Monday, January 13, 2020

உள்ளம் எனும் கோயில்

பிரபஞ்சம் பேசுகிறது - பகுதி 9
ராஜ்மோகன்

உள்ளம் எனும் கோயில்

அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றி.

இந்த தொடரை படித்துவிட்டு தங்களின் மகிழ்ச்சியையும் ஆதரவையும்   எங்களுடன் பகிர்ந்துகொள்ளும் வாசகர்கள் அனைவருக்கும் பணிவான வணக்கங்களும் நெஞ்சார்ந்த நன்றியும். கடந்த வாரம் ஒரு அன்னை கேட்டார் தம்பி ! உங்கள் தொடரை படிக்கும் போது உற்சாகமாக இருக்கிறது. ஆனால் அந்த பிரபஞ்ச சக்தியை எப்படி நம்மை வரவழைத்துக்கொள்வது என்பதுதான் குழப்பமாக  இருக்கிறது என்றார்.

பிரபஞ்சத்தை  எங்கிருந்தும் வரவழைக்கத் தேவையில்லை. ஏன் எனில் நீங்கள் பிரபஞ்சத்திற்குள் தான் இருக்கிறீர்கள். பிரபஞ்சமாக இருப்பது நீங்கள் தான் என்று தெளிவுபடுத்தினேன். ஆனால் என்னால் உணரமுடியவில்லையே என்ற ஆதங்கத்தில் உள்ள அவரை போன்றவர்களுக்கு தான் இப்போதைய விளக்கம்.

நமக்குள் ஒரு வெற்றிடம் இருந்தால் மட்டுமே நம்மால் பிரபஞ்சத்தை உணரமுடியும் என்பதை பார்த்தோம் . நம்மை பாதிக்கும் பல வாய்ப்புகளை நாமே ஏற்படுத்திகொள்கிறோம். நம்முள் ஏற்படும் பேராசை, இனம் புரியாத கோபம், ஏதாவது ஒன்றின் மீது தீவிரமான விருப்பம்,நம்மை உயர்த்தி நினைத்துகொண்டு பிறரை தாழ்த்தி மதிப்பிடுவது அல்லது நம்மை தாழ்த்தி நினைத்துகொண்டு பிறரை உயர்வாக நினைப்பது, தெரிந்தோ தெரியாமலோ செய்த ஒரு செயலை நினைத்து ஒருவரை பழிவாங்கவேண்டும் என்று சதா நேரமும் நினைத்துக்கொண்டிருப்பது, இயற்கைக்கு முரணான பாலியல் வேட்கைகள் ,நிறைவேறாத ஆசைகள், நடக்கவே வாய்ப்பில்லாத ஒன்றினை நினைத்துகொண்டு காலம் கடத்துவது இப்படி பெரும் பட்டியலை சொல்லிக்கொண்டே செல்ல முடியும். இதில் ஒன்றோ பலவோ இணைந்து சேர்ந்து சேர்ந்து வலிமையடையும் போது அது மன அழுத்தமாக உருவெடுக்கிறது.
                        
நாம் முன்பே சொன்னது போல் இதுபோன்ற நெகடிவ் எண்ணங்களின் பட்டியல் ஒன்றை தயார் செய்து இதில் எவையெல்லாம் உங்களுக்கு இருக்கிறது என்று டிக் செய்யுங்கள். இதனை உடனடியாக விட்டுவிட இதிலிருந்து விடுபட என்ன செய்யலாம் என்று முடிவெடுத்து அந்த வினாடியில் அதிலிருந்து வெளியேறுங்கள். இவற்றை பட்டியலிட்டு இவற்றையெல்லாம் விடப்போகிறேன் என்று அழித்துவிட்டாலே உங்கள் மனம் மிகவும் இலகுவான நிலைக்கு  வருவதை உணரமுடியும். 

உங்கள் மனம் ஒரு கோயிலை போன்று எப்பொழுதும் இருக்கவேண்டும். கோயில் என்பது ஒரு புனிதமான இடம். அது எப்பொழுதும் தூய்மையுடனும் ஆற்றலுடனும் இருக்கதானே ஆசைப்படுவோம்.கோயிலின் கருவறையை இருட்டில் இருக்க விடுவோமா ? அங்கே ஒரு வெளிச்சம் பாயவேண்டும் என்பதற்காக விளக்கு ஏற்றிவைக்கிறோம் அல்லவா ?

நமது ஒவ்வொருவரின் உள்ளமும் கோயில்தான். அங்கேயும் இதைதானே கடைபிடிக்கவேண்டும். உள்ளத்தை நீங்கள் கோயிலாக கருத தொடங்கினால் போதும் உங்கள் எண்ணத்தில் எழுதும் வேண்டாத பதிவுகள் படிபடியாக கரைந்துவிடும். தேவையற்ற கவலைகளை அப்புறப்படுத்தினால் உள்ளொளி தானாக ஒளிரத்துவங்கும்.



