Saturday, January 11, 2020

மன அழுத்தம் என்பது ஒரு மாயை !

பிரபஞ்சம் பேசுகிறது - பகுதி 8 
ராஜ்மோகன்



ஒரு விஷயத்தில் இந்தியர்களான நாம் எல்லாம் நமது காலரை தைரியமாக தூக்கிவிட்டுக்கொள்ளலாம்.

உலக அளவில் மன உறுதியும் சகிப்புதன்மையும் இந்தியர்களான நமக்கு தான் அதிகம். அதனாலேயே இந்த மன அழுத்தம் என்ற நோய் நம்மிடையே அதிக அளவில் இல்லை.  

என்ன பாஸ் சொல்றீங்க ?  

நம்ம ஊருலதான் அதிகம் என்று யாராவது  சொன்னால் நம்பாதீர்கள். 
அவர்கள் உங்களுக்குள் மன அழுத்தத்தை விதைக்க முயல்கிறார்கள். 

அமெரிக்கா , ஐரோப்பியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது நம்ம ஊரில் இந்த மன அழுத்தம் மிக மிக குறைவு.  ஏன் எனில் நமது உறவுமுறை அமைப்பு அத்தகையது. 

நீங்கள் கூட்டு குடும்பத்திலும் நல்ல நட்புடனும் உறவுமுறைகளோடு ஆரோக்கியமான உறவுடனும் இருக்கிறீர்கள் எனில் உங்களுக்கு மன அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் மிகமிக குறைவு.

மன அழுத்தம் என்ற இந்த சொல்லாடலே பன்னாட்டு நிறுவனங்கள் நம்ம ஊரில் தலையெடுக்க தொடங்கிய பின்னர்தான் அதிகம் பேசப்படுகிறது. பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். சில வருடங்களுக்கு முன்பு சர்க்கரை நோய் என்ற நோயே இல்லை. சர்க்கரை நோய்க்கு பணக்கார நோய் என்று அழைப்பார்களாம். இதனால் தான் என்னவோ எல்லோரும் எனக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்று பெருமையாக சொல்லிக்கொள்ள தொடங்கிவிட்டார்கள்.

இல்லாத ஒன்று மிகைப்படுத்தப்பட்டு அதுவே இருப்பதாக மாறிவிட்டது. நாம் தான் முதலிலேயே சொன்னோம் அல்லவா பிரபஞ்சத்திற்கு ஒன்று தெரியாது நீங்கள் என்ன கேட்கிறீர்களோ அதை கொடுத்துவிடும். உலக மக்கள் அனைவரும் சர்க்கரை நோய் எளிதில் வந்துவிடும் என்று நம்பினால் அது வந்துவிடும்.

மன அழுத்தம் அதே போல் ஒரு பேண்டஸி வார்த்தையாகிவிட்டது. I am in stress ya….என்று சொல்வதை ஏதோ பெருமையாகவும்.....உலகிலேயே தாங்கள் தான் பிசியானவர்களாக காட்டிகொள்ளவும் பயன்படும் ஜோடனை வார்த்தை.

உங்களுக்கு ஒன்றை சொல்லிகொள்கிறேன். எதுவும் நீங்கள் அனுமதிக்காமல் உங்களுக்குள் இறங்கமுடியாது. அதே போல் உலகில் எத்தனை பெரிய வலியையும் தாங்கிகொள்ளும் ஆற்றலுடன் தான் இந்த மனித பேரினம் படைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு சின்ன உதாரணம் சொல்லவா ? நமது உடற்கூறு அமைப்பின்படி மனித உடல்  அதிகபட்சமாக 45 டெல் அளவு வலியைதான் தாங்கமுடியும். ஆனால்  குழந்தைபிறப்பின் போது ஒரு பெண்ணின் உடலில் அதிகபட்சமாக 57 டெல் அளவிற்கு வலி நிகழ்கிறது. அதாவது 20 எலும்புகள் ஒரே நேரத்தில் உடைந்தால் எத்தனை வலி வருமோ. அத்தனை வலி அந்த வினாடியில் தாக்கும். இதையே தாங்கும் மனித உடல் ஒரு சின்ன மன அழுத்தத்தை தாங்காதா ?

