Sunday, February 14, 2016

மக்கள் நல கூட்டணி ?

மக்கள் நல கூட்டணி உருவான போது அதைப்பற்றிய ஒரு கருத்து பொதுவெளியில் விவாதிக்கப்பட்டது. அதிமுகவின் எதிர்ப்பு ஓட்டுக்களை திமுகவின் பக்கம் போகாமல் திசைதிருப்ப உருவாக்கப்பட்ட அணிதான் மக்கள் நலக் கூட்டணி என்பதுதான் அது.
அதற்கு வைகோ ஒரு மறுப்பு தெரிவித்தார். அதிமுகவும் திமுகவும் தங்கள் பொது எதிரி என்றார். சமீபத்தில் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அதிமுக என்பது தலித்துக்கள் வாக்கு வங்கி நிறைந்த கட்சி. மக்கள் நலக்கூட்டணியில் தானிருப்பதால் அதிமுகவின் வாக்கு வங்கி சரியும் எனவே அதிமுகவுக்கு தான் பாதிப்பு என்றார். கம்புயூனிஸ்டுகள் கொஞ்சம் மழுப்பலாகவே பதிலளித்தார்கள். தங்கள் அணி வலிமையானது என்று செல்பி எடுத்து    நல்கினாலும்,வலுசேர்க்க கூட்டணியில் உள்ள எல்லோருக்கும் விஜயகாந்த வந்தால் நன்றாக இருக்கும் என்ற விருப்பம் இருப்பது தெரிகிறது.
அரசியல் அரிச்சுவடி பழகாத ஒருவனுக்கு கூட தெளிவாக தெரியும் திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக தமிழ்நாட்டில் வலிமையான ஒரு அமைப்பு இன்னும் உருவாகவில்லை என்பது. அப்படி இருக்க மக்கள் நலக்கூட்டணியால அதிமுகவின் எதிர்ப்பு ஓட்டுக்கள் பிரியுமே தவிர அதனால் புதிய அலையெல்லாம் உருவாகாது. இதனை வலிமைப்படுத்தும் வகையில் சமீபத்தில் வெளியான வைகோவின் பேட்டி அமைகிறது.
எதற்குமே ஒரு மையபுள்ளி ( Centre Point )  அவசியம். மக்கள் நல கூட்டணின் மையப்புள்ளியாக அதிமுக மற்றும் திமுகவிற்கு மாற்றான ஒரு அரசியல் களம் முன்வைக்கப்பட்டது. தற்போது வைகோ பேட்டியில் அதிமுக – திமுக அரசியல் ரீதியாக போட்டியிட்டு முட்டி மோதிக்கொள்ளுங்கள் ஆனால் திராவிட அரசியலை கைவிட்டுவிடாதீர்கள் என்று கிளைதாவி இருக்கிறார். அதாவது தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் என்பதில் இருந்து இறங்கி, யார் ஆண்டால் எனக்கென்ன இங்கு தேவை திராவிட அரசியல் என்பதாகும். தமிழ் தேசியம் பேசி வரும் சீமானுக்கு எதிரான பதிலாக அவர் சீமானை ஒரு வலிமையான தமிழ் தேசியவாதியாக அடையாளப்படுத்தியிருக்கிறார். இந்த வகையில் வைகோவிற்கு சீமான் நன்றி சொல்லவேண்டும். இதுவும் ஒருவகையில் திசை திருப்பல்தான். சீமானுக்கு நன்றாக தெரியும் தன்னால் தனித்து நின்று ஆட்சியைப்பிடிக்க முடியாது என்பது. மேலும் அவர் உடனடியாக அதற்கு அவசரப்படுவதாகவும் தெரியவில்லை. துணிந்து 234 தொகுதிகளிலும் தன் வேட்பாளர்களை அறிவித்து உள்ளார். அவரின் வாக்குறுதிகள் இளைஞர்களை கவரும் வகையில் உள்ளன. இந்த தேர்தலில் தனது தனிப்பட்ட அரசியல் வலிமையை சோதிக்க பயன்படுத்திகொள்வார். இன்னும் சில ஆண்டுகளில் ஏற்படபோகும் ஒரு வெற்றிடத்தை நோக்கி இருக்கிறது அவர் பயணம்.மேலும் வைகோவின் பேட்டி சீமானுக்கு வலிமை சேர்ப்பதாக அமைந்துவிட்டது.
அதிமுக திமுக இரண்டிற்கும் இடையேயான அரசியல் சூடு பிடிக்கதொடங்கிய நிலையில் அதன் எதிர்ப்பு வாக்குகள் மக்கள் நல கூட்டணி, பாமக,நாம் தமிழர் என திசை திரும்பி நீர்மூலமாகிவிடும். பாமக் கொஞ்சம் நாள் காத்திருந்து பார்த்து தன் இலக்கை 2021 ஆக மாற்றிக்கொள்ளகூடும். திருமாவளவனுக்கு உட்சபட்ச எதிர்ப்பார்ப்பு மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தான் அறிவிக்கபட்டால் போதும் என்பதே. இத்தனை கால அரசியல் களத்தில் இதுவரை ஒரு தலித் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டதில்லை. அவ்வாறு முன்னிறுத்தினால் பாமகவிற்கு எதிரான வெற்றியாகவும், அவ்வாறு முன்னிறுத்தப்படுதலே தலித்திற்கான வெற்றியாகவும் அவர் கருத கூடும். ஆனால் அத்தகைய திறந்த மனது மக்கள்நல கூட்டணிக்கு உள்ளதா என்பதை யாரும் வெளிப்படுத்தவில்லை.

திடீரென குலாம் நபி ஆசாத் கலைஞரை சந்திக்க காங்கிரஸுடன் கூட்டணி உருவாகிவிட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் உலாவுகின்றன. கலைஞர் அவ்வளவு சாதாரணமானவர் அல்ல. நின்று விளையாடுவதில் வல்லவர். குலாம் நபி ஆசாத் சந்திப்பை பரபரப்பாக்கி கூர்ந்து கவனிக்க தொடங்கியிருக்கிறார். இந்த சந்திப்பிற்கு அவர் எத்தகைய முக்கியத்துவம் தருகிறார் என்பதற்கு முகநூலி உலக வரலாற்றிலேயே முதன்முறையாக திமுக நேரலை செய்தது. இப்பொழுது காங்கிரஸுடன் நெருங்கினால் பாஜக சுலபமாக அதிமுகவுடன் நெருங்கிவிடும். அப்புறம் கலைஞரை இறுக்குவது அவர்களுக்கு ஒன்று கடினமல்ல. உண்மையில்  அரசியல் சதுரங்கத்தின் முதல் நகர்வு இப்பொழுதுதான் துவங்கியுள்ளது.  

No comments:

Post a Comment

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...