Friday, August 30, 2013

களிமண்ணு - கவித்துமான சினிமா !


பிரெஞ்சின் பிரபல இயக்குனர் பிரான்கைஸ் ட்ருபோர்ட்  ஒரு சிறந்த திரைப்படம் எப்படி இருக்கவேண்டும் என்று குறிப்பிடும்போது இப்படி சொல்கிறார் “ ஒரு படத்தை ஒருவர் பார்க்கும் போது அந்த மொழி அறியாத ஒருவருக்கு கூட தொண்ணூறு சதவீதம் தெளிவாக புரியவேண்டும் என்கிறார். திரைப்படம் என்பது காட்சி மொழி. உரையாடல் என்பது இரண்டாம்பட்சம்தான்.காட்சி மொழித் திரைப்படங்களை மிக அரியதாக மாறிவரும் சூழலில், முழுமையான அழகியலோடு வெளிவந்திருக்கும் திரைப்படம் “களிமண்ணு”.

தன்மாத்ரா, பிரணயம் போன்ற மாறுபட்ட படங்களை தந்த மலையாள இயக்குனர் பிளஸ்ஸியின் முற்றிலும் மாறுபட்ட படம் “களிமண்ணு”. இந்த படத்தின் கரு இந்திய சினிமாவுக்கே புதியது எனலாம். நடிகை ஸ்வேதா மேனனின் பிரசவக் காட்சியை படமாக்கினார், இந்திய பாரம்பரியத்திற்கு இழுக்கு ஏற்படுத்திவிட்டார் என்று பல குற்றசாட்டுகளை சுமந்தபடி இந்த படத்தை இயக்கி முடித்துள்ள பிளஸ்ஸிக்கு இப்படம் ஒரு நிஜமான மைல்கல்.
ஒரு கலைபடைப்பை, கமர்ஷியல்தனமுடன் தரும் ஆளுமை என்பது எளிதான ஒன்றல்ல. இதில் வெற்றிவாகை சூடுகிறார் இயக்குனர்.

முதல்காட்சி ஒரு பெண் கடலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள முயலுகிறாள்.தொடர்ந்து ஒரு சிலை வடிக்கும் காட்சித் தொகுப்பு ஒளிப்பதிவும் ஷாட்களின் நேர்த்தியான படமாக்கப்பட்ட விதமும் நம்மை படத்திற்குள் மொழியை கடந்து சுலபமாக இழுந்த்துசெல்கின்றன.களிமண்ணை பிசையும் ஒரு கலைஞன் அதனை ஒரு அழகான பெண் சிலையாக வடிவமைப்பதை பாடலின் ஊடே ஒளி ஓவியமாக்கி விவரிக்கிறார் இயக்குனர். தொடர்ந்து அந்த சிலை உயிர் பெற்று ஒரு கமர்ஷியல் பாடல், அது முழுமையாக படத்திற்கு தேவையான பாடலாக அமைகிறது. ஏதோ பீரியட் படமோ என்று யோசிக்கும் வினாடியில் “ கட்” என்ற குரல், அது சினிமா படபிடிப்புதளம், அந்த பெண் நாயகி மீரா.

தொடர்ந்து ஒவ்வொரு கேரக்டரும் அடுத்த இருபது நிமிடங்களில் அதற்கான குணாதியசங்களுடன் தெளிவாக அறிமுகமாகின்றன. திரைப்படங்களில் கவர்ச்சி நடனம் ஆடும் நாயகி மீரா,தான் முதல்முதலில்  நாயகியாக நடித்த ஹிந்திப்படத்திற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறாள். தனது கணவனும் டாக்ஸி ஓட்டுனருமான ஷியாமையும் அழைக்கிறாள். பணியில் பிசியாக இருக்கும் ஷியாம், மீராவின் ப்ரிமியர் ஷோவில் கலந்துகொள்ள காரில் விரைகிறார்.பிரிமியர் ஷோவில் பிரபல நடிகர்களின் பாராட்டு மழையில் நனையும் மீரா, அந்த சூழலிலும் தன் கணவனின் வருகையை தவிப்புடன் எதிர்நோக்குகிறார்.

