Tuesday, December 7, 2010

கல்யாணம் ஆனவர்களுக்கு மட்டும் ! (கண்டிப்பாக )

கல்யாணமானவர்களுக்கான சமாச்சாரங்களை கல்யாணம் ஆகாதவன் எழுதுவது என்பது கொஞ்சம் சிரமமான செயல்தான், இருந்தாலும் சில தகவல்களை அறிந்துகொண்டு தெரிவிக்க கல்யாணம் ஆகியிருக்க தேவையில்லை என்பதால் இதை எழுதுகிறேன்.

கைப்பேசியில் ஜல்லி அடிப்பதென்றால் எனக்கு திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா சாப்பிடுவது மாதிரி.அதுவும் என் தாய்த்தமிழ் இளம்பெண்களிடம் வறுபடுவது என்றால் எனக்கு திகட்ட திகட்ட கொண்டாட்டம்தான்.

நான் அதிகம் வம்பளப்பது என்னைவிட புத்திசாலிப் பெண்களிடம்..ஹி..ஹி..காரணம் பூவோடு சேர்ந்து இந்த நாரும் மணக்கும் என்பதில் நம்பிக்கை.பொது அறிவை வளர்க்க என்று வைத்துக்கொள்ளுங்கள்.

எனது பள்ளிப் பருவத் தோழி ப்ரியா.மருத்துவக்கல்லூரியில் முதுநிலை இறுதியாண்டு படித்துகொண்டே ஒரு சிறிய தனியார் மருத்துவமனையிலும் பணியாற்றுகிறார்.வாரம் ஒருமுறையாவது தொலைபேசி விடுவார். சமீபகாலமாக அவ்வளவு பேசுவதில்லை.நம்மிடம் பேசாமல் அவருக்கு அப்படியென்ன வேலை. ஒரு பரபரப்பான காலையில் ப்ரியாவை தொந்தரவு செய்தேன்.

“இல்லை ராஜ் ! இப்ப என்னை Maternity Ward - ல போட்டுட்டாங்க அதனால நேரம் காலம் பார்க்காம வேலை செய்யவேண்டியதா இருக்கு. ஒருநாளைக்கு குறைந்தது பத்து சிசேரியன் நடக்கிறது, இதில் எங்கிருந்து நேரம் இருக்கிறது உன்னிடம் கதைக்க” என்றார்.

“ பத்து சிசேரியனா ? அப்படினா உங்கள் மருத்துவமனையில் தினம் எத்தனைக் குழந்தைகள் பிறக்கின்றன” ஆவலுடன் கேட்டேன்.

“என்ன பத்தில் இருந்து பதினைந்து வரை...”

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பிறக்கும் மொத்தக் குழந்தைகளிலோ, அல்லது ஒரு எழுபது சதவீதம் குழந்தைகளோ சிசேரியன் என்றால் குழந்தைப் பிறப்பு அவ்வளவு சிரமமா ?

“இல்லை ரொம்ப ஈசி ? கொஞ்சம் மயக்கமருந்து கொடுத்து அம்மாவை தூங்கசொல்லிவிட்டு ,பத்து ரூபாய் பிளேடில் கீறினால் போதும் ! வயிற்றில் உதைத்து கொண்டிருந்த பாப்பா கைகளில் உதைக்கும்” என்று பிரியா சொன்ன விதம் ஏதோ பிளேடு பக்கிரி தான் பிக்பாக்கெட் அடித்த கதையை சொல்வதுபோல் தோன்றியது “

“ஹூம்...! என்ன செய்வது குழந்தைபிறப்பு இயற்கையாக நடந்துவிட்டால், வெறும் மூன்று நாட்களில் வீட்டிற்கு திரும்பலாம். மருத்துவமனை செலவு இரண்டாயிரமோ அல்லது மூன்றாயிரமோ தான் வரும், சிசேரியன் என்றால் குறைந்தது இருபத்தைந்தாயிரமாவது மொய் எழுதவேண்டியிருக்கும்....பத்து சிசேரியன் என்றால் குறைந்தது ஒருநாளைக்கு இரண்டரை லட்சம்....அட நல்லாதான் யாவாராம் பண்றீக” என்று நக்கலடித்தேன்.
பிரியாவுக்கு மூக்கு மேல் கோபம் வந்தது.

