Sunday, March 13, 2011

நர்த்தகி

விஜய் டிவியின் தீவிர ரசிகரா நீங்கள் ?

இப்படிக்கு ரோஸ் என்று ஒரு நிகழ்ச்சியை பார்த்து இருப்பீர்கள்.

லட்சுமி அவர்கள் நடத்திய கதையல்ல நிஜத்தை கொஞ்சம் மாற்றம் செய்து, புதிய வடிவில் மனித உறவின் சிக்கல்களை அலசியவர் தான் இந்த ரோஸ்.

இந்த ரோஸ் ஒரு திருநங்கை என்பது எல்லோரும் அறிவோம்.

அவரின் தொலைக்காட்சி வெற்றிக்கதையை தொடர்ந்து. இன்னொரு முயற்சியிலும் இறங்கி இருக்கிறார். அது என்ன என்பதை இந்தக் கட்டுரையின் இறுதியில் பார்ப்போம்.

திருநங்கைகளைப் பற்றிய எண்ணம் நம் தமிழ் சமூகத்தில் எப்படி இருக்கிறது?

பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த நிலமை இப்போது இல்லை எனலாம். திருநங்கைகள் பற்றிய விழிப்புணர்வு சமூகத்திலும் ஏற்பட்டு இருக்கிறது. திருநங்கைகள் மத்தியிலும் ஏற்பட்டு இருக்கிறது.

நர்த்தகி திருநங்கைகள் குறித்த ஒரு நல்ல சினிமா.

அதன் படைப்பாக்கம் மற்றும் தொழில்நுட்பம் தவிர்த்து எடுத்துகொண்ட களம் என்ற நிலையிலேயே அதனை நல்ல சினிமா என்று வரவேற்கலாம்.

பெண் இயக்குனராக முதல் முயற்சி செய்துள்ள சகோதரி விஜயபத்மாவிற்கு ஒரு வந்தனம்.குறிப்பாக திருநங்கைகளை தமிழ்த் திரைப்படங்கள் ஒரு கேலிப் பார்வையில் சித்தரித்து வரும் சூழலில், அவர்களின் உலகை விவரிக்கும் இந்த முயற்சி ஒரு ஆரோக்கியமான படி.

சமூகத்தின் பல்வேறு தளங்களில் இயங்கி வரும் சேவகி திருநங்கை கல்கியின் வாழ்க்கை வரலாறாக ஒரு விவரண தோற்றமுடன் தொடங்குகிறது படம். மூன்று சகோதரிகளுடன் ஒரே ஆண் வாரிசாக பிறக்கும் கதையின் நாயகனின் சிறுவயது, அந்த வயதில் அவனுக்கு மனைவியாக நிச்சயக்கபட்ட சமகால தோழியின் காதல், குறும்புகள் என நகர்கிறது படம்.பிள்ளைப் பருவம் தாண்டி விடலைப் பருவம் வரும் போது அவனுள் பெண்ணிற்குரிய தன்மையை உணர்கிறான். உடலியல் ரீதியான மாற்றங்கள் அவன் குடும்பம், காதலில் ஏற்படுத்தும் விளைவுகள், தொடர்ந்து வீட்டை விட்டு வேளியேறி இரண்டு திருநங்கைகளால் அரவணைக்கப்படும் போது விரிவடைகிறது அரவாணிகளின் அந்தரங்க உலகம். இறுதியில் அவன் கல்கியாக் மாறி கலையில் எத்தகைய சாதனை புரிகிறான் என்பதோடு முடிகிறது திரைப்படம்.

விடலை நாயகனாக நடித்திருக்கும் அஸ்வின் மற்றும் நாயகி, சிறுவயது கல்கியாக நடித்திருக்கும் இளம்பெண்ணின் துணிச்சலுக்கு ஒரு ஜே !

படத்தில் சலிப்பூட்டும் சில காட்சிகள், நாயகனின் பிள்ளைப் பிராயத்துக் காதல். அழகி முதல் பூ வரை பல படங்களில் இந்த FEEDING BABY காதலை பார்த்துவிட்டதால், ரசிப்பதற்கு பதில் வெறுமைத் தான் வருகிறது.

