Tuesday, March 8, 2011

வீரத்தை விளைவித்த தாய்.

2006 ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதி.

ஆங்கிலப் புத்தாண்டு.

வேதாத்ரி மகரிஷி தோற்றுவித்த மனவளக்கலை அன்பர்களுக்கு அன்று உலக சமாதான நாள். ஆழியாறில் உள்ள அறிவுத் திருக்கோயில் வளாகத்தில் அனைவரும் கூடி அருள்தந்தையின் புத்தாண்டு செய்தி கேட்பது வழக்கம்.அன்றும் ஆழியாறு வளாகத்தில் அன்பர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது.

96 வயது வேதாத்ரி மகரிஷி கம்பீரம் குறையாமல் உதவியாளர்களுடன் குழுமியிருந்த அன்பர்களை காண வந்தார்.

அனைவரும் மகரிஷியின் உரையைக் கேட்க ஆவலுடன் அவரையே நோக்கினார்கள். வாழ்க வளமுடன் என்று தனது வழக்கமான வாழ்த்துக்களுடன் ஆரம்பித்த சுவாமிஜி தனது பேச்சில் முக்கியமாக குறிப்பிட்டது, தனது நிலை குறித்து.

தான் வேண்டுதல் வேண்டாமை என்ற நிலையில் இருப்பதாக சுவாமிஜி கூறினார். நான் பிறந்த நோக்கம் என்னவோ, அது நிறைவேறியதாகவே கருதுகிறேன். நான் அறிந்தது எல்லாவற்றையும் அனைவருக்கும் ஒளிவு மறைவு இன்றி கற்பித்து விட்டேன். நான் வாழ்ந்த வாழ்க்கையில் நிறைவாக உணர்கிறேன் என்று குறிப்பிட வேதாத்ரி எதைக் குறிப்பிடுகிறார் என்று அன்பர்கள் உணர்ந்து கொண்டனர். அனைவரின் நெஞ்சிலு,ம் வேதனை சூழ்ந்தது.

மனவளக்கலை என்ற வலிமைமிகு வாழ்வியில் ,உளவியல் பயிற்சி பெற்று இருந்தாலும் வேதாத்ரியை அனைவரும் தனது தந்தையாக, தனது தாத்தாவாக, தம் குடும்பத்தினுள் ஒருவராகவே பாவித்து வந்தனர்.வேதாத்ரி மகரிஷி உலக வாழ்க்கையில் இருந்து விடைப் பெறப்போகிறார் என்பதை குறிப்பால் உணர்ந்த அன்பர்கள் அனைவரும் கதறி அழுதனர்.

சுவாமி சலனப்படவில்லை ஒரு புன்னகையுடன் அனைவரையும் வாழ்த்துவிட்டு தனடு அலுவலகத்திற்குள் சென்றுவிட்டார்,இதிலிருந்து சரியாக 87 வது நாளில் அதாவது 2006 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 28 –ம் தேதி தனது மண்ணுலக வாழ்வை முடித்துக் கொண்டார்.

சென்னையிக் ஹிந்து செய்தி தாள் அந்த மகானின் இறப்பை “Vethathiri Maharishi Dead “ என்று குறிப்பிட்டு இருந்தது.பல செய்தி தாள்கள் இறந்துவிட்டார் என்ற அர்த்தத்திலேயே குறிப்பிட்டு இருந்தன.

இலங்கையில் வீரகேசரி என்ற தமிழ் பத்திரிகை மட்டும் இவ்வாறு குறிப்பிட்டு இருந்தது “ மனவளக்கலையை தோற்றுவித்த அருள்தந்தை வேதாத்ரி மகரிஷி இன்று தனது மண்ணுலக பணியை முடித்துக்கொண்டு விண்ணுலகப் பணிக்கு பொறுப்பேற்று சென்றார் “

ஒரு இறப்பை, அதாவது ஒரு மகானின் இறப்பை இவ்வளவு அழகாக மனம் கோணாமல் தெய்வீகத் தன்மையுடன் எந்த பத்திரிகையும் குறிப்பிட்டு நான் பார்த்தது இல்லை.