“ ஹலோ மிஸ்டர்....என்னம்மோ நாங்க துட்டுக்காக Cut and Paste பண்ணுவது போல Build up செய்யறீங்க...இப்ப பாதி பொம்ளைங்க Condition சிசேரியன் பண்ற அளவுல தான் இருக்கு....இல்லை மீதி பேரு....வலிக்கு பயந்துட்டு சிசேரியன்ல குழந்தைப் பெத்துக்கவே விரும்பறாங்க…” ( 10.10.10 தேதியன்று உலகின் 80% பிறப்பு சிசேரியனாம் ) என்று போனில் பொறிந்த பிரியாவின் முகம் எப்படி இருக்கும் என்று நினைத்துபார்க்க என் உதட்டில் புன்னகை மலர்ந்தது.

சிசேரியன் என்கிற சி செக்‌ஷன்,இயற்கையான பிள்ளைபேறு தடையாகி, ஆபத்தான சூழலில் கைகொடுக்கும் ஒரு நவீன மருத்துவமுறை. ஆனால் அது இப்போது ஒரு நாகரீகமாகவே மாறிவருகிறது. ஆம் ! எனக்கு சர்க்கரை இருக்கிறது ! இரத்தகொதிப்பு இருக்கிறது ! நேத்துதான் பைபாஸ் பண்ணி பழம் கொடுத்து அனுப்பினார்கள், என்று பேசுவது எப்படி பெருமையோ, அதே போல எனக்கு சிசேரியன் என்று சொல்லிக் கொள்வதும் பெருமையான விஷயமாகிவிட்டது.

இந்தியாவில் சுமார் 18- 25% பிறப்புகள் சிசேரியன் என்றாலும்,சில நாடுகளில் 50 -50% பிஸ்கேட் அளவிற்கு சிசேரியன் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

இதை எப்படிக் குறைக்கலாம் என்று ரூம் போட்டு யோசித்துகொண்டிருக்கிறார் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் டாக்டர். மார்கரெட் சேன்.

சிசேரியன் தேவைப்பாடாத சூழலில் வலுக்கட்டாயமாக செய்வது இரண்டு விதத்தில் பாதிக்கும். ஒன்று தாயின் ஆரோக்கியம் கெடும். இரண்டு பிறக்கும் பிள்ளையின் உளவியலை பாதிக்கும். அதாவது குழந்தை பிறக்கும் காலம் நெருங்கும்போது உள்ளுணர்வாக அதன் வெளியேறும் பாதையை பற்றி உணர்ந்து,நாம் இப்படி தான் வெளியே செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும்,திடீரென பிளேடு போட்டு பாதையை மாற்றினால் வயிற்றில் இருக்கும் பச்சைபிள்ளைக் குழம்பிபோகும். நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கிறதே என்ற முரண்பட்ட எண்ணம் அங்கே உருவாகும். மேலும் பிரசவ காலத்தில் தாயின் வேதனைகள் ஒரு அலை இயக்கமாக குழந்தைகள் மனதில் பதியும்.மேலும் C-Section பண்ணும்போது பயன்படுத்தபடும் ஆயுதங்கள், பூ போல வர வேண்டிய குழந்தைக்கு ஒரு மிரட்சியான உணர்வை தந்து மிரட்டும். இப்போது சொல்லுங்கள் உங்கள் செல்லக் குழந்தை உளவியல் ரீதியாக பயப்பட உங்கள் தாய்மை உணர்வு அனுமதிக்குமா?

“..........................................?!!!!! ”

கவலைபடாதீர்கள் ! என்னிளம் தாய்மார்களே....உங்களை இந்த கவலையில் இருந்து மீட்க வருகிறது ஹிப்னோபர்த்திங் என்றொரு உளவியல் பயிற்சி.

அதென்ன ஹிப்னோபர்த்திங்....?.

“ஹய்யா பிள்ளை இனி நாங்க பெத்துக்க தேவலையா? ”என்று குதிக்கும் இளம் தோழிகளே ஒரு நிமிடம்...!..நாட்டுக்கு ராணியாக இருந்தாலும் வீட்டுக்கு பிள்ளையை நீங்கள்தான் பெற்றுதரவேண்டும்..! ஆனால் குறைந்த வலியோடு நிறைந்த ஜாலியான அனுபவமாக,அதாவது பிள்ளையார் கோயிலுக்கு சென்று சுண்டல் வாங்கி சாப்பிடுவது எப்படி சுலபமோ அத்தனை சுலமாக....? இல்லை ! இல்லை! சுகமாக அத்தனை சுலமாக பிள்ளை பெற்றுக்கொள்ளும் நுட்பம்தான் ஹிப்னோபர்த்திங்.

