Monday, January 31, 2022

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

 



மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கிடைக்காத நிலையில் தனித்துப் போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்டார் பாஜகவின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை. பாரம்பர்ய ஊடகங்கள் இதனை சீரியஸாக வெளியிட்டுகொண்டிருக்க மக்கள் ஊடகங்கள் வரிந்துகட்டிக்கொண்டு கேலி செய்ய தொடங்கின.

        இனி நோட்டாவுக்கும் பாஜகவுக்கும் தான் போட்டி  என்று பலர் கிண்டலடிக்க, சிலர் தற்கொலை முயற்சியில் பாஜக என்று  உச்சுக்க்கொட்ட தொடங்கினர். உண்மையில் பாஜக தனித்து நிற்பது என்பது அந்த கட்சிக்கு நல்லது என்பதுதான் உண்மை.  பாஜக தனது உண்மையான வாக்கு வங்கியை தெரிந்துகொள்ள இது ஒரு அற்புதமான வாய்ப்பு. அது மட்டுமல்ல எங்கிருந்து தொடங்க வேண்டும், எப்படி வளரவேண்டும் என்பதை தீர்மானிக்க இந்த தனித்த போட்டியின் முடிவுகள் வழிகாட்ட கூடும்.

    தேசிய அரசியலில் சுமார் எட்டு ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் மாநிலம் ஒன்று உண்டென்றால் அது தமிழ்நாடுதான். சமீபத்தில்  பஞ்சாப்பிற்கு சென்ற பிரதமர் கதறலுடன் திரும்பினார். இந்த கதறலை தமிழ்நாடு 2018 லேயே செய்து பார்த்துவிட்டது. தமிழில் பேசினார், திருக்குறளையும், ஒளையாரையும் ஒப்புவித்தார். வரலாற்று சிறப்புமிக்க சீன அதிபர் சந்திப்பை கூட தமிழ்நாட்டில் வைத்துகொண்டார் . எனினும் பாஜகவுக்கும் தமிழ்நாட்டிற்குமான ஏழாம் பொருத்தம் தொடர்கிறது. இதற்கு காரணம் என்ன ?

நிச்சயமாக பாஜகவின் தவறான அணுகுமுறைதான். தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் தலைவராக இருந்தபோது  இருந்த பாஜகவும் இப்போதையை பாஜகவும் வேறு வேறு. இன்னும் ஆழமாக சென்றால் வாஜ்பாய் காலத்து பாஜகவும் இன்றைய பாஜகவும் வேறுவேறு. 

அன்றைய பாஜகவுக்கு கொள்கை இருந்தது. அரசியலை எப்படி முன்னெடுக்கவேண்டும் என்ற ஆக்கபூர்வமான செயல்பாடுகள் இருந்தன. மூத்த அனுபவம் வாய்ந்தவர்களை தலைவர்களாகவும் முதன்மையானவர்களாகவும் இருந்தார்கள்.

கலைஞர் கருணாநிதி திமுக தலைவராக இருந்த போது பாஜகவின் தலைவராக இருந்தார் கிருபாநிதி. அதிர்ந்து பேசாதவர். சூழலுக்கு ஏற்ப நிலைமை அறிந்து பேசக்கூடியவர். தொடர்ந்து இல கணேசன், பொன் ராதகிருஷ்ணன், கோவை ராதாகிருஷ்ணன் என்று பலர் தலைமை பொறுப்புக்கு வந்தனர். ஒவ்வொருவரும் தனி ரகம். ஆனால் எல்லோரிடமும் ஒரு ஆக்கப்பூர்வமான அணுகுமுறை இருந்தது. தொடர்ந்து பாஜகவின் தலைவர் ஆனார் திருமதி தமிழிசை செளந்தரராஜன். உண்மையில் அந்த நேரம் தமிழ்நாட்டில் ஒரு வெற்றிடத்தை நோக்கி நகரும் நேரம். ஓடியாடி அரசியல் செய்ய முடியாமல் கலைஞரும், ஜெயலலிதாவும் உடல் ரீதியாக சோர்ந்து இருந்த நேரம்,  திராவிட கொள்கைகளுக்கு எதிரான குழப்பங்களும், இரண்டு கட்சிகளும் மாறி மாறி செய்த ஊழல்களும் பொதுவெளியில் சிரித்துகொண்டிருந்த நேரம். அப்பொழுது பாஜக நினைத்திருந்தால் மிகவும் வலிமையாக கால் ஊன்றியிருக்கலாம். ஆனால் பாஜகவின் சித்தாந்தம் முற்றிலும் தமிழ்நாட்டிற்கு பொருந்தாத ஒன்றாக இருந்ததினால் அதனால் ஒரு இம்மியளவு கூட வளரமுடியவில்லை. இருப்பினும்  மத்திய அரசு ஆட்சியில் இருக்கும் தைரியத்தோடு முடிந்த அளவு ஈடுகொடுத்துப் பார்த்தார் தமிழிசை செளந்தராஜன். முளைக்கவே வாய்ப்பில்லாத சூழலிலும் கூட " தாமரை மலர்ந்தே தீரும்" என்று பாசிடிவ் பஞ்ச் வசனத்தை பிரபலமாக்கினார்.