எதிர்பாராத நிலையில் விபத்தி சிக்க, ஷியாம் உயிருக்கு போராடுகிறார். ஷியாமை பார்க்க மருத்துவமனைக்கு விரையும் ஸ்வேதாவிற்கு பழைய நினைவுகள் அணிவகுக்கின்றன, ஒரு பார் டான்ஸராக வாழும் அவள் சினிமா நாயகியாக மாற எப்படியெல்லாம் இரையக்கப்பட்டாள் என்ற சம்பவங்கள் நிழலாடுகின்றன, இறுதியில் வாழ்க்கையில் விரக்தியாகி தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறாள். படத்தின் முதல் காட்சியில் ஒரு பெண் தற்கொலை செய்ய முயலும் காட்சியோடு தொடர்புபடுத்தபடுகிறது.

அவளுக்கு டாக்ஸ் ஓட்டுனராக அறிமுகமாகும் ஷியாம், அவளை தொடர்ந்து கடலில் குதித்து காப்பாற்றுகிறான்.அவளுக்கு நம்பிக்கை ஊட்டுகிறான். சிரமங்களில் தன்னம்பிக்கை மற்றும் கனிவுடன் இருக்க, பழைய துன்ப சம்பவங்களை மறந்து ஷியாமை நட்புடன் பழகுகிறாள். நட்பு காதலாகி. காதல் திருமணத்தில் முடிகிறது. ஆனந்தமான திருமண வாழ்க்கை.கனவு தொழிலிலும் முன்னேற்றம் தெரிகிறது. கவர்ச்சி நடனமாடுபவராக உயர்ந்து படிப்படியாக நாயகியாக உருவெடுக்க, தனது முதல் படம் வெளியாகும் சூழலில், அதன் ப்ரீயர் ஷோவன்று ஷியாமின் விபத்து பெரும் சோகமாகிறது.

மருத்துவப் பரிசோதனையில் ஷியாம் மூளைச்சாவு அடைந்தது தெரிய வருகிறது. உறுப்பு தானம் குறித்து பலர் அவளை நிர்பந்திக்க, ஷியாமுடனான பந்தம் அவளை தடுக்க. மீராவுக்குள் போராட்டம்.மீரா யாரும் எதிர்பாராத ஒரு அற்புதமான முடிவெடுக்கிறார். அந்த முடிவு தொடர்ந்த விளைவுகளும் தான் படத்தின் சாராம்சம்.

மீராவின் முடிவு என்பது ஏதோ சினிமாவிற்கான டிவிஸ்ட் அல்ல, அது சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவல்ல ஒரு பெரும் புரட்சி.மீராவின் முடிவின் அடிப்படையில்; ,சமூகத்தின் பார்வை என ஒரு மிக சீரியஸான படத்தை கொஞ்சமும் தொய்வின்றி மிகத் தெளிவாக படைத்துள்ளார் இயக்குனர் பிளஸ்ஸி.

                                             இயக்குனர் பிளஸ்ஸி


திரைப்படம் என்பது ஊடகமொழி. அது உளவியல் மொழியாக மாறும்போதுதான் பார்வையாளரோடு இணையசெய்கிறது. களிமண்ணு ஒளிப்பதிவு, இசை என்று எல்லாவற்றிலும் ஒரு முழுமை தெரிகிறது.படத்தில் இந்தி, தமிழ், மலையாளம் என்று பல மொழிகள் பேசப்பட்டாலும் மொழிகளை கடந்து ஒரு புரிதல் தருகிறது.

பாரம்பரியமிக்க இந்திய மண்ணில் கர்ப்பகாலம் என்பது மிகவும் போற்றப்படக்கூடிய ஒன்று. ஆனால் அது இப்போது இயந்திரமயமாகி வருகிறது. மகப்பேறு குறித்த சிறந்த விழிப்புணர்வை தருகிறது களிமண்ணு. குழந்தைப் பிறப்பு என்பது ஏதோ இன்னொரு உயிரை சுமந்து மண்ணிற்கு தரும் செயல் அல்ல, அது ஒரு சமூக மாற்றத்திற்கான வலுவான அடித்தளம் என்பதை ஆணித்தரமாக கூறுகிறது களிமண்ணு. ஒவ்வொரு பெண்ணும் பார்க்கவேண்டிய படம் களிமண்ணு.



சிறந்த திரைக்கதை, நேர்த்தியான ஒளிப்பதிவு, இதமளிக்கும் இசை, உறுத்தல் இல்லாத படத்தொகுப்பு, அறிவியல் பூர்வமான விழிப்புணர்வு என்று களிமண்ணு ஒரு படமாக மட்டுமல்ல, திரையாளுமைகளுக்கு ஒரு பாடமாகவும் போற்றப்படும்.

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...