அந்த காலத்தில் கூட்டு குடும்பமாக இருக்கும். நாலைந்து பிள்ளை பெற்ற பெரிய மனுஷிகள் நாலு பேர் இருப்பார்கள்.அதைவிட பழம் தின்று கொட்டை போட்ட பாட்டி என்ற ஒரு உறவு இருக்கும்.கர்ப்பிணிகள் வீட்டில் இருக்கும்போது,இந்த சொந்த பந்தங்கள் சூழ்ந்தகொண்டு சொந்த கதை சோகக் கதையோட பத்து பிள்ளை பெத்த கதையும் சொல்லி திரியும். புதிதாக கருத்தரித்த பெண்கள் இந்த கதைகளை அதில் உள்ள சவால்களை கேட்டுகொண்டு வரும்போது உளவியல் ரீதியாக பிள்ளை பேறுக்கு தயாராகிவிடுவார்கள். அந்த பரவசமான அனுபவத்தை உணரவேண்டும் என்ற ஆவல் மேலோங்கி நிற்கும். மேலும் பிரசவங்கள் பெண்கள் பிறந்த வீட்டில் நிகழ்ந்தன.ஏனெனில் முன்பின் தெரியாத மருத்துவமனை சூழலில், பிள்ளை பெற்றுக் கொள்வதை விட வீட்டில் பெண்களின் மனோநிலை மிக இளகுவாக இருக்கும். குழந்தை எந்தவிதமான சிரமும் இன்றி வெளியேறி விடும் காலப்போக்கில் வீட்டில் நிகழும் பிரசவங்களில் சரியான அனுபவமின்றி அணுகியதால் உயிரழப்புகள் நிகழ்ந்தன. அதன் பின்பு மருத்துவமனைகளில் பெற்றுக்கொள்வதுதான் பாதுகாப்பு என்று வலியுறுத்தப்பட்டது.

கூட்டுக் குடும்ப உறவுகள் முறிந்தபின் பெரும்பாலும் தனிமைதான்.இறுக்கமான மனநிலை,மற்றும் தேவையற்ற தகவல்களை மனதில் போட்டு உளைத்துகொள்ள நிறைய சந்தர்ப்பங்கள் வர, பிள்ளைப்பேறு கடினமான ஒன்றாகிவிட்டது.

சரி இது வர்த்தக உலகம். இதில் என்ன செய்யமுடியும் !

எளிதான பிள்ளைப்பேறுக்கு யோகாவெல்லாம் இருக்கிறதே என்கிறீர்களா ? அதைவிட மிகவும் சுலபமான உளவியல் முறைதான் ஹிப்னோபர்த்திங்.

பிரசவங்களின் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம், பிரசவத்தை பற்றிய தேவையற்ற அச்சம்,தவறான தகவல்களை ஆழ்மனதில் பதிந்து கொள்வது. தேவையற்ற குழப்பங்கள், இதன் தொடர்ச்சியாக வரும் மன அழுத்தம்தான்.

சரி...! ஹிப்னோபர்த்திங்கில் என்ன நடைபெறுகிறது. இந்தியாவில் ஹிப்னோபர்த்திங் பயிற்சி தருவதில் முன்னனி வகிக்கும் உளவியல் சிகிச்சை நிபுணர் திருமதி.அனுராதா ஜெயச்சந்தர் ( info@basixinc.org ) என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

மனதில் இரண்டு வகை உண்டு. ஒன்று மேல் மனம், இதனை (Conscious Mind ) என்றும், இரண்டாவது ஆழ்மனம் (Sub Conscious Mind ).மேல் மனம் எப்போது கூடுதல் எச்சரிக்கை உணர்வோடு செயல் படும்.எது செய்தாலும் நூறு கேள்வி கேட்கும். இப்படி கேள்வி கேட்பதும் அதீத எச்சரிக்கை உணர்வும் சில நேரங்களில் இயல்பான பிள்ளை பேறுக்கு தடையாகிவிடும். அதாவது குழந்தை வெளியேறும் போது அதன் பாதை இலகுவாகி வழி விட வேண்டும்.மனம் இறுக்கமாகும் போது பாதை இறுக பிள்ளை பேறு சிரமமாகிவிடுகிறது.

