Wednesday, January 8, 2020

உனக்கென பிறந்தது உனக்கேதான் !

பிரபஞ்சம் பேசுகிறது - பகுதி 5
ராஜ்மோகன்



பிரபஞ்சம் பற்றி இத்தனை நீட்டி முழக்கி எழுதுகிறீர்களே இந்த பிரபஞ்சத்தை உணர்வதால் என்ன நிகழப்போகிறது. இதனால் என்ன  கிடைக்கும் ?  
நாம் விரும்புவது எல்லாம் கிடைக்கும். அதைவிட உங்களுக்கு எது கிடைக்கவேண்டும் என்றிருக்கிறதோ அது எல்லாம் கிடைக்கும். 
“வெந்ததை தின்று நொந்து வாழ்கிறேன்” என்று கிராமத்தில் ஒரு சொலவாடை சொல்வார்கள். அதாவது ஏதோ பிறந்துவிட்டோம்  வாழ்கிறோம். ஏற்றுக்கொள்ள கூடிய வாதம்தான். ஆனால் நாம் நமக்கான வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறோமா ?

யோக அப்பியாசங்களில் ஒரு வாசகத்தை அடிக்கடி குறிப்பிடுவார்கள். Be Yourselves. அதாவது நீ நீயாக இரு !  எல்லாம் சரி....! நான் நானாக இருக்க நான் யார் என்று தெரியவேண்டும் அல்லவா ?

நாம் எடுக்கும் முடிவுகள் எல்லாம் சரியாக இருக்கும் என்று நாம் நினைக்கிறோம். அதற்கு சாட்சியாக எனது மனதுக்கு பிடித்ததை நான் செய்கிறேன் என்று நமக்கு நாமே ஆறுதல் சொல்லிக்கொள்கிறோம். 
அடுத்து வாழ்க்கை என்பது துன்பமும் இன்பமும் கலந்த நிகழ்வுதான் என்று நமக்கு பொருந்தாத ஒன்று நிகழும் போது அதனையும் அப்படியே ஏற்றுகொள்கிறோம். 
இதற்கெல்லாம் விதியே காரணம் என்றும் நாம் சொல்லிக்கொள்கிறோம். 
ஆனால் பிரபஞ்ச விதி இதனை சொல்லவில்லை. அமைதியும் முழுமையும் தான் பிரபஞ்சம் சொல்லும் விதி. 
அதாவது பிரபஞ்ச நியதியில் மகிழ்ச்சியும் துன்பமும் ஒரே நிலைதான். நீங்கள் மகிழ்ச்சியை தேடிச் சென்று அதனை அனுபவிக்கிறீர்கள் எனில் அதன் முடிவு துன்பத்தின் தொடக்கமாக இருக்கும். நீங்கள் துன்பத்தில் இருக்கிறீர்கள் எனில் அதன் முடிவு இன்பத்தின் துவக்கமாக இருக்கும். 
எனவே இன்பமும் துன்பமும் மாறாத ஒரு சமநிலையே அமைதியும் முழுமையும். இதில் உங்களுக்கான அமைதி நிலை என்ன என்பதை பிரபஞ்சம் உங்களுக்குள் நிகழ்த்தும் அதற்கான கூர்மையான நுண்ணறிவை உங்களுக்குள் தூண்டிவிடும். பிரபஞ்ச இணைப்போடு வாழும் பொழுது இதுவெல்லாம் நமக்கு சாதகமாக நடக்கும்.
நமக்கு அடிப்படையான நிறைவு இரண்டே இரண்டுதான் . ஒன்று புற தேவைகள். அதாவது பொருளாதார ரீதியான புறவாழ்வில் நமக்கானதை நாம் நிறைவேற்றிகொள்ளுதல். 
அடுத்து அகத்தேவை. அதாவது நமது ஆன்மா தேவைகளுக்கு நிறைவு தருவது. புறத்தேவைக்காக ஓடுகிறோம் சம்பாதிக்கிறோம். அகத்தேவைக்கு இறைவழிபாடு பயிற்சிகள் என அதையும் செய்துகொண்டிருக்கிறோம். ஆனால் இங்கு நுண்ணறிவு இன்றி செய்துகொண்டே இருந்தால் ஜென்மஜென்மாக இதையே தொடர்ந்து செய்துகொண்டிருக்கவேண்டும்.