    தமிமிசையால் முடியாது என்று நினைத்தோ அல்லது ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து ஒருவரை தலைவராக்கினால் அந்த சமூக வாக்குகளை கவரலாம் என்று யார் சொன்ன யோசனையோ தமிழிசை அந்த பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு எல். முருகன் பாஜகவின் தலைவரானார்.

    தமிழ்நாடு பாஜக உச்சகட்ட கேலிக்கு உள்ளான காலம் ஒன்றென்றால் இதுதான்.   இந்துத்துவா சார்ந்த அமைப்புகளில் நீண்ட அனுபவம் வாய்ந்த எல் முருகன் பாஜகவை ஒரு இந்துக்கள் கட்சியாக முன்வைத்தார். அதுமட்டுமல்ல இவரின் காலத்தில் தான் கிரிமினல்களும், குற்றபின்னனி உள்ளவர்களும் அணிஅணியாக கட்சியில் சேர்ந்தனர். பாரம்பர்ய ஊடகங்களை மத்திய அரசு எனும் ஆயுதத்தை வைத்து வளைக்கப்பார்த்தாலும் சமூக ஊடகங்கள் மக்கள் கையில் இருப்பதினால் பாஜகவிற்கு கேலியும் கிண்டலும் பரிசாக கிடைத்தன. இந்துக்கள் இந்துக்கள் என்று அவர் கத்த  பகுத்தறிவு பாசறையாக தன்னை காட்டிகொண்டு வந்த திமுக இந்துக்கள் இந்துக்கள் என்று நீங்கள் கத்தினால் அப்போ நாங்கள் யார் ? என்று கேட்பது போல் நடந்துகொண்டது. 

    இதே திமுகவின் தலைமைதான் கலைஞர் காலத்தில்  இந்து என்றால் திருடன் என்றொரு அர்த்தம் உண்டு என்று தைரியமாக இறங்கி அடித்தது. இருப்பினும் எல் முருகன் காலத்தில் நாங்களும் இந்துக்கள் தான் என்று சொல்லதொடங்கியது. இது காலத்தின் கொடுங்கோலம் எனினும் எல். முருகன் வீசிய பந்து அவரை நோக்கியே திரும்பியது.  

    வட இந்தியாவில் இந்து மத உணர்வை தூண்டி எரியவிட்டு அதில் குளிர் காயும் கட்சியாக பாஜக இருக்கிறது. அதேவியூகத்தினை வேல் யாத்திரை மூலம் தொடங்கினார். அது ஒரு கேலியாத்திரையாக மாறிப்போனது. இப்படி  ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்யாமல் அடையாள அரசியல் செய்ய போய் அதிமுக கூட்டணி அமைத்து அதன் செல்வாக்கையும் பதம் பார்த்து எடப்பாடி பழனிச்சாமியின் முதலமைச்சர் கனவை தகர்த்தது  பாஜக.

    எல் முருகன் போய் அடுத்து அண்ணாமலை வந்தார். ஏற்கனவே பல கிண்டல்களுக்கு உள்ளாகி வந்த ஒருவரை எதன் அடிப்படையில்  தலைவராக்கியது பாஜக தலைமை என்று தெரியவில்லை. சீனியர்கள் மன கொந்தளிப்பில் அண்ணாமலை காமெடி சேட்டைகளை தொடர்ந்தார். இதையெல்லாம் பொறுக்க முடியாமல் என்னவோ கட்சியின் சூப்பர் சீனியரான இல கணேசன் கவர்னர் பதவி வாங்கிகொண்டு சென்றுவிட்டார். மற்ற சீனியர்கள் எல்லாம் அடக்கி வாசிக்க தொடங்கினர். எச். ராஜா மட்டும் என்ன செய்வது களத்தில் இறங்கிவிட்டோமே எதாவது செய்யவேண்டும் என்று அவ்வப்போது எதையாவது பேசி வருகிறார். 