திருநங்கைகள் பால்மாற்றம் செய்யும் சடங்கு அவர்களின் சம்பிரதாயங்களை மிகவும் வலிமையுடன் சொல்லி இருக்கலாம். அதனை முழுமையாக சொல்லி இருந்தால் ஒரு புதிய தகவல் பார்வையாளர்களுக்கு சென்று இருக்கும். அந்த பரபரப்பே கூடுதலாக பார்வையாளர்களை ஈர்க்க துணை நிற்கும்.மேலும் ஒரு ஆண் பெண்ணாக மாறும் அவனின் உளவியல் மாற்றம் வலிமையாக பதிவு செய்யப்படவில்லை.வெறும் புறக்காட்சி விவரிப்பிலேயே படம் நகர்கிறது.

பல வருடங்களுக்கு முன்பு பார்த்த ஒரு விவரணப் படம் “ கண்ணீர் பூக்களின் காதல் திருவிழா” என்ற தலைப்பு, நாகர்கோவில் ரெமி வீடியோவிஷன் தயாரிப்பு என்று நினைவு. திருநங்கைகளின் உலகம் உருக்கமாக விவரிக்கப்பட்டு இருக்கும். பத்திரிக்கையாளர் ஜி.கெளதம் அவர்கள் மாலை மதியில் எழுதிய “அடையாளம்” என்ற குறுநாவல் கூட “ வாச்சா-போச்சா” சடங்கை வலியும் திகிலும் கடந்து முன்னிறுத்தும்.

வாச்சா போச்சா நிகழ்வு வந்தால் வாழ்க்கை போனால் உயிர் என்ற நிலையிலான ஒரு சவாலான திருநங்கைகளின் சடங்கு.

எனினும் நர்த்தகியை,இயக்குனரின் முதல் முயற்சி ,ஒரு புதிய தளம் என்பதில் பாராட்டலாம்.

எனக்கும் திருநங்கைகளுக்குமான நட்பு நான் பிறந்தது முதலே என்று சொல்லலாம்.எனக்கு அவர்கள் மீது எப்போது ஒரு பெருமதிப்பு உண்டு. திருநங்கைகளுக்கு குண்டலினியோக முறையை முதன் முதலின் எங்கள் குழுவினர்தான் வழங்கி வருகின்றனர். மனவளக்கலை அவர்களுள் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவ்ம் பல நல்ல மாற்றங்களை தருவதாக பயன்பெற்றவர்கள் சொல்கின்றனர்.

சில வருடங்களுக்கு முந்தைய நிகழ்வு இது.

நான் சென்னைக்கு வந்த புதிது. டீன் ஏஜின் கடைசி பருவத்தில் இருந்தேன். கிராமத்தில் வளர்ந்த எனக்கு அப்போதெல்லாம் சென்னையின் பிரமாண்டம் ஒரு பரபரப்பை தரும். சென்னையின் பல இடங்களுக்கு வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நடந்தே சென்று விடுவேன். ஒருநாள் மாலை நேரம். நேப்பியர் பாலம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தேன்.

திடீரென அவர்கள் என்னை சூழ்ந்து கொண்டனர். எனக்கு அவர்களைப் பார்த்தவுடன் அச்சமும் கூச்சமும் சூழ்ந்து கொண்டது.

அவர்கள் என்னை மடக்கிப் பிடித்தனர்.

இருவரின் கைகள் என் மீது, முகத்திலும், வயிற்றிலும் பரவியது. அவர்களிடன் இருந்து தப்பித்து போக திமிறினேன்.

“ அய்யோ ...நான் ஒரு ரிப்போர்ட்டர்...என்னை விடுங்கள்...!”

” ஏய்...இவன் ரிப்போர்ட்டாராண்டி......நேத்து நம்மகிட்ட யார் வந்து போனான்னு சொல்லுங்கடி...” என்று ஒருவர் இன்னொருவரை சீண்ட, எனக்கு அவர்களின் நோக்கம் புரிந்தது.

“உங்களுக்கு பணம் தானே வேண்டும்...இந்தாருங்கள் என்று “ என் பர்ஸை திறந்து அதில் இருந்த கடைசி முப்பது ரூபாய்......மூன்று பத்து ரூபாய் நோட்டுகளை நீட்டினேன். அவர்கள் என் பர்சில் வெறும் முப்பது ரூபாய் மட்டும் பார்த்துவிட்டு, வேறு பணம் இல்லையா என்று கேட்டனர்.