நாம் விரும்பும் ஒன்று கிடைக்கவில்லையெனில் கவலை ஏற்படுகிறது. அந்த விருப்பதின் மீது மிகுந்த ஏதிர்பார்ப்பு வைத்திருந்தீர்கள் எனில் அந்த ஏமாற்றம் மன அழுத்தத்தை தருகிறது. 

நீங்கள் எதிர்பாராத ஒன்று உங்கள் வாழ்க்கையில் நடைபெறும் பொழுது அதனை எதிர்கொள்ளும் வலிமை மனதிற்கு இல்லையெனில் கவலையும் மன அழுத்தமும் ஏற்படுகிறது

உங்களுக்கு பிரியமான ஒன்று உங்களிடம் இருந்து பிரியும் போதோ அல்லது இல்லாமல் போகும் பொழுதும் அது ஏற்படுத்தும் வெற்றிடம் ஒரு அழுத்தத்தை உருவாக்குகிறது.

சில செயல்களில் வெளியில் இருந்து தரப்படும் கூடுதல் அழுத்தம் , எதிர்பார்ப்பு, அதனை பூர்த்தி செய்யவேண்டுமே என்ற யோசனை பெருகி அதுவும் மன அழுத்தத்திற்கு காரணமாகிவிடுகிறது.

மன அழுத்தத்திற்கான சூழல்கள் , காரணங்கள் பல அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் அவை இரண்டே இரண்டு விஷயத்தில் அடங்கிவிடும்

எதிர்பார்ப்பு மற்றும் ஏமாற்றம் . இதனால் நிகழ்வது மன அழுத்தம். பிரபஞ்சத்தில் ஏற்படும் மாற்றங்களினால் அதாவது கிரகங்களின் நகர்வினால் அதில் இருந்து வரும் அலைவீச்சு உங்கள் உடலோடு தொடர்புகொண்டு அது ஏற்படுத்தும் பாதிப்பினாலும் மன அலை சூழல் மாறி கவலையும் அழுத்தமும் ஏற்படுகிறது.

எது எப்படி இருந்தாலும் நிகழ்வுகள் எத்தனை வகையில் மாறி மாறி வந்தாலும் ஒரே இடத்தை தான் அது பாதிக்கிறது. அது மனம். மனதை செம்மையாக்கிகொண்டால் எந்த பாதிப்பும் நம்மை அண்டாது.

மனம் உறுதிபெற தியானம் இருக்கிறதே ஆனால் அதிக மன அழுத்தத்தில் இருப்பவர்களால் எப்படி தியானம் செய்யமுடியும் ? 

கொஞ்சம் பயிற்சி ! கொஞ்சம் முயற்சி ! இது இருந்தால் சுலபத்தில் நம்மால் மன அழுத்தத்தில் இருந்து விடுபடமுடியும்.

Attachment    மற்றும் Detachment நுட்பத்தை தெரிந்தவர்கள் எளிதில் மன அழுத்ததிற்குள் செல்ல மாட்டார்கள்

உங்களின் கவலைகளின்  பட்டியலை வகைபடுத்துங்கள்  . அதில் இரண்டு வகை இருக்கும் . ஒன்று உங்களால் கட்டுபடுத்த முடிந்த பிரச்சனைகள் ஒருவகை. உங்களால் கட்டுபடுத்த முடியாத இயற்கையினால் மட்டுமே தீர்க்க வேண்டிய பிரச்சனை இன்னொரு வகை. 

இன்று டயாபடிஸ் என்கிற சர்க்கரை நோய் மிகவும் சாதாரணமாகிவிட்டது. தங்களுக்கு சர்க்கரை என்பது பெருமைப்படும் ஒரு கூட்டம் ஒருபுறம். அய்யோ....! சர்க்கரை வந்துவிட்டதே என்று அலறும் கூட்டம் இன்னொருபுறம். இந்த அலறும் கூட்டம் மன அழுத்தத்தை தனக்குள் விதைத்துகொள்ளும் வகை. இந்த வகை மன அழுத்தத்தை தங்களுக்குள் அதிகமாக்கிகொள்வதுடன் தங்களைவிட எளியவன் என்று அவர்கள் கருதும் நபர்களிடம் தங்களின் அழுத்தத்தை காட்டி அங்கும் தங்கள் மன அழுத்தத்தை காண்பிப்பார்கள். பெரும்பாலும் அலுவலகங்களில் இது நிகழும். மேலதிகாரி தங்களின் கீழ் பணிபுரியும் பணியாளர்களிடம் சதா நேரமும் எரிச்சலாக காண்பித்துகொள்வதின் மறைமுக காரணம் அவருக்குள் ஏதேனும் உடல் மன உபாதைகள் இருக்கும் காரணத்தினால் கூட இருக்கும்.
      ஆனால் உண்மை என்னவெனில் இந்த சர்க்கரை வியாதியை அவர்களால் கட்டுபடுத்த முடியும். இதற்கு அவர்கள் அதிகம் கவலைப்பட தேவையில்லை. கவலையே நிலைமையை மோசமாக்கும். ஆற அமர அமர்ந்து யோசித்தால் உணவு பழக்கம், உடற்பயிற்சி, நல்ல உணவு, தேவைப்பட்டால் கொஞ்சம் மருந்து மாத்திரைகள். உடலின் செயல்பாடு மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடும். 

