Saturday, December 11, 2010

சபரிகிரியும் சதுரகிரியும்

அதிகாலையில் சரணகோஷம் ஒலிக்கிறது.

சபரிமலைக்கான பருவம் ஆரம்பித்துவிட்டது.சின்ன சின்ன கடைகள் முதல் பெரிய சந்தைகள் வரை கருப்பு,காவி,பச்சை, நீல நிற உடைகளும்,விதவிதமான மாலைகளின் வியாபாரங்களும் களைக் கட்டத் தொடங்கிவிட்டன.

இந்த வருடம் சுமார் 40 மில்லியன் யாத்ரீகர்கள் எதிர்பார்க்கப்படுவதாக செய்திகள் சொல்கின்றன. ஒரு பக்தர் 100 ரூபாய் வழங்கினாலும் குறைந்தபட்சமாக 400 கோடி ரூபாய் வருமானம்.சுமார் நான்கு கோடி பக்தர்களை ஈர்க்கும் விதமாக அங்கு என்ன இருக்கிறது ?

சபரிமலை பக்தி மார்க்கத்தின் அடையாளம். பக்தி மார்க்கத்தில் நம்பிக்கை மட்டுமே வலிமையாக செயல்படுகிறது.நம்பிக்கை என்பது எண்ணத்தின் அடிப்படையானது. சபரிமலை சென்றால் இன்னது நடக்கும் என்ற நம்பிக்கை.சபரிமலை சக்தி வாய்ந்த தளம் என்ற நம்பிக்கை !

ஒரே சமயத்தில் இத்தனை கோடி மக்கள் நினைக்கும் போது எழும் எண்ண ஆற்றல். இவைதான் சபரிமலையின் சக்திக்கு காரணம். இது இல்லாமல் இன்னொரு காரணமும் இருக்கிறது. அதனை இக்கட்டுரையின் கடைசியில் சொல்கிறேன்.

எண்ணத்தினால் எதையும் உருவேற்றி ஈர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். இதற்காகவே கோயில்களில் லட்சார்ச்சனை, கோடி அர்ச்சனை என்ற சம்பிரதாயங்கள் ஏற்பட்டன. ரஜினி என்ற பெயரிலும் அப்படிதான் நுணுக்கமான சந்தைப் படுத்துதலின் அடிப்படையில் இந்தப் பெயர்கள் பரவலாக்கி, திரும்ப திரும்ப உச்சரிக்கப்பட்டு இன்று ஈர்ப்பு சக்தியுடன் நிற்கின்றன.

சபரிமலையும் சந்தைப் படுத்துதலின் வெற்றிதான். நான்கு கோடி பேர் நேரிடையாக சென்று ஒரு இடத்தில் குழுமி ஒருப் பெயரை உச்சரித்தால் அங்கு எத்தகைய ஆற்றல் நிகழும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த கூட்டம் இல்லை. எம்.என்.நம்பியார் தமிழகத்தில் இதனைப் பிரபலப்படுத்தினார். பல சினிமாப் பிரபலங்களை அழைத்து வந்து தரிசனம் செய்யவைத்தார். அய்யப்பனின் படங்களில் சூப்பர் ஸ்டார்கள் காசு வாங்காமல் நடித்தார்கள்.சபரிமலை பிரபலமானது. இது இன்னும் பிரபலமாகும். மக்கள் வருகை அதிகரிக்க அதிகரிக்க இது நிகழும்.ஆனால் அவர்களின் எண்ணங்கள் ஒழுக்கமுடன் இருக்கவேண்டும். இல்லையென்றால் புதுப்புது சர்சைகள் தான் நிகழும்.ஏற்கனவே மேல் சாந்தி என்ற தலைமைப் பூசாரி நியமனத்தில் பல்வேறு தகிடுத்தத்தங்கள் !

எது எப்படி இருந்தாலும் சபரிமலை தரிசனம் என்பதில் வாழ்வை மாற்றும் சூட்சுமங்கள் நிறைந்திருக்கின்றன.என்ன முறையாக கடைபிடிக்க வேண்டும்.