இது தவிர அண்ணாமலை பொறுப்பேற்ற  இந்த ஆறு மாதங்களில்  எல் முருகன் காலத்தைவிட அதிக விமர்சனங்களையும் கிண்டலையும் சந்தித்து வருகிறது பாஜக . இடையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சில இடங்களில் அதிமுகவின் முதுகில் சவாரி செய்து வெற்றி பெற்றது. ஏற்கனவே அதிமுகவின் தயவில் நான்கு எம் எல் ஏக்களை கொண்டுள்ளது.  இவர்களின் ஆக்கபூர்வமான செயல்பாடுகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதின் மூலம் ஓரளவு நம்பிக்கையை உருவாக்க முடியும். எனினும் ஒன். மேன் ஷோவாக தன்னை முன்னிலைப்படுத்திகொள்வதில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகிறார் அண்ணாமலை.

சென்னை வெள்ளத்தின் போது போட் ஷூட் முதல் சமீபத்தில் சிறுமி லாவண்யா மரணம் வரை அவர் வீசிய செய்த அரசியல் அனைத்தும் அவரின் மதிப்பை மட்டுமல்ல பாஜகவின் மதிப்பையும் காவு வாங்கி வருகின்றன.

இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பாளர் தேர்வுகள் நடைபெறத்தொடங்கின. அதே அதிமுகவின் முதுகில் ஏறி இரண்டு மூன்று மேயர் தொகுதிகளையும் நகராட்சி தொகுதிகளையும் பெற்றுவிடலாம் என்ற அவர்களின் திட்டத்தின் மீது மண்ணை வாரி போட்டுவிட்டது அதிமுக.

    எந்தவித நிபந்தனைக்கும் ஒப்புகொள்ளாமல் தனித்து போட்டியிடும்படி செய்திருக்கிறது. இப்பொழுது பாஜக களத்தில் தனித்து நிற்கிறது. இது தான் உண்மையான சூழல் . இதுவரை என்ன செய்திருந்தாலும் அதன் பலன் என்ன என்பதை இப்பொழுது தெரிந்துகொள்ள முடியும். தமிழ்நாடு அரசியல் என்பது வேறு. மக்களின் சிந்தனைதிறன் வேறு. சமூக நீதியில் இந்தியாவில் முன்னனி மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டில் மத அரசியல் ஒருபோதும் எடுபடாது என்பதை இப்பொழுது இந்த தேர்தல் மூலம் நிச்சயம் பாஜக புரிந்துகொள்ளும்.

இந்த தேர்தலில் அவர்கல் பெறப்போகும் வாக்குகள் மிகவும் குறைவானதாக இருக்கலாம். ஆனால் அது அவர்களின் வளர்ச்சியை வெளிப்படையாக வெளிச்சம் போட்டு காட்டும் கண்ணாடியாக திகழும். இதன் மூலம் எப்படி கட்சியை வளர்க்கலாம். எதை செய்தால் நல்லது ? எதை பேசவேண்டும் ?எதை பேசக்கூடாது ? என்பதை தெளிவாக தமிழ்நாடு பாஜகவும் தேசிய தலைமையையும் உணர்ந்துகொள்ளும். இந்த தேர்தலுக்கு பிறகு ஏற்பட போகும் தோல்விக்கு பொறுப்பேற்று அண்ணாமலை மாற்றப்படலாம். ஆனால் அடுத்து  அமரவைக்கப்படும் தலைவர் பொறுமையானவராகவும், பொறுப்புள்ளவராகவும், அனுபவம் வாய்ந்தவராகவும் இருக்கும் பட்சத்தில் மட்டுமே 2024 தேர்தலில் தமிழ்நாட்டின் கூட்டணியில் பாஜகவுக்கு சில சீட்டுகள் பெற்று தரப்போகும் கூட்டணிகள் உருவாகலாம். இல்லை 2024 ல் பாஜக தமிழ்நாட்டில் தனித்துவிடப்படலாம்.  குடியரசு தின உரையில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள தேசம் தழுவிய  சமூகநீதிக்கான அமைப்பு பாஜகவுக்கு தமிழ்நாட்டில் மட்டும் அல்ல தேசிய அளவில் தலைவலியை ஏற்படுத்தும்.

  அதற்கு உதவும் வகையில் தனித்து போட்டு என்ற தற்கொலை முயற்சியை தான் தமிழ்நாடு பாஜக எடுத்துள்ளது. கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவான் என்பது பழமொழி. மதவாத அரசியலில் பிழைப்பு நடத்தலாம் என்று நினைக்கும் பாஜகவுக்கு தமிழ்நாடு பெரும் பாடம் கற்பிக்க தயாராக இருக்கிறது !

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...