Wednesday, January 8, 2020

வைகுண்ட ஏகாதசி அமளிகள் - சொர்க்கம் எங்கே இருக்கிறது ?




கொண்டாட்டங்கள் என்றால் மற்ற மாநிலங்களைவிட கர்னாடகாவில் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும்.மாலை ஆறு மணிக்கு ஏதாவது ஒரு பப்பிலோ பாரிலோ உட்கார்ந்து குடும்பத்தோடு கும்மாளமிடுபவர்கள் கூட பக்தி பரவசத்தோடு அதிகாலையில் அந்த கடுங்குளிரிலும் ஈரத்தலையுடன் சொட்ட சொட்ட கோவிலில் வரிசையில் நின்று பரவசம் காண்பார்கள். வைகுண்ட ஏகாதசியான கடந்த ஆறாம் தேதி பெங்களூர் மாநகரில் ஒரு நீண்ட பயணம் மேற்கொண்டிருந்தேன். எனது பயணம்  எம் .ஜி. ரோடில் ஆரம்பித்து, சிவாஜி நகர், குயின்ஸ் ரோடு, வசந்த் நகர்,சேஷாத்திரிபுரம் , வயாலிகாவல், மல்லேஸ்வரம்,ராஜாஜி நகர் வழியாக விஜய் நகர் வரை நீண்டது. வழியெங்கும் நிறைய பெருமாள் கோவில்கள். அனைத்து கோவில்களிலும் பக்தி பரவசத்துடன் மக்கள் நீண்ட வரிசையில் நின்று எப்படியாவது சொர்க்கத்துக்கு ஒரு கடவுசீட்டு வாங்கிவிடவேண்டும் என்று பிராயசனப்பட்டுக்கொண்டிருந்தார்கள். அன்று மாலை என் பள்ளித்தோழன் அரவிந்த்பிரபுவை சந்திக்க அவன் வீடு இருக்கும் ஜேபி நகருக்கு சென்றபோது அங்கு இரண்டு பெருமாள் கோவிலை காண்பித்தான். ஒன்று நடிகர் கிச்சா சுதிஷ் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் சின்ன பெருமாள் கோவில் ( அவன் அப்படிதான் அழைத்தான் ) இன்னொன்று சற்று தூரத்தில் இருந்த பெரிய பெருமாள் கோவில். அந்த கோவிலின் விசேஷன் என்னை போன்று இரண்டரை மடங்கு உயரமான பெருமாள் சிலை. அதை பார்க்க கட்டணமில்லா வரிசை சுமார் ஐந்து கிலோ மீட்டர் நீளத்திற்கும் கட்டணவரிசை இரண்டு கிலோ மீட்டர் நீளத்துக்கும் நீண்டிருந்தது. அன்று அதிகாலை மூன்று மணிக்கு அரவிந்தபிரபு முதல் தரிசனம் வரும்போது இருந்த கூட்டம் கொஞ்சம் குறையாமல் நான் அவனுடன் பார்த்த இரவு எட்டு மணிவரை அப்படியே இருந்ததாம். அவனுக்கு தரிசனம் செய்ய இரண்டு மணிநேரம் எடுத்தது என்றான். கூட்டம் குறைய குறைய வந்து இணைந்துகொண்டே இருந்தது. எல்லோருக்கும் எப்படியாவது சொர்க்கத்திற்கு சென்றுவிட வேண்டும் என்ற ஆசை. விஷயம் இதுவல்ல....காலையில் நான் வயலாக்காவலை கடந்து சென்றேன் அல்லவா ? அங்கு ஒரு பெரிய பெருமாள் கோவில் இருக்கிறது. அதற்கு செல்லும் வழியில் பெரிய Barrigaurd போட்டு வழியை மறைத்து நான்கு போலிஸ்காரரை பாதுகாப்புக்கு போட்டிருந்தார்கள்.
ஒரு ஏழைப்பங்காளன் அதனை கடந்து உள்ளே போக முயற்சிக்க போலிஸ் உச்சத்தொண்டையில் அவனோடு மல்லுக்கு கட்டிகொண்டிருந்தது.
" ஏய்...அர்த்தமாட்கொல்லி...இது விஐபி எண்றன்சு.....அல் ஓகி...அதே....ஜெனரல் பப்ளிக்கு...." 
போலிஸ் சொல்வதை காதில் போட்டுக்கொள்ளாமல் மிஸ்டர் பப்ளிக் எப்படியாவது உள்ளே நுழையவேண்டுமெ என்று போராட ,போலிஸ் திரும்ப திரும்ப....." ஹே இது விஐபி..இது விஐபி...எஜமனாருல ( அரசியல்வாதியோ இல்லை அதிகாரியா ) வர வழி....என்று சொல்லிகொண்டிருந்தது.
இந்த உரையாடல் நிகழ்ந்துகொண்டிருந்த போது என் ஆட்டோ சரியாக அவர்கள் அருகில் சென்று வேகம் குறைந்து முன்னால் செல்லும் கூட்டத்தின் வேகத்திற்கு ஏற்ப நகர....என் மனதில் பட்டதை பளிச்சென்று சொல்ல தோன்றியது..
" ஹலோ.....யாரு நிஜ விஐபி...இவரு ஓட்டுபோடலைன்னா...ஒங்க எஜமானரு ...எஜமானரு ஆகமுடியாது......பப்ளிக் தான் விஐபி...."  இதை போலிஸ் எதிர்பார்க்கவில்லை. என்னை பார்த்து
" நீ யவரு...." என்றான். 
ஆட்டோக்கார அண்ணாச்சி என் பழைய கதையை ரிவைண்ட் செய்து  " அவரு சிட்டிகேபிள் பாஸு..." என்று சொல்ல ( பதிமூன்று வருடம் முன்பு சிட்டிகேபிளில் வேலைப் பார்த்தது இன்னும் ஒர்க் ஆவுட் ஆகிறது )
கொஞ்சம் சுதரித்தவன் கொஞ்சம் கடுப்புகுறைந்து என்னைப் பார்க்க " விடுங்க பாஸ்....குட்டி குட்டி குழந்தைகளோட இருக்காரு....இவரும் உங்க எஜமானரோடு சொர்க்கத்துக்கு போனாதான் ..அங்கு எலக்‌ஷன் வந்தா ஓட்டு போடமுடியும்...." என்று சொல்ல போலிஸ்காரர் கலுக்கென்று சிரித்துவிட்டான். ஆட்டோ நகர கை காட்டிவிட்டு யோசனையுடன் பயணத்தை தொடர்ந்தேன்.
இறைவன் என்பவன் எல்லோருக்கும் பொதுவானவன்
அங்கு ஏன் இன்னும் இந்த பாகுபாடு ?
ஏழைக்கு நீண்ட வரிசை. பணக்காரனுக்கும் அதிகாரத்தில் இருப்பவனுக்கும் குறுக்கு வரிசை.

