Monday, January 13, 2020

சர்வதேச திரைப்படவிழாவின் பொன்விழா நாயகன் ரஜினி


- ராஜ்மோகன்
20/11/2019 ல் எழுதி கல்கி வார இதழில் வெளியான கட்டுரை


சிவாஜிராவ் கெய்க்வாட்  என்ற இளைஞன் ரஜினிகாந்த்  என்று பெயர் மாற்றி இந்திய சினிமாவின் காந்தமாக மையம்கொள்ளத் தொடங்கி இவ்வருடத்துடன் 44 வருடங்கள் நிறைவடைகின்றன. வரும் டிசம்பர் 12 ஆம் தேதி 68 வயதை தொடும் ரஜினிகாந்த் தனது வாழ்நாளில் 44 வருடங்களை கலைத்துறைக்காக அர்பணித்து இருக்கிறார். இந்தியாவில் இன்றும் சூப்பர் ஸ்டார் என்றாலும் வசூல் சக்கரவர்த்தி என்றாலும் அது ரஜினிகாந்த மட்டுமே.
ஆறு முறை தமிழக அரசின் விருது, கலைமாமணி விருது, இந்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன், பத்மவிபூஷன் ஆகிய  விருதுகளை பெற்றுள்ள ரஜினிக்கு இந்திய சர்வதேச திரைப்பட விழா 2014 ஆம் ஆண்டு நூற்றாண்டு நாயகன் விருதும் தந்து கவுரவித்துள்ளது. இவ்வாண்டு அதே இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் பொன்விழா கொண்டாடவுள்ள நிலையில்  ரஜினிக்கு " பொன்விழா நாயகன் விருதும் " அறிவித்துள்ளது விழா கமிட்டி. இந்த அறிவிப்பு ஒருபுறம் மகிழ்ச்சியை அளித்தாலும் இன்னொருபுறம் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. தமிழகத்தில் தாமரையை மலரசெய்தே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிகொண்டு செயல்பட்டு வரும் பாஜக அரசு தமிழர்களை குளிர்விக்கவும், ரஜினி ரசிகர்களை கவர்ந்து கால் பதிக்கவும், மறைமுகமாக ரஜினிகாந்தை பாஜக பக்கம் இழுக்கவும் வீசும் வலை என்ற கிசுகிசுப்பு கொஞ்சம் சத்தமாகவே கேட்கிறது. இந்த சர்ச்சையை கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு பார்த்தால் ரஜினிக்கு இவ்விருது வழங்கப்படுவது மிகவும் பொருத்தமான ஒன்றுதான்.
  ரஜினியின் திரைப்பயணம் என்பது அத்தனை சுலபமான ஒன்றல்ல. ஒன்பது வயதில் தாயை இழந்து பாசத்திற்காக ஏங்கி, என்ன படிப்பது என்று தெரியாமல் தட்டி தடுமாறி படித்து , படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் கார்பெண்டர், பெயிண்டர் என்று கிடைத்தபணியை செய்து பொழுதுபோக்குக்காக நாடகம் போட்டு, பின்னர் பஸ் கண்டக்டர் ஆகி இப்படி அவரின் இருபது வயதிற்குள்ளாகவே அறுபது வயதின் அனுபவமும் துன்பத்தையும் அனுபவித்தவர் ரஜினிகாந்த். இந்த நிலையிலும் அவருக்கு கைகொடுத்தது அவரின் ஆன்மீக நம்பிக்கை. அவர் நம்பும் கடவுள் புண்ணியத்தால் சென்னை திரைப்பட பயிற்சி கல்லூரி பற்றி அறிந்து , வீட்டின் எதிர்ப்பை மீறி நண்பன் ராஜ்பகதூரின் உதவியும் 1973 ல் நடிப்பு பயிற்சியில் சேர்ந்து 1975ல் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் அவர்களின் பார்வையில் பட்டு சிறு வேடத்தில் அறிமுகமாகி இந்த 44 வருட திரைவாழ்க்கைப் பயணத்தில் சினிமாவின் தொழில்நுட்பத்தோடு போட்டிபோட்டுகொண்டு வளர்ந்தவர் ரஜினிகாந்த். 