மனம் ஒரு காந்தபுலன் என்கின்றனர் ஞானிகள். அதனை எப்படி வேண்டுமானாலும் மாற்றி அமைக்கமுடியும் . உங்கள் எண்ணம் முழுவதும் நெகடிவான விஷயங்கள் பதிந்து இருந்தாலும் அதன் அளவைவிட பாசிடிவ் சிந்தனைகளை விதைப்பதின் மூலம் நெகடிவ் தன்மையை முற்றிலும் மாற்றிவிடமுடியும்.

கடமையை செய்ய பலனை எதிர்பாராதே என்கிறது வாழ்வியல் நெறி. கடமை செய்து பலனை எதிர்பார் என்கிறது நவீன வாழ்வியல். சரி ! எதிர்பார்ப்புடன் ஒரு பணியை செய்யும்பொழுது அதன் பலன் எதுவாக இருந்தாலும் ஏற்றுகொள்வேன் என்ற நிலையில் நீங்கள் இருந்தால் மன அழுத்தம் வரவே வராது.   ஆனால் அப்படியா இருக்கிறோம்.

எண்ணத்தால் எல்லாம் முடியும் என்கிறீர்களே நான் எனது எண்ணத்தையும் கடும்  உழைப்பையும் பயன்படுத்தி தானே ஒரு செயலை செய்கிறேன். அதன் பலன் ஏன் எனக்கு கிடைப்பதில்லை. அதனாலேயே எனக்கு அதிக டென்ஷன் வருகிறது என்று நீங்கள் நினைத்தால் இங்கு ஒன்றை நான் சொல்லிக்கொள்ளவிரும்புகிறேன். வெறும் எண்ணமும் உழைப்பும் மட்டும் பலன் தராது.

எண்ணம். உழைப்பு இத்துடன்  இடம். காலம். சூழல் இவையும் உங்களுக்கு ஒத்துவரவேண்டும்.
உழைப்பும் எண்ணமும் கடுமையாக இருந்தாலும் காலமும் சூழலும் தான் மன அழுத்தத்தை கொண்டு வருகிறது.  

எல்லா கடமைகளும் முடித்துவிட்டு  இனி கொஞ்சம் பணம் சேர்த்து ஒரு சொந்த வீடு வாங்கலாம் என்று நினைக்கும் பொழுது யாருக்காவது உடல்நலக்கோளாறு வந்து செலவழித்த பணமெல்லாம் சிகிச்சையில் கரைந்தால் இங்கு எது உங்கள்  எதிர்ப்பார்ப்பை தகர்க்கிறது ? எதிர்பாரத வரும் இந்த செலவு காலம் ஏற்படுத்தும் பாதிப்புதானே ? ஆனால் நீங்கள் பிரபஞ்ச இணைப்பில் இருந்தால் உங்கள் உள்ளுணர்வு ஒரு மருத்துவ காப்பீட்டை செய்து வைத்திருக்க செய்யும். நீங்கள் மிக சுலபமாக இதிலிருந்து விடுபட்டுவிட முடியும்.

பயிர் செய்து அறுவடைக்கு தயாராகும் முன்பு திடிரென்று பூச்சிகள் தாக்க ஆரம்பித்தால் நீங்கள் என்ன செய்யவேண்டும். பூச்சிகள் ஒரே நாளில் உற்பத்தியாவதில்லை. நீங்கள் பிரபஞ்ச இணைப்போடு இருந்தால் இந்த பூச்சிகள் தாக்குதல் குறித்து ஒரு முன்னெச்சரிக்கை செய்தி உங்களுக்குள் விதைக்கப்படும். நல்லவேளை முன்பே தெரிந்தது அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூச்சிகொள்ளிகளை பயன்படுத்தி பெரும் பாதிப்பை தடுத்துவிட்டேன் என்பீர்கள்.

இப்படி எந்தவித இடர்பாடுகள் நிகழ்ந்தாலும் அது நிகழ்வதற்கு முன்பு உங்கள் மனதில் ஒரு எச்சரிக்கை மணியை அடிக்கும் பிரபஞ்சம். இதனை உள்ளுணர்வு சக்தி என்கிறார்கள் அறிஞர்கள். Power of Intution குறித்து ஏராளமான புத்தகங்கள் வந்திருக்கின்றன. எத்தனையோ வழிகாட்டுதல்கள் கொட்டிக்கிடக்கின்றன. எல்லா வழிகாட்டுதல்களைவிடவும் மிக வலிமையான வழிகாட்டி நீங்கள் தான்.