இதுவல்ல செய்தி. வேதாத்ரி மகரிஷி இறப்பதற்கு முன்பு, அவர் சூட்சுமமாக குறிப்பிட்ட அதே ஜனவரி முதல் நாள், அவரின் உதவியாளர்கள் சுவாமிஜியிடம் ஏன் சுவாமி இப்படி பேசினீர்கள், எல்லாரும் துன்பத்தில் கதறுகிறார்கள் என்று கூற, சுவாமிஜி சற்று உணர்ச்சிவயப்பட்டு தான் ஏன் அப்படி கூறினேன் என்பதையும், பிறப்பு இறப்பு குறித்து சில வரிகளில் கூற, வலியில் இருந்த அனைவரின் முகத்திலும் ஒரு சாந்தமும்,ஏற்புத்தன்மையும் வந்தது.

வேதாத்ரி மகரிஷி அப்படி என்ன கூறினார் ?

இவ்வருடம் பிப்ரவரி மாதம் 20-ஆம் தேதி
வழக்கம் போல் காலையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது எனது இலங்கை தோழர் என்னை தொலைபேசியில் அழைத்து இந்த தகவலை கூறினார்.

” ராஜா…ஒரு துக்கச் செய்தி ….பார்வதி பாட்டி இறந்துவிட்டார் “

“ பார்வதி பாட்டி இறந்துவிட்டார் என்று சொல்லாதீர்கள்……பூவுலக வாழ்வை துறந்துவிட்டார் என்று சொல்லுங்கள்…..இது துக்கச் செய்தியல்ல..மகிழ்ச்சி செய்திதான்…..” என்றேன்.

இந்த பதிலைக் கேட்டதும் தோழருக்கு அதிர்ச்சி. இப்படிப்பட்ட பதில்கள் கண்டிப்பாக அதிர்ச்சி தரும் எனத் தெரியும்..எனினும் நான் போனில் விளக்கம் தரவில்லை. ”அண்ணே…நான் இலங்கை வருகிறேன்… நேரில் பேசலாம்..” என்று முடித்துகொண்டேன்.

பூவுலக வாழ்க்கை என்பது மிகவும் சாதாரணமானது.பிறப்பிற்கும் இறப்பிற்குமிடையேயானது.ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நோக்கமுடன் பிறக்கிறான்.

பார்வதியம்மாளின் பிறப்பு அத்தகையது.

இயேசுவின் பிறப்பிற்கு முன்பு மரியாளின் வாழ்க்கை வெகு சாதாரணமானது. இயேசுவின் பிறப்பு மரியாளை அர்த்தமாக்கியது.பார்வதியம்மாள் அம்மாளும் அவ்வாறுதான். அன்பான கணவன்.நான்கு பிள்ளைகள். மூன்று பிள்ளைகளின் பிறப்பை விட தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறப்பு பார்வதியம்மாளின் பிறப்பிற்கு அர்த்தம் தந்தது.

எப்போது பிரபாகரன் பிறந்தாரோ ..எப்போது பிரபாகரன் தமிழீழ தேசியத்தை முன்வைத்து போராடத் தொடங்கினாரோ அப்போதே பார்வதி அம்மாளின் இப்பிறப்பின் நோக்கம் நிறைவேறி விட்டது.

பார்வதி அம்மாள் பண்பாடு போற்றும் பெருந்தகையாகவே வாழ்ந்தார்.எந்தவொரு பிரச்சனையான சுழலிலும் அவர் தான் பிறந்த மண்ணை விட்டு அகலவில்லை.

ஒரு செய்தியாளனாக வாழ்ந்த காலத்தில் அந்த புனித ஆத்மாவை தரிசிக்கும் வாய்ப்பு ஒருமுறை கிட்டியது. 2000-ஆம் ஆண்டு ஒயாத அலைகள் முன்னெடுப்பு கடுமையாக இலங்கையில் நடைப்பெற்றுக்கொண்டிருந்த சுழலில், பார்வதியம்மாளை தமிழகத்தில் திருச்சி அருகே வசித்து வந்தார். அப்போதே அவருக்கு சிறு உடல் நலக்குறைவு ஏற்பட்டு முசிறி அருகே ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். செய்தியாளன் போர்வையில் சென்றதால் அன்பர்கள் என்னை பார்க்க அனுமதிக்கவில்லை.

