Wednesday, January 8, 2020

காலையில் எழுந்திருக்கும் பொழுது எப்படி உணர்கிறீர்கள் ?

பிரபஞ்சம் பேசுகிறது - பகுதி 4
ராஜ்மோகன்


காலையில் எழுந்திருக்கும் பொழுது எப்படி 
உணர்கிறீர்கள் ?


உங்களின் உடல் மற்றும் மனம் எப்படி இருக்கிறது ?


என் மனம் முழுவதும் உற்சாகமாக இருக்கிறது. 


ஆஹா ! இன்று ஒரு புதிய நாளை தரிசிக்க இருக்கிறேன். இன்று என் வாழ்வில் என்னவெல்லாம் நிகழப்போகிறது என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் என்னுள் பொங்கி எழுகிறது என்ற உற்சாக நிலையை உணர்கிறீர்களா ? அல்லது ஓவ்வொரு நாளும் எழுந்திருக்கும் பொழுது உங்கள் மனதில் பலவிதமான கவலைகள் அல்லது அச்சம் படர்ந்திருக்கிறதா ? உடலில் வலியும் சோர்வும் மிஞ்சுகிறதா ? 


காலையில் எழுந்திருக்கும் பொழுது உடலும் மனமும் உற்சாகமாக இருக்கிறது எனில் நீங்கள் ஒரு சூப்பர் பவர். அப்படி இல்லாமல் உடலும் மனமும் சோர்ந்து அல்லது மனம் கொஞ்சம் படபடப்பு மிஞ்சும் பரபரப்புடன் இருந்தால்...நீங்க அவசியம் கவனிக்கவேண்டிய ஒன்று. இங்கு பிரபஞ்சம் சொல்லும் செய்தி. நீயும் நானும் இணைப்பில் இல்லை…


இன்றைய தேதியில்  அனைவருக்கும் உடற்பயிற்சி மற்றும் மனப்பயிற்சி எனும் தியானம் குறித்த விழிப்புணர்வு இருக்கிறது. ஆனால் அதை  ஒழுங்காக செய்கிறோமா ? இல்லையா என்பது தான் கேள்வி ?


எத்தனையோ உடற்பயிற்சி முறைகள் இருக்கின்றன. விதவிதமான தியான முறைகள் இருக்கின்றன. இது தவிர தினம்தோறும் புதுப்புது பெயரில் இத்தகைய வாழ்வியல் மையங்களும் குருமார்களும் முளைத்துகொண்டே இருக்கிறார்கள். எது சரி ? எது தவறு ? என்பதை எப்படி அடையாளம் காண்பது.


இது மிகவும் எளிமையானது. எல்லா நதிகளும் கடலை நோக்கிதான் செல்கின்றன என்பது போல எல்லா பயிற்சிகளும் உடல் நலம் மற்றும் மனநலன் என்ற பெயரால்தான் வழங்கப்படுகின்றன.


உடல் நலம் என்பது உடல்  இயக்கம். எந்த நிலையிலும் உடல் உற்சாகமுடன் முழுமையான சக்தியுடன் இயங்கவேண்டும். அதாவது நீங்கள் அதிகாலை எழுந்திருக்கும் பொழுது  எரிபொருள் நிரப்பபட்ட ராக்கெட் போல் உங்கள் உடல் கிண்ணென்று இருக்கவேண்டும்.


மனம் எப்பொழுதும் காற்றில் பறக்கும் இறகுபோல் நுண்ணியநிலையில் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் மனதை எதில் செலுத்துகிறீர்களோ அதனை ஈர்க்க முடியும்.


சரி எதை கொண்டு இதனை அளவிடுவது.
உடல் உற்சாகமாக இருக்க உடலில் இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் மற்றும் பிரபஞ்ச இயக்கத்தை நம்முடன் இணைப்பில் வைத்திருக்கும் சக்தி ஓட்டம், அதாவது உயிரின் ஓட்டம் எப்பொழுதும் நிரம்பி வழியவேண்டும்.


உடற்பயிற்சி என்றால் ஜிம்முக்கு சென்று பவுண்ட் கணக்கில் வெயிட் தூக்கவேண்டும் என்பதில்லை. நீங்கள் ஆண் அழகனாக காட்டிகொள்ள விரும்பினால் செல்லுங்கள். அதே நேரம் மணிக்கணக்கில் நடக்கவேண்டும் என்பதும் இல்லை. யோகா என்பது ஒரு சிறப்பான பயிற்சி .ஆனால் இந்த இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம் , காற்றோட்டம்  இம்மூன்றும் சமன்படுத்த கூடிய வகையில் கவனம் வைத்து பயிற்சிகளை செய்யாமல் நானும் யோகா செய்கிறேன் என்று செய்தால் அதிலும் ஒரு பலனும் இல்லை. நீங்கள் சும்மா பேருக்கு கையை காலை அசைத்து சர்க்கஸ் காட்டுகிறீர்கள் அவ்வளவுதான்.


