Wednesday, October 5, 2011

சதுரங்கம் – ஒரு செய்தியாளனின் வாழ்க்கைப் பயணம் !

கோ – படம் பார்த்தவர்கள் அனைவரும், இப்போது தானே பத்திரிகைதுறை சார்ந்த படம் பார்த்தோம், அதுக்குள் இன்னொன்றா என்று கேட்டீர்களானால் ஏமாந்து போவீர்கள்.

ஏனில் இது செய்திதுறை பற்றிய மற்றொரு படமல்ல!

ஜனநாயகத்தின் ஏனைய தூண்களான அரசியல், காவல், நீதி ஆகியவை தவறு செய்யும்போது சுட்டிகாட்டும் நான்காவது தூணாகிய செய்திதுறை சார்ந்தவர்களின் நிஜவாழ்க்கையை இயல்பாக பேசும் படம் சதுரங்கம். ஒரு நேர்மையான செய்தியாளனுக்கு என்னென்ன அனுபவங்கள் ஏற்படுகிறது. அவன் இந்த செய்திகளை வெளிப்படுத்துவதின் மூலம் எத்தகைய அபாய நிலைக்குள் சிக்கிகொள்கிறான் என்பதை அழகிய காதல் கொண்டு விவரிக்கிறது சதுரங்கம்.


திசைகள் பத்திரிகையின் புலனாய்வு செய்தியாளனாகிய திருப்பதிசாமி ( சிறீ காந்த் ) மிகவும் துணிச்சலான செய்தியாளன். கொலை செய்தால் தான் சிறைக்கு போகும் நிலை மாறி கொலை செய்வதற்காகவே சிறைக்கு செல்லும் அதிபயங்கர கொலைகாரர்கள் நிறைந்த சிறைச்சாலைக்கு செல்கிறார். அங்கு தங்கி சக கைதிகளிடம் பழகி, சிறைச்சாலையின் தகிடுதத்தங்களை வெளிப்படுத்துகிறார். இதனால் சிறைத்துறை அமைச்சர் உட்பட பலரின் பதவி காலியாகிறது. திசைகள் விற்பனை சக்கைப்போடு போடுகிறது. இங்கு ஒரு எதிரி உருவாகிறார்.

சட்டவிரோதமாக கட்டிடம் கட்டிய சிங்கபெருமாளின் ( பிதாமகன் மகாதேவன் ) லீலைகளை வெளிப்படுத்துகிறார். இங்கு இன்னொரு எதிரி உருவாகிறான்.

இதற்கு முன்பு ஐஏஎஸ் அதிகாரி கருணாமூர்த்தி, ரவுடிகள் அதிகாரிகள் என்று தினம் தினம் எதிரிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

இடையில் ஒரு அழகான காதல். வங்கியில் சந்திக்கும் கல்லூரி மாணவி சந்தியாவுடன் ( சோனியா அகர்வால் ) ஒரு தித்திப்பான இளமை குறும்பு காதலாக வெளிப்படுகிறது.சந்தியா - திருப்பதிசாமியின் முதல் சந்திப்பில் இருந்து அவர்களின் காதல் படிப்படியாக வளர்வதை அழகியலோடு கவித்துவமாக கொண்டு செல்கிறார் இயக்குனர் கரு.பழனியப்பன்.

காதல் வீட்டிற்கு தெரிய. திருமணத்திற்கு தயாராகும் வேளையில் திருப்பதிசாமியின் கண்ணெதிரேயே கடத்தப்படுகிறார் சந்தியா .

கடத்தியது யார் ?

கடத்திய காரணம் என்ன ?

புரியாத சூழலில் திருப்பதிசாமியின் வலிமிகு தேடல்தான் சதுரங்கம்.

ஒருவரி கேட்பதற்கு எளிமையாக இருக்கும் ஆனால் ஒரு செய்தியாளனின் நிஜவாழ்வை பிரதிபலிப்பது போன்ற படத்தின் ஓட்டம் நம்மை படத்தின் ஊடே உருக்கமாக அழைத்து செல்கிறது. திருப்பதி சாமி இழந்த காதலியை தேடும்போது ஏதோ நமது பாசத்திற்குரிய ஒருவரை தேடும் உணர்வு நம்முள் ஏற்படுவதை தவிர்க்கமுடியாது.