ஏன் எனில் காலம் காலமாக பிள்ளை பேறு பற்றி கேள்விப் படும் தகவல்கள், பார்த்த அனுபவங்கள் உங்கள் மேல் மனதில் ஒரு தவறான பிம்பத்தை உண்டாக்கி அதனை ஆழ் மனதில் பதிய செய்கிறது. ஆழ்மனதில் பதியபட்ட அச்சம் தான் இத்தகைய வலிமிகு பிள்ளைப் பேற்றுக்கெல்லாம் காரணம்.

ஆனால் ஆழ்மனதின் ஒரு ஆச்சர்யதக்க இயல்பு என்னவெனில் அதில் நீங்கள் ஒரு நம்பிக்கையான பதிவை ஏற்படுத்திவிட்டீர்கள் எனில், அது கேள்வி கேட்காமல் சொன்னதை செய்யும்.
உதாரணமாக ஹிப்னோ பர்த்திங் பயிற்சியின் போது இந்த ஆழ்மனதில் குழந்தை பேறு, குழந்தை , உறவுகள் பற்றி மகிழ்ச்சியான மற்றும் மென்மையான தகவல்கள் பதியப்படும். தொடர் பயிற்சியில் வயிற்றில் உள்ள குழந்தையோடு தாய் பேசவும், அதற்கு குழந்தை ஒத்துழைப்பதையும் அனுபவப்பூர்வமாக உணரமுடியும் பிரசவகாலத்தில் அதே உணர்வோடு குழந்தையோ மானசீகமாக உரையாடி வலியின்றி,சிரமமின்றி வெளியே கொண்டு வரமுடியும்.

ஹிப்னோபர்த்திங் உளவியல்ரீதியான ஒரு அணுகுமுறை.இப்பயிற்சி பல்வேறு நிலைகளில் மனோவசிய நுட்பத்தின் அடிப்படையில் தரப்படுகிறது.

முதல் நிலை : தேவையற்ற எண்ணங்களை போக்குவது ( De Conditioning the Mind ).கருவுற்ற தம்பதிகளிடம் பேசி அவர்கள் மனதில் கர்ப்பம் பிள்ளைபேறு பற்றிய அச்சம் மற்றும் சந்தேகங்களை ஹிப்னோஸிஸ் மூலம் நீக்குவது.

இரண்டாவது நிலை : எண்ணத்தை நெறிப்படுத்துவது ( Re Conditioning the Mind ) கர்ப்பம் குறித்து ஆரோக்கியமான எண்ணங்களை மனதில் பதியசெய்வது.

மூன்றாவது நிலை : மூச்சு பயிற்சி உட்பட எளியமுறையில் உடல்வலிமை காக்கும் பயிற்சிகள்.

நான்காவது நிலை : வயிற்றில் உள்ள குழந்தையுடன் மானசிகமாக பேசுவது. நாம் புராணக்கதைகளில், அபிமன்யூ சக்கரவியூகம் பற்றி அறிந்த கதை படித்துள்ளோம் அல்லவா அதுபோலதான் இதுவும். ஆச்சர்யத்தக்க செய்தி என்னவெனில் நீங்கள் மானசீகமாக பேசத்தொடங்கிய சில நாட்களில் உங்கள் செல்லபிள்ளை நீங்கள் சொல்வதை கேட்பதை அசைவின் மூலம் உணரமுடியம். கதையல்ல நிஜம்...உங்கள் குரல் அல்லது உங்கள் கணவரின் குரலை கேட்கும்போது வயிற்றில் குழந்தையின் அசைவின் மூலம் அதன் செயல்பாட்டை உணரமுடியும்.

ஐந்தாவது நிலை : மனோவசியகலையில் சுயவசியம் என்று ஒரு நுட்பம் உள்ளது. குறிபிட்ட முறையில் உங்கள் ஆழ்மனதை அறிந்து உங்களுக்கு தேவையான கட்டளைகளை தரமுடியும். ஏறக்குறைய நாம் தியானம் செய்து சங்கல்பம் மேற்க்கொள்வது போலதான். சுயவசிய முறையில் ஒரு கற்பனை பிள்ளை பேற்றை நீங்களே பாவனையில் அனுபவிக்கவேண்டும். அவ்வாறு அணுகும்போது அது எத்தனை சுலமாக அமையவேண்டுமோ அத்தனை சுலபமான நிகழ்வாக பாவனை செய்யுங்கள். நீங்கள் தரும் கட்டளைதான் உங்கள் ஆழ்மனம் செயல்படுத்தும்.

கவலைவேண்டாம் மேற்கண்ட நான்கு பயிற்சிக்கு பின் உங்கள் மனம் நீங்கள் சொல்வதை மட்டுமே கேட்கும் என்பதால்,பாவனையான பிள்ளைபேற்றில் ஆழ்மனதில் ஆரோக்கியமான பதிவை மட்டுமே செய்யும்.