பக்தி மார்க்கம் என்பது ஒருநிலையில் தேவையான ஒன்றுதான்.
கோவிலுக்கு செல்வதும் இறைவழிபாடும் மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி தருபவை.
ஆனால் சொர்க்கத்திற்கு போக இது மட்டும் போதுமா ?

இந்த வைகுண்ட ஏகாதசியை கொண்டாட பண உதவி செய்பவர்களில் தொண்ணூற்றி ஒன்பது சதவீத தொழிலதிபர்கள் வரி ஏய்ப்பவர்கள், தொழிலாளர்களில் வயிற்றில் அடிப்பவர்கள். தங்களின் நல்லெண்ண பிம்பத்தை கட்டமைத்துக்கொள்ள இது போன்ற திருவிழாக்களை பயன்படுத்திகொள்கிறார்கள். இது ஒரு வியாபார தந்திரம். வைகுண்ட ஏகாதசி என்று பிரபஞ்சத்தில் பெரும் சக்தி வாய்ந்த ஆற்றல் ஊடுருவுகிறது என்றே வைத்துகொள்வோம். அது கோவிலில் மட்டும் ஊடுருவாது எல்லா இடங்களிலும் ஊடுருவும்.

பிரபஞ்சம் வழங்கும் எந்த ஆற்றலையும் உங்களுக்குள் தக்கவைத்துக்கொள்ள அதனை ஊடுருவ அனுமதிக்க நீங்கள் தகுதி வாய்ந்தவராக இருக்கவேண்டும்.

பேராசை, கடுஞ்சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வுதாழ்வு மனப்பான்மை, வஞ்சம் இவற்றை உங்களிடம் குறைய குறைய சொர்க்கமான வாழ்வு உங்களுக்குள் ஒளிவீசத்தொடங்கும்.

எப்படி இறைவன் என்பவன் மனிதனுக்குள் இருக்கிறானோ அதே போன்று தான் சொர்க்கம் நரகம் என்ற இரண்டும் மனித வாழ்க்கை முறையில் இருக்கிறது. தவிர பிறமனம் வருந்த, பிறதுன்பத்தை போக்காமல் கோவிலுக்கு சென்று  கோவிந்தா கோவிந்தா என்று கதறினால் சொர்க்கவாசல் திறக்காது.

சொர்க்கத்தை காணவேண்டும் என்றால் இரண்டே இரண்டு வழிதான்
ஒன்று - பிறிதொரு உயிருக்கு செயலாலோ மனதாலோ துன்பம் தராமல் இருப்பது
இரண்டு - துன்பப்படும் உயிர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்வது
வேதாத்திரி மகரிஷி எனும் பெரும் ஞானியின் இரண்டொழுக்க எளிய பண்பாடு இது.

கோயில்கள் கூடாது என்று சொல்லவில்லை. அது வியாபாரகளமாக மாறிவிடக்கூடாது என்பதே நமது விருப்பம்.

No comments:

Post a Comment

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...