சில நோய்கள் தீர்க்கமுடியாத நோய்களாக இருக்கும் பட்சத்தில் என்ன செய்வது. அதன் பின்புலனை புரிந்துகொண்டு மனோரீதியாக நம்மை வலிமைப்படுத்திகொள்ளவேண்டும். கிரிக்கெட்டர் யுவராஜ் சிங் பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். 2011 ஆம் ஆண்டு அவரின்  முப்பதாவது வயதில் அதாவது மிக மிக இளம் வயதில் அவருக்கு கேன்சர் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டது.  வழக்கமாக இது போன்ற நோய்கள் தங்களுக்கு வந்துவிட்டது என்று ஒருவருக்கு தெரிந்தவுடனேயே அவர் மனோரீதியாக சோர்ந்துவிடுவார். அதாவது  உடலின் சக்தி நோயால் ஐம்பது சதவீதம் கரைகிறது எனில் அது குறித்த அச்சத்தினால் மீதமுள்ள சக்தியும் கரைந்து மேலும் பலவீனமாக்கிவிடும்.

யுவராஜ் சிங்கிற்கும் அந்த நிலை ஒரு சில மணிநேரங்கள் அல்லது சில நாட்கள் இப்படி ஏற்பட்டிருக்க கூடும். ஆனால் கை தேர்ந்த விளையாட்டு வீரரான அவர் அமைதியாக சிந்தித்தார் .நோயால் பலவீனப்பட்ட உடலுக்கு மனோதிடத்தினால் ஆற்றல் கொடுத்துகொண்டே இருந்தார். ஒருபுறம் நோய்க்கான சிகிச்சை, இன்னொருபுறம் மனோதிடம் . மனோதிடம் என்பது அளப்பரிய ஒன்று அது உடலில்  அணுக்கள்  நிலையில் Cell அளவில் செயல்படக்கூடியது. அதாவது ஒவ்வொரு செல்களிலும் Electron, Proton, Neutron என்ற கூறுகள் இருக்கின்றன . இதில் ஏற்படும் காந்த சுழற்சியினால் உடலுக்கு வேண்டிய  ஆற்றல் உற்பத்தியாகிறது. ஒருவர் நோய்வாய்ப்படும் போது ஒரு குறிப்பிட்ட உறுப்பினுடைய செல்களோ அல்லது குறிப்பிட்ட உடல் பகுதியின் செல்களோ பாதிக்கப்பட்டு அதில் இந்த ஆற்றல் தடைபடுவதால் அது நோயாக முற்றுகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். நமது உடலில் தினந்தோறும் கோடிக்கணக்கான  செல்கள் கரைகின்றன அதே நேரம் உற்பத்தியாகின்றன. இந்த இயற்கை சுழற்சியில் பாதிப்பு ஏற்படுவதுதான் நோய். மன ஆற்றலை அதிகரிக்கும் போது இப்படி பாதிக்கப்பட்ட செல்கள் மீண்டும் ஆற்றலுடன் புதுப்பிக்கப்படுகிறது என்கிறார்  ஜாய்ஸ் வைட்லே ஹவுக்கீஸ். இவர் ஒரு மரபியல் ஆராய்ச்சியாளர். தனது சொந்த வாழ்க்கையில் உடல் அளவில் பாதிக்கப்பட்டு அவர் மீண்ட கதையை Cell Level Healing என்றொரு நூலாக எழுதியுள்ளார். அதில் மனவலிமை எப்படி நோய் தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அழகாக விவரித்துள்ளார். நமது நெகடிவ் பதிவுகளில் இருந்து வெளியேறு வழிமுறைகளையும்  எப்படி செல் அளவில் நமது ஆற்றலை அதிகரித்துகொள்வது என்பதையும் இனி வரும் வாரங்களில் பார்ப்போம்

                                          ( பிரபஞ்சம் பேசும் )

No comments:

Post a Comment

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...