சபரிமலைக்கென்று கடுமையான கட்டுபாடுகள் இருக்கின்றன. நாற்பத்தெட்டு நாட்கள் கடுமையான விரதம் இருக்கவேண்டும். அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளிக்கவேண்டும். காட்டு பாதையில் உடல் குளிரைத் தாங்க தயாராகுதல்.நெற்றியில் திருநீறு ,சந்தனம் குங்குமம் அணிந்து அருகில் உள்ள கோயிலுக்கு செல்லவேண்டும். காலையில் குளிர் நீரில் குளிக்கும் போது தலையில் நீர் சேரும், திருநீறு அதனை உறிந்துவிடும். காலையில் 108 ஐயப்ப மந்திரங்கள் சொல்லவேண்டும். திரும்ப திரும்ப உச்சரிக்கும் போது உடலில் உள்ள ஏழு சுரப்பிகளில் அதிர்வு ஏற்பட்டு சுறுசுறுப்பாக பணியாற்றும். பயண வழியில் எந்த தட்பவெட்ப நிலையையும் தாங்குவதற்கு உடலைத் தயார்படுத்தும்.மாலையிலும் இதுபோல குளியல்,மந்திரம் கோயில் தரிசனம்.
இரண்டு வேளை மட்டும் உணவு. காலில் செருப்பு அணியக் கூடாது. பெண்களைப் பார்க்க கூடாது.அசைவம்,மது,புகைப் பக்கம் எட்டிப் பார்க்க கூடாது.குருசாமியின் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும். .இந்த கட்டுப்பாடுகளை 48 நாட்கள் கடைபிடிக்கவேண்டும்.பின்னர் பயணம் தொடங்கும்.

ஏன் நாற்பதெட்டு நாட்கள் ? அறிவியல் பூர்வமாக, உடலியல் ரீதியாக ஒரு செயலை உடல் முழுவதும் ஏற்றுக்கொள்ள 48 நாட்கள் ஆகும். இன்று நீங்கள் சாப்பிடும் உணவு பல்வேறு நிலைகளாக மாறி சுக்கிலம் என்ற சக்தி வாய்ந்த வித்தாக மாற 48 நாட்களாகின்றன. சுக்கிலத்தில் ஆரோக்கியமான மாற்றம் நிகழும் போது உங்களின் கருமையத்தில் ( Genetic Centre ) மாற்றம் வரும். இதனாலேயே சித்த மருந்துகள் கூட ஒரு மண்டலம்,அதாவது 48 நாட்கள் தரப்படுகின்றன.

ஒரு ஒழக்கத்தை நாற்பத்தெட்டு நாட்கள் கடைபிடித்தால் பின்னர் அது பழகி இயல்பாகவே தினசரி செயலுக்கு வந்துவிடும்.

சபரிமலைக்கான கட்டுபாடுகள் அழகான ஒழுக்கம். ஒரு முறையான வாழ்வியல் முறை. ஒருவன் உடலாலோ, மனதாலோ கெட்டுப் போய் இருந்தாலும் இந்த ஒழுக்கத்தை பின்பற்றும் போது 48 நாட்களில் அவனுள் ஒரு ஆரோக்கியமான மாற்றம் உடல்,மனம்,வாழ்வியல் அளவில் ஏற்பட சபரிமலை விரதங்கள் வ்ழி செய்கின்றன. சபரிமலைக்கு போய் வந்தால் மாற்றம் நிச்சயம் என்றிருந்தது. ஆம் ! இருந்தது ? ஆனால் இன்று நிலமை எப்படி இருக்கிறது ?

நான் ஒரு ஐந்து முறை சபரிமலை சென்று இருக்கிறேன். 2002 ஆம் ஆண்டில் என் முதல் பயணம்.

அப்போது நான் ஒரு வெத்து வெட்டு. உருப்படியான வேலை இல்லை. திரைப்பட இயக்குனர் ஆகும் முயற்சியில் வாழ்க்கை. அண்ணன் பிரசன்னாவும்,மகேஷும் தான் படியளக்கும் பகவானகள்.
எனது உணவு, உடை, செலவு, யமஹா பைக்,பெட்ரோல் எல்லாம் பிரசன்னா அண்ணன் தான்.அவரைப் போலவே என்னையும் ராஜா வீட்டுக் கன்னுக்குட்டியாக பார்த்துக்கொண்டார் .

மகேஷ் அண்ணன் அப்போது இந்தியாவின் முன்னனித் தொலைக்காட்சியில் தென்னிந்தியாவின் தலைமை அதிகாரியாக இருந்தார். சென்னைக்கு வந்தால் ஐந்து நட்சத்திர விடுதியில் தான் தங்குவார். அவர் வரும் போதெல்லாம் எனக்கும் அங்கு தான் ஜாகை.