கருப்புவெள்ளை காலம் முதல் இன்றை நவீன தொழில்நுட்பமான 3D நுட்பம் வரை எல்லாவற்றிலும் கொண்டாடப்பட்ட ஒரே நாயகன் ரஜினிதான். இந்தியா மட்டுமல்ல சீனா, ஜப்பான் என்று தமிழ் மொழி தெரியாத நாட்டிலும் டப் செய்யப்படாமல் ஓடும் ஒரு இந்திய நடிகனின் படம் ஒன்று உண்டு என்றால் அது ரஜின்காந்தின் படமாகதான் இருக்கும். இன்று இந்திய சினிமா சந்தை உலகளாவிய ஹாலிவுட் சந்தைக்கு நிகராக உயர்ந்துகொண்டிருக்கிறது, அதாவது ஒன்பது ஏரியாவாக பிரித்து நூறு பிரிண்ட் போட்டு நூறு நாட்கள் ஓட்டும் காலம் மலையேறி ஒரே நாளில் பத்தாயிரம் பதினைந்தாயிரம் பிரிண்ட் போட்டு மூன்றே நாட்களில் நூறு கோடியை வசூலிக்கும் பாக்ஸ் ஆப் ஹிட் வியூகத்தை இந்திய சந்தையில் தொடங்கிவைத்தவரும் ரஜினிகாந்த மட்டும். " யானை விழுந்தா எந்திரிக்க நேரம் ஆனால் குதிரை விழுந்தா உடனே எந்திரிச்சுடும் " ரஜினிகாந்த் அடிக்கடி குறிப்பிடும் உவமை. இது உண்மையில் அவருக்கு பொருந்தகூடியது. இடையில் சில சறுக்கல்கள் இருந்தாலும் ரஜினி ஒவ்வொரு முறை எழும் போதும்  புதிய உச்சத்திற்கு சென்றுகொண்டிருக்கிறார். 
சிறந்த நடிகனாக எல்லாவிதமான பரிமாணங்களையும் வெளிப்படுத்த கூடிய இவரை சுற்று 1996 முதல் சூழ்ந்துள்ள அரசியல் பிம்பங்கள் இன்றும் புரியாத புதிராக இருக்கின்றன. நான் வருவேன் ஆனால் எப்ப வருவேன் என்பது தெரியாது என்ற இவரின் அரசியல் நிலை ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 23 வருடங்களாக தமிழர்களையும் அவரின் ரசிகர்களையும் தலையை பிய்த்துகொள்ள செய்துவருகிறது. அரசியலில் இப்படிப்பட்ட நிலையில் உள்ள இவரை வைத்துதான் பாஜக தமிழ்நாட்டில் தன்னை நிலைநிறுத்திகொள்ளப்பார்க்கிறது. 
ஆண்டுதோறும் ஒரு மூத்த கலைஞருக்கு இந்த விருதை கொடுப்பது வழக்கம். ஆனால் அதனை கணக்கில்கொண்டால் இந்தியாவில் ரஜினிக்கும் ஏன் அமிதாப்பிற்கும் மூத்தவர் கமலஹாசன் . களத்தூர் கண்ணமாவில் இருந்து கணக்கிட்டால் இது கமலுக்கு 60வது வருடம். அவரை ஏன் பாஜக கணக்கில் எடுக்கவில்லை என்பது சொல்லித்தெரியவேண்டியதல்ல.
கலை என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது.  அரசியலுக்கு அப்பாற்பட்டு ரஜினி இந்த விருதுக்கு தகுதியானவர்தான். எனினும் இதன் ஊடே அரசியல் இருப்பது உண்மையெனில் அது கலைக்கு நல்லதல்ல. அது ரஜினிகாந்திற்கே தர்மசங்கடத்தை உருவாக்கும்.

No comments:

Post a Comment

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...