாக பராமரித்தால் தான் நீளாயுள் பெறமுடியும். 
நீண்ட ஆயுள் பெற்றால் தன் நிறைந்த செல்வத்தை அடையமுடியும். 
நிறைந்த செல்வம் பெற்று நாம் செய்யும் தானங்களும் தர்மமும் செய்து உயர்ந்த புகழை அடையமுடியும்.
உயர்ந்த புகழை அடைந்த ஒருவர் மெய்ஞானத்தை பெறுவது சுலபம்.
இந்த ஐந்து செல்வங்களும் ஒருவனுக்கு சரிவர அமையுமெனில் அவன் வாழ்க்கையில் முழுமையை அடைகிறான். அதனால் முதல் விஷயமான உடல்நலன் என்பது மிக மிக முக்கியம்.
உடல்நலன் என்றவுடன் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து கட்டுகோப்பாக வைத்துகொள்வது அல்ல. நமது உடலின் இயக்கத்தை ஆரோக்கியமாக வைத்துகொள்வது. உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை எப்படி கண்டுபிடிப்பது. மிகவும் சுலபம்.
காலையில் கண்விழிக்கும் போது உடல் ஒரு காற்றை போன்று மென்மையான உணர்வுடன் விழிப்புநிலையை பெறவேண்டும். ஒரு ராக்கெட் புறப்படுவது போல் நாம் படுக்கையில் இருந்து எழவேண்டும். உடலும் மனமும் உற்சாகத்தில் நிறைந்திருக்கவேண்டும். எழுந்த  முப்பது வினாடியில் சார்ஜ் பெற்ற பேட்டரி போன்று உங்கள் உடல் கிண்ணென்று இருப்பது ஆரோக்கியத்தின் முதல் நிலை.
அதே போன்று பணி முடித்து இரவு படுக்க போகும் போது தலையணையில் தலை விழுந்த பத்தாவது நொடியில் உறக்கம் உங்களை சூழ்ந்துகொள்ளவேண்டும். எந்தவிதமான தொந்தரவும் அற்ற ஆழ்ந்த உறக்கம். ஒரு தியானத்தின் அனுபவம் போல அது அமையவேண்டும்.
காலையில் எழுந்திருக்கும் போது விழிப்பு வந்தபின்பும் உடலில் அசதி மிஞ்ச புரண்டு புரண்டு படுத்தாலும். அலாரம் வைத்து எழ முயற்சித்து அலாரத்தை எரிச்சலுடன் எழுந்து அணைத்தாலும். அதிகாலை எழுந்திருக்கும் போது உடலும் மனமும் ஒத்த நிலையில் செயல்படாவிட்டாலும் உங்கள் உடல் இயற்கையான நிலையில் இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
அதே போன்று உறங்கசெல்லும் போது படுக்கையில் விழுந்து பத்து நிமிடம் தாண்டியும் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு உறங்க முயற்சித்து தோற்றுகொண்டிருந்தாலும் அதே ஆரோக்கியமற்ற நிலைதான்.

சரி ! இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட என்ன செய்யவேண்டும் அதான் முன்பே சொன்னோமே உடல்நலனை சீர்படுத்தவேண்டும். உடலுக்கு சிறந்த பயிற்சி தரவேண்டும். அதாவது உடலில் இரத்தம் ஓட்டம்வெப்ப ஓட்டம்காற்றோட்டம்உயிரோட்டம் ஆகிய நான்கு ஓட்டங்கள் சீரான நிலையில் இருக்குமாறு செய்யும் எந்த பயிற்சியும் சிறந்த உடற்பயிற்சியே. எதுவேண்டுமானாலும் இருக்கலாம். உங்களுக்கு பிடித்த பயிற்சியை ஒரு நாற்பது நிமிடம் பொறுமையாக செய்யுங்கள். உடலில் இந்த இயக்கங்களை சீராக்குங்கள். இதுதான் மிக மிக முக்கியமான ஒன்று.
புத்தாண்டில் நாம் எத்தனை உறுதிமொழிகள் வேண்டுமானாலும் எடுக்கலாம். பொருள்சார்ந்த ஒன்றாக இருப்பதும் சிறப்பே. ஆனால் அதற்கு முன்பு முதல் உறுதிமொழி எப்பொழுதும் உடல்நலன் சார்ந்த ஒன்றாகவே இருக்கட்டும் !



No comments:

Post a Comment

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...