ஒரு குழந்தை வெளிவரும் போது சிரமமின்றி ஒரு இணக்கமான சூழலில் தாயின் மனம் இருக்கும்போது, குழந்தை இயல்பாகவே மனவலிமை மற்றும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.ஹிப்னோபர்த்திங் மூலம் பிறக்கும் குழந்தைகள், சாதாரணமான முறையில் பிறக்கும் குழந்தைகளைவிட கூடுதல் அறிவுக் கூர்மையுடன் இருக்கும்.வயிற்றில் இருக்கும்போதே தாய் தன் குழந்தையுடன் உரையாட தொடங்கிவிடுவதால்,குழந்தை பிறந்தவுடன் பெற்றோரின் சொல்லுக்கு மறுவார்த்தை பேசாமல் சமர்த்தாக இருக்கிறது என்கிறார்கள் பிள்ளைப் பெற்றவர்கள்.

மேற்கத்திய நாடுகளில் பரவி வரும் இந்த ஹிப்னோ பர்த்திங் முறை இப்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. மேற்கத்திய நுட்பத்துடன் இந்தியாவின் பாரம்பர்யமான யோகமுறைகளையும் இணைத்து பயிற்சி தருவதால் வெளிநாட்டினரும் இங்கே படையெடுக்கின்றனர்.

குழந்தைகள் உலகின் எதிர்கால நட்சத்திரங்கள்.குழந்தை பெற்றுக்கொள்வதில் ஒரு திட்டமிடல் வேண்டும். “SUNDAY- னா ரெண்டு” என்ற அலைபாய்ந்துவிட்டு MONDAY வில் இருந்து ஓய்ந்துவிடக்கூடாது. குடும்பவாழ்க்கையை தேர்ந்தெடுத்தபின் எதிர்கால ஆரோக்கியமான நிர்மாணிக்கும் பொறுப்பும் ஆற்றலும் இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.

நீங்கள் உங்கள் வாரிசை உருவாக்கவில்லை, தேசத்தின் ஏன் உலகின் வருங்காலத் தலைவர்களை உருவாக்குகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன் !

4 comments:

  1. நல்ல நேரம் பார்த்து விட்டு சிசேரியன் செய்கிறார்கள் இப்போது. சிசேரியன் வேண்டாம் என்று 10 நாட்கள் டைம் கொடுத்தும் என் இளைய மகன் பிறக்காமல் போகவே இனிமேல் டைம் கொடுக்க முடியாது என்று டாக்டர்கள் சிசேரியன் செய்து அவனை எடுத்தார்கள்.பெரியவ்ன் நார்மலாக பிறந்தான்.மெடிக்கல் காரணங்களுக்காக சிசேரியன் செய்வது ஒத்து கொண்டுதான் ஆகணும்.

    ReplyDelete
  2. அருமையான கட்டுரை ராஜ் , ஆனா இதுக்கு என் கல்யாணம் ஆனவங்களுக்கு மட்டும் ன்னு பெரிய பீடிகை எல்லாம் ? அனைவரும் படித்து , குறிப்பாக , பெண்கள் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம் , என் தங்கை கருவுற்றிருக்கும் இந்த தருணத்தில் எனக்கும் இந்த கட்டுரை அவசியம் என்றே படுகிறது , நன்றி

    சரி அந்த கடவுள் கட்டுரையின் தொடர்ச்சி எப்பொழுது பதிவேற்றம் செய்வதாய் உத்தேசம்


    இரு சந்தேகம் : மக்கள் தொகையால் நம் பூமி வெடித்து விடும் நிலையில் உங்கள் தோழி வேலை புரியும் மருத்துவமனையில் மட்டும் ஒரு நாளில் பதினைந்து பிரசவம் என்றால் ? மொத்த தமிழ் நாட்டில் ? இந்தியாவில் ? உலகத்தில் ?

    அனைவரும் திருமணம் புரிந்து கண்டிப்பாக குழந்தை பெற்றுக்கொண்டுதான் ஆகவேண்டுமா ? என்னை மிகவும் யோசிக்க செயும் விஷயம் இதுதான் ! இதை வீட்டில் ஒரு நாள் சொல்லப்போக பிரளயமே வெடித்து விட்டது .

    ReplyDelete
  3. Valuable Information. Thanks for your Message.

    ReplyDelete

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...