பாருங்கள் ! இயற்கையின் விளையாட்டை. பாக்கெட்டில் பத்து காசு இல்லாத காலத்திலும் நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கிறேன். யார் யாருக்கு எங்கெங்கு யார் மூலமாக என்னென்ன கிடைக்க வேண்டுமோ, அவை கண்டிப்பாக வந்து சேரும்.இயற்கை ஒன்றும் நம்மை இங்கு சும்மா அனுப்பவில்லை !

அப்போது நான் கடவுளைப் பற்றிய குழப்பங்களில் இருந்தேன்.

கடவுள் உண்டா ? இல்லையா ? ஒன்றா ? பலவா ? இப்படி....

பிரசன்னா அண்ணன் மாலை போடுங்கள் என்றார்.

மறுபேச்சில்லை ! ஒரே இரவில் சாமியாகிப் போனேன்.

என்னைக் கன்னி சாமி என்றார்கள். எனக்கு அந்த உலகம் புதியதாக தோன்றியது. உண்மையில் உடலில் ஒரு புது விதமான அதிர்வுகள் தானாக வந்து ஒட்டிக் கொண்டன.அதிகாலையில் எழுந்து குளிப்பது ஒரு அலாதியான சுகம். முழுக்க முழுக்க சைவ உணவுதான். அதுவும் கன்னி சாமி என்றவுடன் தினந்தோறும் மூத்த சாமிகள் வீட்டில் இருந்து அழைப்பு இருக்கும்.

சுண்ட்ல, பாயாசம்,வித விதமான மரக்கறியுடன் உணவு. ஆஹா...அது ஒரு மாறுபட்ட அனுபவம்.
மாலை போட்டுக்கொண்டு ஆனந்த் திரையரங்கில் சர்வதேச திரைப்பட விழாவிற்கு போயிருந்தேன் . “ சம்ஸார ” என்றொரு திபெத்திய படம்.பத்து நிமிடத்திற்கு ஒரு பலான காட்சி வர...சாமி இதெல்லாம் பார்க்கலாமா ? கூடாதா என்ற குழ்ப்பம் வந்தது.

போதாக்குறைக்கு அத்தகைய காட்சி வரும்போதெல்லாம் பின்பக்கம் அமர்ந்திருந்த எம்.ஓ.பி வைஷ்ணவி கல்லூரி பெண்கள் விசிலடித்து “ஏய் அய்யப்ப சாமி ! வெளியிலே போ !” என்று கத்தினார்கள். எனக்கு தர்மசங்கடமாகி விட்டது.

அதற்கு பிறகு திரை அரங்கம் பக்கம் போகவில்லை. ஒரு குருசாமி நீ சினிமாக்காரன்,படம் பார்க்கலாம். பக்தி வேறு தொழில் வேறு என்றார். என்னால் அப்படி பார்க்க முடியவில்லை.

ஒரு பக்கம் மாலை போட்ட அனுபவம் ஒரு மகிழ்ச்சியான உணர்வைத் தந்திருந்தாலும். திரைப்பட விழாவில் கலந்துகொள்ள முடியாதது ஒருவித வருத்தத்தை தந்தது. இன்னொரு உறுத்தலும் சூழந்து கொண்டது.அது இருமுடிக் கட்டும் நாளில் நிகழ்ந்தது.

நாம் மதிக்கும், போற்றும் பெரியவர்கள் எல்லாம் சடாரென்று நம் காலில் வந்து விழுவார்கள். எனக்கு அதிர்ச்சியாக இருக்கும். என்னதான் மாலை போட்டுக் கொண்டு இருந்தாலும், பெரியவர்களை நாம் காலில் விழச் செய்யலாமா ?

சரி,அய்யப்பன் அவதாரமாக நம்மை பார்க்கிறார்கள் என்றே வைத்துக்கொண்டாலும்,உண்மையிலேயே நாம் பரிசுத்தமாக இருக்கிறோமா ?

இது ஒரு பெரியக் கேள்வி ?ஆமாம் ! இன்றைக்கு சபரிமலைக்கான கடுமையான விரதங்கள் பின்பற்றப் படுகிறதா என்றால், இல்லை என்று சொல்லலாம்.

பத்தில் எட்டு சாமி உதட்டில் சிகரெட்டோடு தான் திரிகிறது...??!!!!