எனினும் பாட்டியை பார்க்கவேண்டும் என்ற ஆவலில், செய்தியாளன் முகமூடியை கழற்றி வைத்துவிட்டு சென்றேன்.

உடல் உபாதையான சுழலிலும் அவர்களின் உபசரிப்பும், அன்பும் என்னை நெகிழச்செய்தன. நான் பிறந்தபோது என் தாய் வழி மற்றும் தந்தை வழி தாத்தா பாட்டிகளை நான் நேரில் பார்த்ததில்லை, பார்வதியம்மாளைப் பார்த்தவுடன், அவரின் அன்பில் திளைத்தபின்பு பாட்டிமார்கள் என்றால் இப்படித் தான் இருப்பார்கள் என்று உணர்ந்தேன். பார்வதியம்மாள் என்றழைப்பதைவிட பார்வதி பாட்டி என்றழைப்பது எனக்குள் ஒரு ஆனந்தத்தை தந்தது.

எனக்கு மட்டுமல்ல உலக தமிழுர்களுக்கு அவர் தாயாக என் வயதையோத்தவர்களுக்கு அன்பு பாட்டியாக அவர் திகழ்ந்தார்.

பார்வதி பாட்டியின் மற்ற பிள்ளைகள் வெளிநாட்டில் வாழ்ந்து வந்தாலும், அவர் தமிழ் தேசியத் தலைவருடன் இருப்பதையே விரும்பினார். தமிழ் தேசியத் தலைவருக்கும் தன் தாயுடன் இருப்பது புதிய சக்தியை தந்தது.

மே 2009 நிகழ்வுக்கு பின்னர், அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மிக சாதாரணமானது அல்ல. பார்வதி பாட்டியை கேடயாமாக வைத்து அவர்களின் உறவுகளுக்கு வலைவிரிக்க சிங்கள ராணுவம் திட்டமிட்டது. வயோதிகத்திலும், வலியிலும் அவர் அத்தகைய சூழ்ச்சிகளில் எச்சரிக்கையாக இருந்தார்.

பாட்டியை வைத்து அரசியல் பிழைப்புகளும் அரங்கெறியது.

அய்யா வேலுப்பிள்ளையின் மரணத்திற்கு பின்னர் அவரின் பாடு மிகவும் கொடுமையானது. பெற்றபிள்ளைகள் உடன் சென்று இறுதி நாட்களை கழிக்க முடியாத சூழல். உலகமே அந்த கர்மயோகியை தாங்கிக் கொள்ள நேசக்கரம் விரித்தது.

இந்தியாவை தவிர.

எனினும் தன் மீதுள்ள பாசத்தினால் மற்றவர்களுக்கு சிரமம் வந்துவிடக்கூடாது என்ற நல்லேண்ணம் காரணமாக அவர் அனைவரின் உதவியையும் மறுத்தார்.

தமிழக முதல்வர் கருணாநிதியின் துரோக விளையாட்டை மன்னித்தார்.

சான்றோர் சிவாஜிலிங்கம் மற்றும் மருத்துவர் மயிலேறும் பெருமாளின் அரவணைப்பில் சிகிச்சைப் பெற்று வந்தார். பார்வதியம்மாள் பற்றி செய்தி வரும்போதெல்லாம் என் மனம் இனம்புரியாத வலியில் சூழும். இறைவா ! இந்த வயதில் ஏன் அவரை மேலும் மேலும் வருத்துகிறாய் என்று மனம் பிராத்திக்கும்.

பார்வதி பாட்டி உடல் கூட்டில் இருந்து விடுதலைப் பெற்றது சாதாரண பார்வையில் ஒரு துயரமிகு நிகழ்வுதான்.ஆனால் பிறப்பு இறப்பிற்கு பின்னால் இருக்கும் செயலை உணர்ந்தால். பிறப்பும் இறப்பும் அர்த்தமற்றதாகிவிடும்.