இன்று உடற்பயிற்சி செய்பவர்களையும் நடைபயிற்சி செய்பவர்களையும் நாம் பார்க்கிறோம். காதில் ஒரு ஹெட்போனை மாட்டிக்கொண்டு அல்லது கையில் மொபைல் போனில் எதையோ நோண்டிகொண்டே செய்கிறார்கள். இப்படி செய்துவிட்டு நேராக அருகில் இருக்கும் டீ கடைக்கோ சிற்றுண்டி விடுதிக்கோ சென்று சர்க்கரை பொங்க காபியும் வடை பஜ்ஜியும் சாப்பிட்டு வீட்டிற்கு செல்கிறார்கள். சென்னையின் பல பூங்காக்கள் வாசலில் இதனை நாம் மிக சகஜமாக பார்க்கலாம். நிச்சயம் சொல்கிறேன் இப்படி செய்வதால் நீங்கள் உங்கள் உடல்நலனை வலுப்படுத்திகொள்ளவில்லை. மாறாக மேலும் மேலும் பலவீனமான சூழலுக்கு தள்ளுகிறீர்கள். 


நீங்கள் நடைபயிலும் பொழுதும் உடற்பயிற்சிகள் செய்யும் பொழுதும்  ஒவ்வொரு அசைவின் போதும் உங்கள் கவனம் முழுவதும் உங்கள் உடலில் இருக்கவேண்டும். அப்பொழுது மட்டுமே அது முறையாக செயல்படும். 


அதாவது உங்களுக்கு பிடித்த எந்தவொரு உடற்பயிற்சியையும் நீங்கள் செய்யலாம். அப்படி செய்யும் பொழுது மூன்று விஷயங்களை ஒருங்கிணைக்கவேண்டும்.
உங்கள் மூச்சு
உங்கள் உடலியக்கம்
உங்கள் மனம் அதில் மட்டுமே லயித்து இருப்பது.


இப்படி செய்வதின் மூலம் மட்டுமே ஆற்றலை உடலில் உருவாக்க இயலும்.நமது உடலில் நிகழும் ஒவ்வொரு செயலும் நமது சக்தியை கூட்டும். அதற்கு விழிப்புநிலை அவசியம். அதாவது ஒவ்வொரு இயக்கத்தையும் உங்கள் கட்டுப்பாட்டில் கண்காணிப்பில் வைத்து செய்தால் அந்த அபரீதமான ஆற்றல் உடலில் பெருகுவதை கண்கூடாக காணலாம்.அதே நேரம் முறையாக செய்யாத ஒவ்வொரு செயலும் நம் உடலில் உள்ள சக்தியை கரைக்கும். அது யோகாவாக இருந்தாலும் கூட.
 தொடர்ந்து தொலைகாட்சியை பார்த்துவிட்டு அதனை அணைக்கும் பொழுதும் , ஹெட்போனில் பாட்டுக்கேட்டுகொண்டிருக்கும் பொழுதும் சில நேரங்களில் தூக்கம் வருவதும் உடல் சோர்வாக தெரிவதும் இந்த சக்தி வீணாவதால்தான். நீங்கள் செய்யும் எந்த ஒரு செயலும் சக்தியை கூட்டிகொண்டே இருக்கவேண்டும்.
இப்படி எதிலும் கவனம் வைத்து இயங்க தொடங்கினால் நீங்கள் செய்யும் செயலின் மூலம் வெளியாகும் சக்தியை ஈடு செய்யும் வகையில் தானே உங்கள் உடல் சக்தியை உற்பத்தி செய்துகொண்டே இருக்கும் . சிறிது சோர்வு தட்டினாலும் சில நிமிங்கள் கண்களை மூடி இந்த உடலை கவனித்தாலே போதும் மீண்டும் சக்தி நிரம்பிவிடும்.
கவனிப்பது என்பது மனதை ஒருமுகப்படுத்தி வைப்பது. இதைதான் தியானம் என்கிறார்கள். 
தியானம் என்ற ஒற்றைச் சொல் மாறி விதவிதமான தியானங்கள் வந்துவிட்டன. ஆல்பா தியானம், ஹிப்னோ மைண்ட் பவர், தீட்டா மெடிடேஷன், டெல்டா மெடிடேஷன் இன்னும் புதுபுது பெயர்களில் பலவகைகளில். எல்லா நதிகளும் கடலுக்கு தான் செல்கின்றன என்பது போல் எல்லா தியானமுறைகளும் ஒன்றைதான் சொல்கின்றன . அது மன அலைச்சூழலை கட்டுபடுத்துதல். மேற்சொன்ன ஆல்பா, தீட்டா, டெல்டா மற்றும் பீட்டா எல்லாமே மன அலைச்சூழல்தான். உளவியல் மொழியில் இதனை நீங்கள் அளந்துபார்க்கலாம். EEG எனும் கருவி மூலம் நமது மன அலைச்சூழலை நம்மால் கண்டுபிடிக்கமுடியும். நமது மன அலைச்சூழல் ஆல்பா நிலையிலோ அதற்கு குறைவான தீட்டா மற்றும் டெல்டா நிலையிலோ இருக்கும் பொழுது மன அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். மேற்கண்ட பயிற்சிகளை நீங்கள் செய்யும் பொழுது அவர்கள் இதனை தான் கற்றுத்தருகிறார்கள். பயிற்சிகளுக்கு செல்லாமல் நம்மால் நமது மன  அலைச்சூழலை குறைக்க முடியாதா ? நிச்சயம் முடியும்.