சிகரேட் சாமி !???!!!!..

ஷீ போட்டு கொண்டு நடந்துவிட்டு என்ன செய்வது அலுவலகக் கட்டுப்பாடு என்கிறார்கள். சபரிமலை கட்டுப்பாடுகள் பழங்கதையாகி வருகிறது.

என்ன ?... மாலை போட்டுக் கொண்டால் சாமி என்ற ஒரு அடைமொழி கிடைக்கும். அவ்வளவுதான. வாழ்க்கையில் வேறெந்த மாற்றமும் இல்லை. சபரிமலை யாத்திரை கோவா பிக்னிக் போல மாறிவிட்டது.

சில உதாரணங்கள்.

நான் விகடன் பேப்பரில் பணிபுரிந்தபோது ரெட் ஹில்ஸ்சில் ஒரு மதுக்கடையில் “ இங்கு அய்யப்ப பக்தர்களுக்கு தனி கிளாஸ்” என்று அறிவிப்பு பலகையைத் மாட்டியிருந்தார்கள்.

புரசைவாக்கத்தில் இருமுடியெல்லாம் கட்டி நூற்றுக்கும் அதிகமான சாமிகள் புறப்பட தயாரான நிலையில் குருசாமியைக் காணவில்லை. அத்தனை நபர்களின் பணத்தையும் சுருட்டிக் கொண்டு ஆள் தலைமறைவாகிவிட்டார்.

வீரப்பன் அதிரடி விஜயக்குமார் சென்னை மாநகர காவல்துறை ஆணையாளராக இருந்தபோது ஒரு பெரிய விபச்சார கும்பலை பிடித்தார். அத்தனை பேரும் பயபக்தியோடு மாலைப் போட்டிருந்தனர்.

ஹூம் அதான் தொழில் வேறு ! பக்தி வேறல்லாவா ?

அப்போது விஜயகுமாரும் மாலை போட்டிருந்தார் என்பது தான் உச்சக் கட்ட நகைச்சுவை !

கோபத்தில் திட்டும் போது கூட என்ன சாமி....ம...யி.......!!! சாமி !...பு...டு...ங் !!! சாமி என்று திட்டுகிறார்கள்.

கறி வெட்டுகிறவர் மாலை போட்டு வெட்டுகிறார். காரணம் கேட்டால் இதுதான் என் தொழில். தொழிலுக்கும் பக்திக்கு சம்மந்தமில்லை. இதைவிட்டால் சோத்துக்கு என்ன வழி என்கிறார்.
சோத்துக்கு வழியில்லாத சூழலில் இது போன்ற பக்தி என்ன சாதிக்கப்போகிறது. சரி ஒரு மாதம் விரதம்.தொழிலை விட்டுவிட்டு விரதம் இருந்தால் அவனை அந்த சாமி பார்த்துக் கொள்ளாவிட்டால் என்ன சாமி ?

கேரளாவில் நுழைந்துவிட்டால் இன்னொரு கொடுமை. எடுத்ததெற்கெல்லாம் காசு தான். நான் தான் அன்றாடம் காய்ச்சியாக இருந்தபோது சென்றேன் அல்லவா. எரிமேலியில் இறங்கினோம். அவசரத்திற்கு கழிவறைக்கு சென்றேன். அவர்களின் நுழைவுக் கட்டணத்தைப் பார்த்தவுடன். எனக்கு வரவேண்டியது வரவில்லை. என் நண்பருக்கு வந்தது நிற்கவில்லை !

எரிமேலியில் இந்து – இஸ்லாமிய நட்புக்கு ஒரு அழகிய உதாரணம்.

பாபர் சாமி என்பவர் ஐயப்பனின் பால்ய கால நண்பராம்.அவரின் மசூதி இருக்கிறது. இதைப் பார்த்தவுடன் எனக்குள் ஒரு இனம் புரியாத ஆனந்தம் வந்தது.

சுமார் 400 கோடி சம்பாதிக்கும் ஒரு யாத்திரை தளத்தின் சுத்தம் சுகாதாரம் பற்றி யாரும் கண்டுக் கொள்ளவில்லை.