கொழும்பு விமான நிலையத்தில் வரவேற்க வந்த என் தோழர் முதலில் கேட்ட கேள்விதான்.
”என்ன ராஜா நீங்கள்…..பார்வதி அம்மாள் இறந்துவிட்டார் என்றால்…வருத்தம் தெரிவிக்காமல்….,மகிழ்ச்சிதான் என்கிறீர்கள் “ கோபமோ எரிச்சலோ….ஏதோ ஒரு உணர்ச்சியில் கேட்டார்.

அவருக்கு நான் சொன்ன பதில், அருள்தந்தை வேதாத்ரி இறப்பிற்கு முன்னால் சொன்னதை அப்படியே சொன்னேன்.

வேதாத்ரி மகரிஷி தனது உலக சமாதான உரைக்குபின் அவரின் அறையில் சந்தித்த அன்பர்கள் கண்ணீருடன், சுவாமி ஏன் அப்படி பேசினீர்கள். நீங்கள் இன்னும் நீண்ட நாட்கள் வாழவேண்டும் என்று மன்றாட…வேதாத்ரி மகரிஷி இவ்வாறு கூறினார்.

“ எனக்கு இப்போது வயது 96 ஆகிறது. என்னுடைய வேலைகளை என்னால் செய்துகொள்ள முடியவில்லை. பலர் என்னை பல இடங்களில் இருந்து உதவிக்காக அழைக்கிறார்கள்.அழைத்த குரலுக்கு உடனடியாக செல்ல, இந்த உடல் கூடு வயோதிகத்தின் காரணமாக தடையாக இருக்கிறது. இந்த ஆன்மா இந்த கூட்டை விட்டு விட்டால் போது. இந்த பிரபஞ்சத்தொடு கலந்துவிடும்…பிறகு நீங்கள் எங்கிருந்து…யார் கூப்பிட்டாலும் அவர்களுடம் உடனடியாக வந்து கலந்துவிடுவேன்.கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன் என்றார்.

இது சாத்தியமா என்றால் சாத்தியம். சராசரி மனிதனால் புரிந்துகொள்ள, ஏற்றுக் கொள்ளமுடியாத செய்திதான் ஆனால்,யோக வாழ்விலும், ஆன்மிகப் பயிற்சியிலும் இருப்பவர்களுக்கு இதன் உண்மை விளங்கும்.

வேதாத்ரி மகரிஷியின் இந்த பதில் அன்பர்களுக்கு நிம்மதியையும்,நம்பிக்கையையும் தந்தது.வேதாத்ரி மகரிஷி மட்டுமல்ல பார்வதி பாட்டிக்கு இது பொருந்தும். உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான அன்பு நெஞ்சங்களின் வேண்டுதலுக்கு,அழைப்பிறகு அவரால் இந்த வயோதிகத்தின் காரணமாக செவி சாய்க்க முடியாத நிலை.

ஆனால் இப்போது அவர் பிரபஞ்சத்தில் கலந்தபின்பு கூப்பிட்ட குரலுக்கு அவரால் உடனடியாக வரமுடியும்.

பார்வதி பாட்டியின் பூவுலக வரவு தமிழ் தேசியக் கட்டமைப்பிற்காக, அதற்காக அவர் சுமந்து தந்த ஆன்மா தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன்.

மே 2009 நிகழ்வு அந்த கனவிற்கு பின்னடைவு தந்தாலும், பார்வதி பாட்டியின் விண்ணுலக பிரவேசம் ஒரு புதிய எழுச்சியை நிச்சய்ம் தரும்.

தமிழீழத்த, தமிழீழக்கனவை முன்வைத்து போராடு ஒவ்வொருவருக்கும் அந்த வீரதாயின் ஆற்றல் ஆன்மாவில் கலந்து செயல்படும்.

இன்று சர்வதேச மகளிர் தினம். முகாம்களில் வாழும் தமிழீழ மக்களின் வாழ்க்கை மலர்ச்சி அடைய,அந்த வீரத்தாயின் ஆற்றலுடன் சங்கல்பம் ஏற்போம்.

தமீழீழம் நிச்சயம் வெல்லும்.

No comments:

Post a Comment

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...