இரண்டு நண்பர்களின் கதைகளை சொல்ல விரும்புகிறேன்.
ஒருவர் சாதரணமான இளைஞராக சென்னைக்கு வந்தவர். நல்ல வேலை கிடைத்து மனைவி குழந்தைகள் என்று செட்டிலானவுடன், வாடகை தரும் பணத்தில் புறநகரில் ஒரு வீடு வாங்கலாம் என்று முடிவெடுத்து அதன்படி ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்குகிறார். அப்பொழுது அதன் விலை பதினெட்டு லட்சம். சுறுசுறுப்பாக உழைத்து கடனை கட்டி எந்தவித சிரமமும் இன்றி வாழ்க்கையை தொடர்கிறார். நண்பருக்கு திடீரென்று வெளிநாட்டில் வேலை கிடைக்கிறது. குடும்பத்துடன் அங்கு செல்கிறார். நல்ல வருவாய் கொட்டுகிறது. எதில் முதலீடு செய்யலாம் என்று யோசிக்க, நண்பர்கள் யாரைப்பார்த்தாலும் எனக்கு அங்கு ஒரு பிளாட் இருக்கிறது. இங்கு ஒரு பிளாட் இருக்கிறது என்று சொல்லும் பொழுது இவருக்கு அவ்வாறு சொல்ல ஆசை . அடுத்தடுத்து இரண்டு பிளாட்டுகளை வாங்கி போடுகிறார். முன்பு பதினெட்டு லட்சத்திற்கு அவர் வாங்கிய பிளாட் இப்பொழுது அறுபத்தி ஐந்து லட்ச ரூபாய். நண்பருக்கு தனது முதலீடு பலமடங்கு பெருகியதில் பெரும் மகிழ்ச்சிதான். ஆனால் அதில் ஒரு பெருங்குறை. மூன்று பிளாட்டுகளை சேர்த்து அவரின் சொத்து மதிப்பு மூன்று கோடி தேறும். ஆனால் அதில் வாடகை மூலமாக வரும் வருவாய் மாதம் நாற்பதாயிரத்தை தாண்டுவதில்லை. தவிர வாடகைதாரர்கள் தரும்  பிரச்சனையை சமாளிக்க அதை இதை என்று ஏதாவது மராமத்து பார்த்த வகையில் வரும் வாடகையைவிட செலவு அதிகமாக இரண்டு வீடுகளை பூட்டியே வைத்திருக்கிறார். இன்றைய தேதிக்கும் இந்த மூன்று கோடி வங்கி சேமிப்பில் இருந்தால் இவர் வாடகையாக பெறும் தொகையைவிட பல மடங்கு வருவாய் தந்துகொண்டிருக்கும். மேனஜ்மெண்ட் படித்து நல்ல பணியில் இருக்கும் நண்பர் எப்பொழுது பேசினாலும் இதனை ஓரு புலம்பலாக வெளிப்படுத்துவார். எல்லோரும் செய்கிறார்கள் என்று நான் செய்ததால் இப்படி மாட்டிகொண்டேன். அடுத்து வேறு ஏதாவதில் முதலீடு செய்தால் ரிஸ்க் ஆகும் என்று ரியல் எஸ்டேட்டில் போட்டேன் என்று ஆனால் இதுவே ரிஸ்காகி விட்டது என்று வருத்தப்படுவார். சரி நல்ல விலைக்கு விற்று வேறு ஏதாவது செய்யலாமே என்று கேட்கலாம். இன்றுவரை அவரால் அந்த இடங்களை விற்க முடியவில்லை. 