ஆம் ! நமக்கான வழிகாட்டி நம்மைத் தவிர வேறு யாராலும் இருக்கமுடியாது. நாம் மட்டுமே நம்மை 360 டிகிரியிலும் உணர்ந்தவர்கள். அப்படியிருக்க இன்னொருவர் ஆலோசனை எப்படி நம்மை வழிநடத்தும். நம்மை நாமே உணர்ந்துகொள்வது தான் பிரபஞ்சத்தை  உணர்ந்துகொள்ளும் வழி.

உங்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறது எனில் அதனை நீங்கள் உங்களுக்குள் சேமிக்கிறீர்கள் என்று அர்த்தம்.  முதலில் ஒரு புள்ளியாக சின்ன அழுத்தம் தோன்றும். அதனை நீங்கள் உடனடியாக சரி செய்யவில்லை எனில்.அடுத்த புள்ளி...அடுத்த புள்ளி என  ஒரு சுமையாக  உருவெடுத்து நிற்கும். அந்த சுமை இன்னொரு சுமையை இழுக்கும். 

உடல் அமைப்பு விந்தனையானது. உடலில் எண்ணற்ற நரம்புகள் இருக்கின்றன. அவை ஒரு குறிபிட்ட இணைப்பில்  ஒன்றோடு ஒன்றாக பிணைந்து கிடக்கின்றன. நீங்கள் மனதில் தரும் அழுத்தம் அதிர்வலைகளாக பதிந்து இந்த நரம்புகளில் கடத்தப்பட்டு அந்த முடிச்சுக்களில் சேமிக்கப்படும். இது அதிகமாக அதிகமாக அந்த முடிச்சுக்களில் இருந்து இந்த அதிர்வுகள் வெளியேறி சுரப்பிகளில் பரவும். சுரப்பிகள் தனது இயக்கத்தை மந்தப்படுத்தும். சுரப்பிகள் மந்தப்பட்டால் உடல் இயக்கம் மந்தப்படும். உடல் இயக்கம் பாதிக்கப்படும் போது அது நோயாக மாறி நிற்கும். மனதில் ஏற்படும் ஒரு பாதிப்பு அது உடல் பாதிப்பாக வந்து நிற்பது இப்படிதான்.

அய்யோ ! நானே கடும் மன அழுத்தத்தில் இருக்கிறேன். இப்படியெல்லாம் லெக்சர் தந்து அறுக்காமல் எனக்கு இதில் இருந்து விலகி நிற்க வழிசொல்லுங்கள் என்று யாரேனும் கேட்கிறீர்கள் எனில் ஒரே பதில் தான். அதனை ஏன் சுமந்து நிற்கிறீர்கள். சற்று வைத்து ஒதுங்கி நில்லுங்கள். மன அழுத்தம் வெறும் மாயை ! மாயையில் இருந்து விடுபடுங்கள் !

இடுக்கண் வருங்கால் நகுக என்றார் உலகின் மூத்த மனோத்துவ டாக்டர் திருவள்ளவர். நகுக என்றால் சிரிக்க என்பது மட்டுமல்ல. நகர்க என்றும் பொருள் கொண்டு பாருங்கள். உங்களை நோக்கி ஒரு துன்பம் வரும் போது அதனை எதிர்கொண்டு ஏற்றுகொள்ளாமல் சற்று நகர்ந்து நில்லுங்கள். அது அதன் வழியில் சென்றுவிடும்.

அது எப்படி என்கிறீர்களா ? Attachment மற்றும் Detachment என்று இரண்டு செயல்கள் இருக்கின்றன. இதனை நீங்கள் தெளிவாக உணர்ந்து செயல்படுத்தினால் நிச்சயம் உங்கள் மன அழுத்தத்தை தூக்கி வீசிவிட முடியும். மாயையில் இருந்து விடுபட முடியும்.அளவற்ற இந்த பிரபஞ்ச ஆற்றலை உங்களுக்குள் தேக்கிவைத்துக்கொள்ள முடியும். எப்படி செய்யலாம் ?

                                          ( பிரபஞ்சம் பேசும் )



No comments:

Post a Comment

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...