மலைபாதையின் பயணம் எனக்கு பரவசம் தரும். நான் மட்டும் மந்தையில் இருந்து பிரிந்த ஆட்டுக் குட்டியைப் போல தனியே சென்றுவிடுவேன். பெரும்பாலும் அமைதிதான். வழி எங்கும் கப்பா கஞ்சி. கட்டன் சாய் போதும். எங்கேயாவது பசித்தால் ஏதாவது ஒரு குழு கஞ்சி ஊத்தி கொண்டிருக்கும். பரதேசி வாழ்க்கை. உண்மையில் இன்பம் ஊட்டக் கூடிய அனுபவம்.

ஆனால் நாளடைவில் வழியோரக் கடைகள் அதிகரித்து மலைப்பாதையின் அனுபவத்தை கெடுத்துவிட்டன. உணவுக்கு நீருக்கென அனுமதி பெற்று சகலத்தையும் வழங்குகிறது நடைப் பாதை கடைகள்.எல்லாம் யானை விலை குதிரை விலை. தரை மட்டத்தில் இருந்து 30000 அடி உயரத்தில் இருக்கும் பத்ரிநாத்தில் கூட பத்து ரூபாய்க்கு மூன்று ரொட்டி கிடைக்கிறது. ஒரு சிகரேட் கடையை மதுக் கடையைப் பார்க்க முடியாது.

ஆனால் இங்கு எல்லாம் தலை கீழ் . பணம் ! பணம் ! பணம் !.

சிகரெட் ,பான் பராக் ,பீடி, கஞ்சா, சுருட்டு இன்னும் என்னனென்ன வேண்டுமோ அதெல்லாம் இங்கு கிடைக்கிறது. சாமிகள் பிடிக்க கூடாது என்பதைவிட, புகை காட்டில் வசிக்கும் விலங்குகளுக்கு தொந்தரவுதானே.

மேலும் அய்யப்ப சாமிகள் எதைக் கொண்டு இந்த லெளகீகத்தை வாங்குவார்கள். வழிச் செலவுக்கென காலில் விழுந்து கொடுத்தனுப்புவார்களே அந்தப் பணம்தான்.

பக்தி நெறிக்குரிய வழிமுறைகளை, கட்டுப் பாடுகளை கடைபிடிக்காமல், சும்மா ஒரு அனுபவம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் அன்றாடம் காய்ச்சிகள் தங்கள் பணத்தை அங்கு சென்று கொட்டிவிட்டு வருகிறார்கள். அதே நேரம் குறைந்தது 400 கோடி ரூபாய் சம்பாதிக்கும் ஒரு தேவஸ்தானம் இத்தகைய பக்தர்களுக்கு எந்த வசதியும் செய்து தருவதில்லை. அவ்வளவு தூரம் நடந்து சென்று வழியில், அல்லது சாலை ஓரங்களில் தான் ஓய்வெடுக்கவேண்டும்.

வசதி செய்து தந்தால் ஐதீகம் மாறிவிடுமாம் ! திருட்டுத் தனமாக சிகரேட், பான் பராக் விற்க அனுமதி தரும் ஐதீகம், யாத்ரீகர்களுக்கு நல்ல வசதி செய்து தர அனுமதிக்காது என்பது நகைச்சுவைதான்.
பக்தி நெறி கூடாது என்பதில்லை. அது முறையாக இருக்கவேண்டும். இந்தியாவின் அடையாளமே ஆன்மிகம் தான். அது எந்த விதத்திலும் மாசுபடக் கூடாது. நாம் முன்பே பார்த்தோம் எண்ணம் தான் வான் காந்தத்தில் பதிவாகி செயல் படுகிறது என்று. சபரிமலை யாத்திரையில் வழிமுறைகளை வலிமையாக கடைபிடிக்கும் போது நல்ல எண்ணங்களே எழும்.

நல்ல எண்ணங்கள் வலிமையாக வான் காந்தத்தில் பதிந்து நல்லப் பலன்களைத் தரும்.
இப்படி தில்லாங்கடி செயல்கள் அதிகரிக்கும்போது அதற்குரிய பதிவுகளே வான் காந்தத்தில் பதிந்து அங்கு வரும் ஒழுக்கமான பக்தர்களின் கருமையத்திலும் இதுவே பிரதிபலிக்கும்.

சபரிமலையின் ஆற்றலுக்கு குழுமும் பக்தர்களின் எண்ண ஆற்றல் மட்டுமே காரணமா?

இன்னொன்றும் இருக்கிறது. அது தான் சதுரகிரி மலை.