மேற்கண்ட தியானங்களைவிட ஆக சிறந்த தியானம் ஒன்று உள்ளது. அது மெளனம்.


மிகவும் அமைதியாக தொந்தரவு ஏதுமில்லாத இரைச்சல் அற்ற  ஒரு இடத்தில் சில மணிநேரங்கள் அல்லது மாதத்தில் ஒருநாள் மெளனமாக இருந்து பாருங்கள்.  அய்யோ ! என்ன பேசாமல் இருப்பதா ? என்று நீங்கள் அலறுவது கேட்கிறது.


ஆம் ! நீங்கள் பேசாமல் இருக்கும் பொழுது உங்கள் மனம் பேசும். அதாவது எண்ணங்களாக எழும். ஒவ்வொன்றாக அதனை எழுதுங்கள். உங்களுக்கே தெரியும் அதில் பலன் தரும் எண்ணங்கள் என்னென்ன ? உங்கள் வாழ்க்கைக்கு உதவாத எண்ணங்கள் என்னென்ன ? என்பதை. உதவாத எண்ணங்களை வைத்துகொண்டு நாம் என்ன செய்யப்போகிறோம். அதனை  அழித்துவிட்டு நல்ல எண்ணங்களை மட்டும் நம்முள் வைத்துகொள்வோம்.


சுருக்கமாக சொன்னால்


நீங்கள் செய்யும் உடற்பயிற்சி இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம்,காற்றோட்டத்தை சீர்படுத்தி உடலில் பிரபஞ்ச ஆற்றலான உயிர்சக்தியை அதிகரிக்கசெய்யவேண்டும்.
நீங்கள் செய்யும் மனப்பயிற்சி உங்கள் மன அலைச்சூழலை எப்பொழுதும் ஆல்பா நிலையிலேயே அல்லது அதற்கு குறைந்த மன அலைச்சூழலிலோ வைத்திருக்கவேண்டும்.


பொதுவாக உளவியலில் சொல்லப்படும் கருத்து ஒன்று உண்டு. நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டாலும் மகிழ்ச்சியாக இருப்பதை போல காட்டிக்கொள்ளுங்கள். உண்மையான மகிழ்ச்சி உங்களை சூழ்ந்துகொள்ளும். 


உங்களில் உடலில் உற்சாகம் இல்லையெனினும் உற்சாகமாக இருப்பதாக காட்டிகொள்ளுங்கள் உற்சாகம் சூழ்ந்துகொள்ளும் என்பார்கள். 


இரண்டுமே தவறான நம்பிக்கைகள். நம்ம ஊரில் ஒரு அழகான பழமொழி உண்டு. "சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்" உங்களுக்குள் உண்மையான சக்தி இருந்தால் தான் அது வெளிப்படும். பாவனையில் மூலம் மட்டுமே வாழ்ந்துவிட முடியாது. நம்மிடம் என்ன குறை இருக்கிறது என்பதை கண்டுபிடித்து அதனை சரி செய்வதின் மூலமே எதற்கும் நிரந்தர தீர்வு தர முடியும். 


ஒருநாளில் இருபத்தி நான்கு மணிநேரம் நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதில் ஒரே ஒரு மணிநேரம் அதாவது உடற்பயிற்சிக்கு 30 நிமிடம் மனப்பயிற்சிக்கு 30 நிமிடம் ஒதுக்கினால் போதும் மீதமுள்ள 23 மணிநேரமும் சொர்க்கம்தான். இப்படி ஒவ்வொரு நாளும் பராமரித்துகொண்டால் பின்னர் அதுவே பழகி வாழ்க்கை முழுவதும் நிறைவும் பிரபஞ்ச இயக்கத்தின் இணைப்பும் எப்பொழுதும்  நம்முடன் இருந்துகொண்டே இருக்கும். நீங்கள் எண்ணியது எல்லாம் எண்ணியபடியே நடக்கும் . முயற்சித்து பாருங்கள்…


( பிரபஞ்சம் பேசும் )

No comments:

Post a Comment

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...