Wednesday, January 1, 2020

புத்தாண்டு உறுதிமொழிகள் எப்போது செயலுக்கு வரும் ?



சில வருடங்களுக்கு முன்பெல்லாம் புத்தாண்டு வரும் போது உள்ளுக்குள் ஒரு உற்சாகம் ஊற்றெடுக்க தொடங்கிவிடும். அங்கு இங்கு அலைந்து ஓசியில் ஒரு டைரியை வாங்கி அதில் இந்த ஆண்டுக்குள் இதையெல்லாம் சாதிக்கவேண்டும் என்று ஒரு பெரிய மளிகை லிஸ்டையே தயார் செய்துவிட்டு புத்தாண்டு அன்று இரவு அதனை திரும்ப திரும்ப படித்து உடலில் டானிக் ஏற்றிகொள்வது வழக்கம். 

ஜனவரி 2 ஆம் தேதி திரும்ப லேசாக பார்க்க தொடங்கி ஐந்து  பத்து நாட்களுக்கு பிறகு டைரியின் பக்கங்கள் காலியாக இருக்கும். நாம் தான் இப்படி செய்கிறோமா என்று சுற்றும் முற்றும் விசாரித்தால் நட்பும் உறவும் கூட இதையே செய்வதை கேட்ட பின்பு நாமும் அந்த ஆட்டுமந்தையில் ஒருவர் தான் என்று மனம் நமக்கு நாமே ஒரு ஆறுதல் சொல்லிக்கொள்ளும்.

ஏன் புத்தாண்டு உறுதிமொழி செயலுக்கு வருவதில்லை என்று கேட்டால் சோம்பேறித்தனம் என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம். அல்லது ஆர்வக்கோளாறினால் இப்படி எழுதிவிட்டு மறந்துபோவதாக இருக்கலாம். ஒன்றின் மீது உறுதியுடன் இருந்தால்தானே அது செயலுக்கு வரும். நாம் உணர்ச்சி வேகத்தில் எழுதிவிட்டு மறந்துபோனால் எப்படி செயலுக்கு வரும் என்று  பொதுவான ஒரு கேள்வி எழும். 

ஒன்று செயலுக்கு வருவது அதன் மீது உறுதிதன்மை மட்டும் முக்கிய காரணியாக இருப்பதில்லை. நீங்கள் விரும்பும் ஒன்றும் அது உங்களிடம் வந்தடையும் பாதையும் ஒரு நேர்கோட்டில் ஈர்ப்புவிதியின் கீழ் செயல்படவேண்டும். தொடர்ந்து நினைக்க வேண்டும் என்பதில்லை. ஒன்றை வலிமையாக நினைத்தால் மட்டும் கூட போது அது இந்த ஈர்ப்பு கோட்டில் வந்து நின்று விட்டால் அப்படியே ஈர்த்து உங்களிடம் சேர்ப்பித்து விடும். ஆனால் அதன் Frequency என்ன என்பதும் அது எப்போது செயல்படும் என்பதும் கொஞ்சம் புதிரான ஒன்றுதான்.

ஆனால் இது போன்ற முக்கிய தினங்களில் நினைக்கும் காரியம் கைகூட இந்த முக்கிய தினங்கள் உதவுகின்றனவா என்றால் நிச்சயம் உதவுகின்றன. புத்தாண்டு மட்டுமல்ல தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரமலான் எந்த ஒரு பெரிய பண்டிகையாக இருக்கட்டும். அந்த நாளில் புவியை சுற்றி விசேஷ ஈர்ப்பாற்றல் உருவாகின்றன. அதாவது உலகின் மக்கள் தொகையில் பெரும்பகுதி ஒரே சிந்தனையுடன் மன அலைச்சூழல் நுண்ணிய நிலையில் எண்ணுகிறது. அது பூமியை சுற்றி ஒரு காந்தம் போல் வலிமையாக சூழ்ந்திருக்கும். அந்த நேரத்தில் நாம் போடும் எண்ணம் மிக வலிமையாக பிரபஞ்சத்தில் பதியும். அது சரியான ஈர்ப்புக்கோட்டில் சென்று சேர்ந்துவிட்டால் ஒத்த சிந்தனையுடைய அல்லது நீங்கள் சிந்திக்கும் தொடர்புடைய அந்த ஒன்றை உங்களிடம் இழுத்துவிட்டு விடும்.

இது செயல்பட மனம் நுண்ணிய நிலைக்கு செல்ல வேண்டும். அதாவது புறத்தின் செயல்பாடு குறைந்து அகத்தின் செயல்பாடு வலுப்பெறவேண்டும். ஆனால் இந்த கொண்டாட்டங்களின் போது நாம் என்ன செய்கிறோம் உச்சக்கட்ட கொண்டாட்ட நிலைக்கு செல்கிறோம். அதாவது உற்சாகம் பெறுகிறோம் என்று நாம் செய்யும் ஆர்பாட்டங்கள் நமது உடலில் சக்தியை கரைத்து  வெளியேற்றுகிறது. புறத்தில் வீணாகும் சக்தி அகத்தின் வீச்சையும் குறைக்கிறது. அதனால் நீங்கள் புத்தாண்டு உறுதிமொழி என்று எதை வலிமையாக நினைத்து முடிவெடுத்தாலும் அது அந்த காந்த அலைவீச்சு வரை சென்றடையாமல் கரைந்துவிடுகிறது. அடுத்தடுத்த நாட்களில் அதன் வலிமை குறைந்து உங்களின் சிந்தனை ஓட்டத்தில் இருந்தே விலகி விடுகிறது. 

     உங்கள் உறுதிமொழி வலிமையுடன் செயல்பட நீங்கள் என்ன செய்யவேண்டும். புறவுலக கொண்டாட்டங்களை விட அகத்தின் வலிமைக்கு உறுதிசேர்க்கவேண்டும். அதாவது புவியை ஒருமித்த அலைச்சூழல் அதிகரிக்கும் போது உங்கள் வலுவான எண்ணம் அதில் ஊடுருவும் விதமாக செயல்பட வைக்க அதற்கான யுக்தியை கடைபிடிக்கவேண்டும்.

     கோயில் செல்வது, மந்திரம் உச்சரிப்பது, பிரார்த்தனை செய்வது, ஆசிவாங்குவது, வாழ்த்துவது இதனை எல்லாவற்றையும் விட வலிமையானது மெளனம். நீங்கள் மெளனமாக இருக்கும் போது உங்கள் எண்ணம் வலிமையாக செயல்படும். அதாவது ஊரடங்கி உலகமே மிக அமைதியாக இருக்கும் அந்த நேரத்த்தில் எண்ணம் வலிமையாக பிரபஞ்ச சக்தியோடு கலக்கும்.குறிப்பாக அதிகாலை மூன்று முதல் ஆறு மணிவரை இது மிக மிக சக்தியுடன் இருக்கும்.

சிறப்பு தினங்களில் நாம் கொண்டாட இருபத்தி நான்கு மணிநேரங்கள் இருக்கின்றன. அதில் ஒரு மூன்று மணிநேரம் மெளனத்திற்கும் எண்ணத்தை வலிமையாக்குவதற்கும் பயன்படுத்துவோம். நினைத்ததை நடத்திகொள்வோம். ஒன்று நிறைவேற ஒவ்வொருமுறையும் நினைக்கவேண்டும் என்பதல்ல. ஒரே முறை சரியாக நினைத்தால் போதும் !

No comments:

Post a Comment

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...