திரு வில்லிப்புத்தூரில் இருந்து 25 கிலோமீட்டர். வத்தியிராப்பு என்ற ஊரில் இருந்து 5 கிலோ மீட்டர். வற்றாயிருப்பு என்றால் பேராற்றல், பேரறறிவு என்று அர்த்தம்.வற்றாயிருப்பு தான் வத்தியாரப்பு என்றாகியதோ என்னவோ. இது உணர்ந்தால் பெரும் ஆற்றல் களம். முழுக்க முழுக்க மூலிகை மணம் கமழும் மலை. தென் கைலாயம் என்று வரலாறு போற்றும் இங்கு அகத்தியர் முதல் பதினென் சித்தர்கள் வாசம் புரிந்துள்ளனர். இங்கு ஆற்றல் மிகு சித்தர்களின் ஜீவ சமாதிகள் நிரம்பி கிடக்கின்றன.இங்கிருந்த அளப்பரிய ஆற்றல் கிளர்ந்தெழுந்து வான் காந்தம் முழுவதும் பரவுவதாக ,இங்கு தரிசித்த யோகிகளும், ஆன்மிகப் பயிற்சியாளர்களும் சொல்கின்றனர்.

சரி சபரிமலைக்கும் சதுரகிரிக்கும் என்ன சம்மந்தம்.

சதுரகிரி மலையின் நேர் பின்புறம் கேரளா எல்லையில் தான் சபரிகிரி அமைந்துள்ளது. சபரிகிரி மேல ஏறிப் பார்த்தால் அந்த பக்கம் சதுரகிரி தெரியும்.சதுரகிரி மேலிருந்துப் பார்த்தால் சபரிகிரி தெரியும்.

இங்கு கயாஸ் தியரியை வைத்து பாருங்கள் ! என்ன சம்மந்தம் என்று உங்களுக்கே விளங்கும்.

ஹரியும் சிவனும் ஒண்ணு ! இத அறியாதவன் வாயில மண்ணு. சிவகாமியின் சபதத்தில் கல்கியின் வரிகள் நினைவுக்கு வருகிறதா ?
சாமியே சரணம் ஐயப்பா !

2 comments:

  1. Nice updates Mr.Raj :)Swaamiyeh Saranam Ayyappa ;)

    ReplyDelete
  2. ராஜ் , அழகிய கட்டுரை , நான் இதுவரை சபரி மலை சென்றதில்லை , ஏனோ அதற்க்கான எண்ணமே ஏற்ப்படவில்லை , ஏனெனில் , இந்த சாமிகளுக்கு தனி கிளாஸ் முறையை கண்ட பிறகுதான் ! என் மன எண்ணங்களை உங்கள் வார்த்தைகளில் காண்கிறேன் .

    ஒரே ஒரு விஷயத்தில் முரண் படுகிறேன் , இறைச்சி வெட்டும் அன்பர் மாலை போட்டாலும் அவர் தொழில் பார்ப்பதில் தவறேதும் இல்லை , இதற்க்கு ஒரு கதையே உள்ளது ,

    ஒரு முனிவர் கடும் தவத்தில் இருந்த பொழுது மரத்திலிருந்த கொக்கு , கக்கா போய் விட , முனிவர் கோபமாக அந்த பறவையை பார்க்க அது பொசுங்கி விட்டதாம் ! இவருக்கு பெரிய சந்தோசம் , நம் தியானத்தின் விளைவாக வலிமை பெற்றுவிட்டோம் என்ற இறுமாப்பில் நகரை நோக்கி நடைபோடுகிறார் .

    ஒரு வீட்டின் முன் நின்றுகொண்டு , க்கும் ,க்கும் ன்னு தொண்டையை செருமிக்கொண்டே , வீட்ல யாரு , நான் முனிவன் வந்திருக்கிறேன் , அன்னம் கொண்டு வாங்கள் ன்னு மிரட்டலாக சொல்ல , உள்ளிருந்த பெண் சிறிது நேரம் பொறுங்கள் வருகிறேன் என பதில் அளிக்கிறாள் , முனிவருக்கோ கோபம் , என்னைய காக்க வைக்கிறாய் நான் யாரென இபோழுது காண்பிக்கிறேன் பார் என்று சொல்லி , கோபமாக அந்த வீட்டை எரித்துவிடுவது போல பார்க்கிறார் .