நமது வாழ்க்கையே ஒரு சதுரங்கம் தான். தினம்தோறும் நாம் முகம் தெரியாத பல பிரச்சனைகளை நோக்கி காய் நகர்த்துகிறோம். அதில் வெற்றி பெறுவது தான் வாழ்க்கையின் நகர்வு என்பதை அழுத்தமாக சொல்கிறது சதுரங்கம்.


எதிரிகள் யார் யார் என்று வெளிப்படுத்தி, இவர்களால் கடத்தப்பட்டிருப்பார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி, இறுதியைல் இவர்களில்லை என்று ஒவ்வொன்றாக விடுவித்து யார் ? யாராக இருப்பார்கள் ? என்ற விறுவிறுப்பான எதிர்பார்ப்பை தூண்டும் திரைக்கதை பிரமாதப்படுத்தியுள்ளது.

இறுதியில் அந்த எதிரி யாரென்று தெரிந்தபின்பு, இவரா ? என்று ஆச்சர்யபட வைக்கிறது. ஒரு செய்தி மக்களுக்கு செய்தி. ஆனால் அந்த செய்தியாளனுக்கு அன்று முதல் மரணத்தின் துரத்தல் தான் என்பதை வலுவாக சொல்கிறது சதுரங்கம்.

திரைக்கதையில் சமார்த்தியமாக விளையாடி இருக்கிறார் இயக்குனர் கரு. பழனியப்பன். படம் வெளியாகும் முன்பே தமிழக அரசின் மாநில விருது இப்படத்திற்கு கிடைத்திருப்பது பொருத்தம் தான்.

திவாகரனின் கேமரா தேவையான அழகியல் மொழியை தேவையான விதத்தில் பேசுகிறது. சோனியா அகர்வாலுடன் காதல் காட்சிகளில் ரொமன்ஸ் மழை பொழியும் காட்சிகள், சண்டைக்காட்சிகள் மற்றும் துரத்தல் காட்சிகளின் போது வேகமெடுக்கிறது.

சுரேஷ் அர்ஸின் படத்தொகுப்பு படத்திற்கு வினாடிக்கு வினாடி படபடப்பை கூட்டுகிறது.

இசை வித்யாசாகர். “ என்னை தந்துவிட்டேன் நான் என்னை தந்துவிட்டேன்” பாடல் ஒருமுறை கேட்டபின்பும் திரும்ப திரும்ப நினைவில் வருடுகின்றன.

மாஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் எஸ்.எஸ். துரைராஜும், ஸ்ரீ துணா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் பி. கருணாகரன் மற்றும் பி. கண்ணனும் இணைந்து இப்படத்தை தயாரித்து உள்ளார்கள். வழக்கமான மசாலா இன்றி சமூக பொறுப்புடன் இத்தகைய படத்தை தயாரிக்க துணிந்த இவர்களுக்கு பாராட்டுக்கள் குவியும் என்பதில் சந்தேகமில்லை.

செய்திகள் நம்மை பரவசப்படுத்துகின்றன, அறிவூட்டுகின்றன. தகவல்களை உடனுக்குடன் சேர்க்கின்றன. வாள் முனையைவிட பேனாமுனை கூர்மையானது என்பார்கள்.
பத்திரிகை உலகின் வலிமையை உணர்த்த சொல்லப்படும் வாக்கு இது. பத்திரிகைதுறை வலிமையானதுதான்,ஆனால் அந்த வலிமையான ஆயுதம் கொண்டு சமூக பாதுகாப்பிற்கு அரண் அமைக்கும் செய்தியாளர்கள் எல்லாம் பாதுகாப்புடன் இருக்கிறார்களா ? இந்த கேள்விக்கு அழகாக பதில் தருகிறது சதுரங்கம்.

படத்தில் குறைகளே இல்லையா என்றால் ? இருக்கிறது. ஆனால் செய்திதுறையை ஒரு முழுமையான களமாக கொண்டிருக்கும் படம் என்பதால் குறைகளை பற்றி அதிகம் விவாதிக்காமல் இப்படத்தை வரவேற்போம்.

உழைக்கும் பத்திரிகையாளர் சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் ஒரு அர்ப்பணம் தான் சதுரங்கம்.

.

1 comment:

  1. நல்ல விமர்சனம்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...