இன்னொரு நண்பனின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் இது. படித்துவிட்டு பெங்களூருக்கு வேலைக்கு சென்றான். வார இறுதியானால் ஊருக்கு வந்து செல்வான். அப்பொழுது அவனுக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. மாதத்தில் குறைந்தபட்சம் எட்டு நாட்கள் சொந்த ஊரில் இருக்கிறோம். அப்பாவும் அம்மாவும் விவசாயிகள். நம்மை படிக்கவைக்க இருந்த நிலத்தை விற்றுவிட்டார்கள். நாம் ஏன் கொஞ்சம் நிலம் வாங்கி சின்னதாக விவசாயம் செய்யகூடாது. இந்த யோசனையை சொன்னவுடன் அம்மாவும் அப்பாவும் கடுமையாக எதிர்த்தார்கள். நீ காசு சேர்த்து பட்டணத்தில் வீடு வாங்கு. அது தான் எங்களுக்கு கவுரவம் என்றார்கள். நண்பனுக்கு அன்றைய நிலைமைக்கு வீடு வாங்க கடன் வாங்கினால் அதனை அடைத்து முடிக்க இருபத்தி ஐந்து வருடமாகும். அத்தனை காலம் கடனாளியாக இருக்க விரும்பவில்லை. ஆனால் அவன் ஒரு வருட சேமிப்பில் கிராமத்தில் சில ஏக்கர் நிலம் வாங்கலாம். எதிர்ப்பு தெரிவித்த அம்மா அப்பாவிடம் இங்கு நிலம் வாங்கி சேர்த்து பின்னர் விற்று மொத்த காசில் பெங்களூரில் வீடு வாங்கிவிடலாம் என்று சொல்ல அவர்களும் அரை மனதோடு ஏற்றுகொண்டார்கள். மூன்று ஆண்டுகளில் ஏழு ஏக்கர் அதாவது அவர் அப்பா பல ஆண்டுகளாக வைத்திருந்த பரம்பரை சொத்தைவிட இரண்டு ஏக்கர் கூடுதலாக வாங்கிவிட்டான். தவிர படித்த அவன் அறிவு அங்கு வேலை செய்தது. வேளாண்மைத்துறை , நவீன விவசாயம் என அனைவருடனும் தொடர்புகொண்டு மிகவும் நவீன முறையில் விவசாயத்தை திட்டமிட்டான். திங்கள் முதல் வெள்ளிவரை மென்பொருள் பணி . வெள்ளி சனி ஊரில் விவசாயம். ஒட்டுமொத்த நிலத்திலும் சிசிடிவி பொருத்தி பெங்களூரில் இருந்தே கண்காணிப்பது. அங்கிருந்தே மோட்டர் ஆன் செய்வது ஆப் செய்வது என்று இவன் செய்யும் மேஜிக் சக நண்பர்களை ஈர்க்க அவர்களும் இவனை போல வீக் எண்ட் பார்ட்டிகளை தவிர்த்துவிட்டு அவரவர் ஊரில் சின்ன நிலம் வாங்கி பொழுதுபோக்காக பண்ணையம் பார்க்க தொடங்கிவிட்டார்கள்.குடும்பம் குழந்தை என்ற ஆனபிறகு வார இறுதிநாட்கள் நல்ல இயற்கையான பொழுது போக்கு களமாக மாறிவிட்டன.கிராமத்து பொருளாதாரம் தக்கவைக்கப்பட்டு, வாரந்தோறும் இயற்கையான உணவு பொருட்களுடன் அவர்கள் நகரத்திற்கு திரும்புகிறார்கள்.  பதவியுயர்வும் சம்பள உயர்வும் வாழ்க்கைதுணையின் வருவாயும் சேர குறுகிய கால கடனில் வீடும் வாங்கி முழுவதும் அடைத்துவிட்டான். அவனின் ஒவ்வொரு முதலீடும் மிகவும் கவனமாக இருக்கும். வளருகின்ற துறையில் மட்டுமே அது இருக்கும். அவனை பார்க்கும் பொழுது எல்லாம் ஒரு புதிய விஷயத்தை பற்றி சிலாகித்து சொல்வான். அவனுடன் சில நிமிடங்கள் இருந்துவிட்டு வந்தாலே ஒரு பாஸிடிவ் சக்தி நம்முள் பொங்கும்.
இரண்டு நண்பர்கள் வாழ்க்கையும் சொல்லும் பாடம் என்ன ? 
நமது மனம் தான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. அந்த மனதில் ஏற்படும் எண்ணங்கள் நம்மை சுற்றி இருப்பவர்கள் எப்படிபட்டவர்கள்.அவர்கள் சொல்வது நமக்கு சரியாக இருக்குமா என்பதை தீர்மானிக்கும் நுண்ணறிவு நமக்கு சரியாக இருக்கும் பட்சத்தில் நமக்கு எல்லாம் மிகவும் சிறப்பாகவே நடக்கும். 
டாக்டர் ஜோ டிஸ்பென்சா எனும் உளவியல் நிபுணர். Breaking the habit of being yourselves என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.நரம்பியல் அறிவியல் கோட்பாட்டின்படி உங்கள் மூளை உங்களுக்கு சரியானது எது என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருக்கும்.ஆனால் முடிவெடுக்கும் போது நாம் சில நேரங்களில் பிசகிவிடுவதால் நாம் தவறுகளை செய்கிறோம். எப்பொழுதும் சரியான முடிவெடுக்கவேண்டும் என்றால் உங்கள் நுண்ணறிவு எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்றால் நீங்கள் எப்பொழுதும் பிரபஞ்சத்தின் இணைப்பில் இருந்துகொண்டே இருக்கவேண்டும். எப்படி இருப்பது ?
( பிரபஞ்சம் பேசும் )

No comments:

Post a Comment

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...