    வெளியே வந்த பெண் , முனிவனைப் பார்த்து "என்னைக் கொக்கென நினைத்தாயோ கொங்கணவா" ன்னு சொல்ல முனிவன் ஆடிபோய் , சில நிமிடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இவளுக்கு எப்படி தெரிந்தது என்று பிரமித்து அந்தப் பெண்ணின் காலில் விழுந்து தனக்கு ஞானம் உபதேசிக்கச் சொல்கிறார் . அந்த பெண் , நான் என் கணவனுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த பொழுது என்னை அழைத்தீர்கள் , என் கணவனுக்கு பணிவிடை செய்வதாய் தவிர வேறு எதுவும் இவ்வுலகில் எனக்கு பெரிதல்ல , என் கடமை செவ்வனே செய்வதே என்னை ஞானமடைய செய்யும், என்னைவிட இன்னும் சிறந்தவர் அடுத்த ஊரில் இருக்கிறார் , அவரை போய் சந்தியுங்கள் அவர்
    உங்களக்கு ஏதும் வழிகாட்டுவார் என்கிறாள் .

    முனிவனுக்கோத் , ஆனந்தம் , பதற்றம் ,பரவசம் ஒரு கலைவையான உணர்வுகளோடு அந்த ஞானி யார் என்று காண ஓடுகிறார் . பாருங்கள் கடுமையான தவம் புரிந்து கிடைத்த பலனைவிட தன கடமையை சிறப்பாக செய்த பெண்ணுக்கே இவளு வலிமை என்றால் , இவள் சுட்டிக்காட்டும் அந்த மனிதர் எவளவு சக்தி வாய்ந்தவராக இருப்பார் , அவரிடம் நம் தேடலுக்கான விடை இருக்கும் என்று ஓட்டமும் நடையுமாக ஓடுகிறார் .

    அந்த பெண் குறிப்பிட்ட இடத்தில , யாரையும் காணோம் , ஒரே ஒரு இறைசிகடை மட்டுமே இருக்கிறது அங்கேயும் , ஒரே ஒருவர் மட்டும் கறி வெட்டிக்கொண்டு இருக்கிறார் , முனிவருக்கோ இயலாமை , அந்த பெண்ணின் மீது ஆத்திரம் கொப்பளிக்க அந்த இறைச்சி வேட்டுபவனை பார்க்க , அவனோ வெகு சாந்தமாக , முனிவரே , உங்களை இங்கு அனுப்பியது அந்த ஊரில் வசிக்கும் ஒரு பத்தினி தானே , என்று வினவ , (கவனிக்க இது நடந்தது செல் போன் யுகமல்ல ) முனிவன் அவன் காலில் விழுந்து , அவரிடமே சீடனாகிறான் !

    so, நாம் செயும் தொழிலில் எந்த பாதகமுமில்லை , எந்த தன்மையில் இருந்து நாம் அதை செய்கிறோம் என்பதே கவனிக்கவேண்டும் ! உங்களக்கு தெரிந்திருக்கும் , தியானம் என்பது தனியாக செய்வதல்ல , செயும் செயல் அனைத்தும் தியானமாக மாறவேண்டும் , அதுவே விடுதலைக்கு வழி !

    சுருக்கமாக , வாழ்வில் தியானம் செய்யாமல் , வாழ்வதையே
    தியானமாக செய்யவேண்டும் !

    பின்குறிப்பு : ராஜ் , எனக்குத் தெரிந்து கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலையை தான் தென் கயிலாயம் என்று அழைக்கிறார்கள் , மொத்தம் ஏழு மலைகள் , அதில் ஏழாவது மலையை சிவனாகவே வழிபடுகிறார்கள் (ஏறுவது சற்று சிரமம் , மலை என்றால் மலை தான் , பாதையோ படிக்கட்டுகளோ கிடையாது ) அடியேன் ஒருமுறை சென்று வந்திருக்கிறேன் .

    தற்பொழுது இந்த மலை ஏறுவதற்கே விரத தீக்ஷை அளித்து அழைத்து செல்கிறார்கள் . விரத தீக்ஷை எடுப்பதற்கே நாம் அங்கு சென்று மூன்று நாட்கள் தங்கிதான் எடுக்க வேண்டுமாம் , மேலும் 48 நாட்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளோடு விரதமிருந்து மலை ஏறுகின்றனர்.

    என்ன வருகிறீர்களா ஒரு முறை சென்று வருவோம் !

    ஓம் நம சிவாய !

    ReplyDelete

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...