“ வேறப் பணம் இருந்தா...நான் ஏன் நடந்து போகிறேன் “

அவர்கள் என்னை ஒரு மாதிரி பார்த்தனர். நான் எரிச்சலும், கோபமும் தெறிக்க, அவர்களிடம் “ உங்களைப் போன்றவர்கள் மீது நான் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறேன் தெரியுமா ...? உங்களுக்கு மும்பையில் என்ன மரியாதை தெரியுமா...? ஒரு குழந்தைப் பிறந்த வினாடியில் உங்களைப் போன்றவர்களின் கைகளில் கொடுத்து தான் முதல் ஆசிர்வாதம் வாங்குவார்கள், நானும் மும்பையில் பிறந்தவன் தான்........ஒரு கடவுளுக்கு நிகரான நீங்கள் இப்படி செய்யலாமா? “ கேட்ட வினாடி தான். ஒருவள் இன்னொருவளிடம் இருந்த முப்பது ரூபாயைப் பிடுங்கி என்னிடம் திணித்தாள்.

“சாரி...பிரதர்....கோவிச்சுக்காதீங்க...மிஸ்டேக் பண்ணிட்டோம்...நீ..ங்..போங்க...பிரதர்...”என்னை விடுவித்து தள்ளினாள்.

அவளை பின்பற்றி மற்றவர்களும் வழிவிட்டனர்.அன்று என்னிடம் வழிப்பறி செய்ய முயற்சித்தவர்கள் திருநங்கைகள். உடனடியாக உணர்ந்து வழி அனுப்பிய நல்ல மனம் படைத்தவர்களும் அவர்கள்தான்.
பெரும்பாலும் வயிற்றுபிழைப்பிற்காகவே அவர்கள் வேறு வழியின்றி பாலியில்,வழிப்பறி போன்றைவைகளில் இறங்குகின்றனர்.

குடும்பத்தின் அரவணைப்பு இருப்பவர்களில், பெரிய அளவில் சாதனை புரிந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பெங்களூரில் ஒரு டிரக் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவுத் துணைத் தலைவர் அவர், விளம்பரம் தொடர்பாக அவரை சந்திக்க நேர்ந்தது. அவர் குரலை உணர்ந்து அவரை நான் பார்க்க....” I am Hegde sir… I am a transgender ” என்றார். ஐ.ஐ.ம்மில் ( Indian Institute of Managements ) படித்தவராம். அன்றைய நிலவரத்திற்கு மாதம் மூன்று லட்சம் சம்பளம் வாங்குவதாக கூறினார்.

ஹெக்டே போன்றவர்கள், சமுகத்தில் வெற்றிப் பெற்று முன்னிலை வருவது சமான்யமான விஷயம் அல்ல.காரணம் சமூகத்தில் விழிப்புணர்வு இல்லாத நிலை.

தமிழகத்தில் இதற்கான விழிப்புணர்வு பெருகி வருகிறது. ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் இவர்களுக்கென சுய உதவிக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.

வேலூரில் பால் மாற்றச் சிகிச்சைக்கென பிரத்யோகமான மருத்துவ பிரிவும் தொடங்கப்பட்டது.தி.மு.க.ஆட்சியில் திருநங்கைகளுக்கென தனி வாரியம் அமைக்கப்பட்டுள்ளது நல்ல முயற்சி.

திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு மேலும் அதிகரிக்கவேண்டும்.அதற்கு நர்த்தகி மாதிரியான திரைப்படங்கள் வலுசேர்க்கும்.

விஜய் டிவியில் தொலைக்காட்சியில் கலக்கிய ரோஸ் தே.மு.தி.க சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். தே.மு.தி.க மட்டுமல்ல, மற்ற கட்சிகளும் ஒரு உறுப்பினரையாவது திருநங்கைகளின் சமுகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கவேண்டும்.

வெள்ளக்காரன் கால சம்பிரதாயமான ஆங்கிலோ இந்தியன் பிரதிநிதிவத்தை விடாமல் பின்பற்று தமிழக சட்டசபை இதனையும் கட்டாயமாக்கலாம்.ரோஸின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. கட்சியைப் பார்க்காமல் வேட்பாளரின் தகுதியினைப் பார்த்து வாக்களித்தால் ரோஸ் கண்டிப்பாக வெற்றி பெறுவார்.

அதே போல் நர்த்தகி போன்ற புதிய முயற்சிக்கு மக்களும், ஊடகங்களும் துணை நிற்க வேண்டும்.

ரோஸ் மற்றும் நர்த்தகியின் வெற்றி, திருநங்கைகள் சமூகத்திற்கு ஒரு புதிய ஊக்க மருந்தாக அமையும்.

No comments:

Post a Comment

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...