Sunday, September 8, 2013

என்ன நடக்குது இந்தியாவில் ?

                                                   Picture Courtesy www.unrealtime.com

ஒரு நாட்டின் வளர்ச்சி அந்த நாட்டின் ரூபாய் நோட்டின் அடிப்படையிலேயே கணிக்கபடுகிறது. ரூபாய் நோட்டின் மதிப்பு உயரும் போது , அந்த தேசம் வளரும் தேசமாக மாறுகிறது. ரூபாய் நோட்டின் மதிப்பு அந்த நாட்டின் பொருளாதார நிலையின் அடிப்படையில் மதிப்பிடப்படும்.
பொருளாதாரம் என்றால் என்ன ?
பொருள் + ஆதாரம் = பொருளாதாரம்.
மக்கள் வாழ்வியலுக்கு அவசியமாகிறது பொருட்கள். அந்த பொருளின் இருப்புநிலையே பொருளாதாரம்.அதாவது மக்களின் வாழ்வியல் ஆதாரத்திற்கான, தேவையான  பொருட்களை அவர்களின் தேவைக்கு ஏற்ப நிர்வகிப்பது தான் பொருளாதாரம்.இவ்வாறு நிர்வகிக்கப்படும் பொருட்கள் மிகும்போது தேவைக்கு மீறியதை ஏற்றுமதி செய்து அதன் மூலம் ஒரு வருவாயை ஈட்டி, அதன் மூலம் தேசத்தின் வளத்தை வலிமையாக்குவது செம்மையான பொருளாதாரம். பெரும் வளத்தை உண்டாக்காவிட்டாலும் இந்த பொருட்களின் தேவையில் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துகொள்வதுதான் நல்ல நிர்வாகம்.
 உதாரணத்திற்கு ஒரு கிராமத்தை எடுத்துகொள்வோம். அங்கு ஒரு நூறு குடும்பங்கள் வசிக்கின்றன. அந்த குடும்பத்திற்கு தினமும் 100 கிலோ அரிசி, 50 கிலோ வெங்காயம்,ஒரு கிலோ மிளகாய், இருபது கிலோ பருப்பு, 5 கிலோ சர்க்கரை,100 லிட்டர் பெட்ரோல், 100 யூனிட் மின்சாரம், ஐந்து கிலோ மருந்து பொருட்கள், 1000 லிட்டர் குடிநீர், இப்படி தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த கிராமத்தில் உற்பத்தி செய்ய தக்கவற்றை அங்குள்ள மக்களைகொண்டு இதில் எதையெல்லாம் உற்பத்தி செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் உற்பத்தி செய்யவேண்டும். அப்படி உற்பத்தி செய்யமுடியாத பொருட்களை வெளியில் இருந்துதான் வாங்கவேண்டும். உதாரணமாக கிராமத்தில் அரிசி,வெங்காயம், மிளகாய்,பருப்பு வகைகள்,சர்க்கரை, குடிநீர் ஆகியவற்றை உற்பத்தி செய்துகொள்ளமுடியும். மருந்துப் பொருட்களில் கூட சிறு நோய்களுக்கான வீட்டு வைத்திய முறைகளை அல்லது வரும் முன் காக்கும் முறைகளை இயற்கையாக செய்துகொள்ளலாம், அல்லது தேவையானவற்றை இறக்குமதி செய்துகொள்ளலாம். ( முறையான சுகாதார ஏற்பாடுகளுடன் இருந்தால், நோய் வராமல் தடுக்கமுடியும், இதனால் மருத்துவ உபகரணங்களுக்கான செலவினம் குறையும் ) பெட்ரோல் கிராமத்தில் உற்பத்தி செய்யமுடியாது, மின்சாரம் கிராமத்தில் உற்பத்தி செய்ய முடியாது ( ஆனால் இப்போது சூரிய சக்தியின் மூலம் இதனை செய்யமுடியும் ) மின் பொருட்களை உள்ளூரில் உற்பத்தி செய்யமுடியாது. இது போன்ற பொருட்களை ஒன்று பெருமளவில் உற்பத்தி செய்து பகிர்ந்தளிக்கவேண்டும். அல்லது உற்பத்தி செய்பவரிடமிருந்து வாங்க வேண்டும்.
சரி ! நாம் பட்டியலிட்ட பொருட்களில் பெரும்பாலான பொருட்களை நம்மால் உற்பத்தி செய்துகொள்ள முடியும், சிலவற்றை உற்பத்தி செய்ய முடியாது. அப்போதுதான் இறக்குமதி அவசியமாகிறது. ஒரு காலத்தில் இறக்குமதி என்பது பண்டமாற்று முறையாக தான் இருந்து வந்தது. இன்றும் கூட ஈரானும்,ஈராக்கும் இந்த முறையில் எரிபொருள் ஏற்றுமதிக்கு தயாராக இருக்கின்றன. இவை இரண்டும் இந்தியாவின் நட்புநாடுதான். ஆனால் இந்தியா இவற்றை நிராகரித்து வருவது புரியாத புதிர்.
சரி ! இறக்குமதி இப்போது எப்படி நிகழ்கிறது என்று பார்க்கலாம்.
 ஒன்று நமக்கு இறக்குமதி பொருட்களை தரும்  அந்த மற்றவருக்கு நம்மிடம் உற்பத்தியாகும் பொருட்களில் ஏதேனும் தேவையாக இருப்பின், அதனை நாம்  இறக்குமதி செய்கின்ற பொருட்களுக்கு நிகரான மதிப்பில் கொடுத்து இறக்குமதி செய்வது. இதன் மூலம் அவருக்கு தேவையான பொருட்களை மிகையாக நாம் உற்பத்தி செய்து, நமது தன்னிறைவு போக அவருக்கு வைத்திருக்கவேண்டும்.
இதைதான் பாரதியார் கூட “சிந்துநதியின் மிசை நிலவினிலே” பாடலில்
வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்,
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம். 

முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே,
மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே

இரண்டாவது முறை அவரிடம் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான மதிப்பை பணமாக வழங்குவது. இதில் இரண்டுமுறை இருக்கிறது. ஒன்று பொருட்களின் மதிப்பை நமது பணத்தின் மதிப்பில் நிர்ணயித்து அதனை வழங்குவது. இரண்டாவது அவர்களின் பணத்தில் மதிப்பை நிர்ணயித்து வாங்குவது.இங்குதான் இந்தியா போன்ற நாடுகளுக்கு சிக்கல் தொடங்குகிறது. நமது பணத்தில் விலை நிர்ணயிப்பதில் கூட ஒரளவு பிரச்சனையில்லை. ஆனால் அவர்களின் பணத்தில் நிர்ணயிக்கும் போது அது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.

அதாவது நம்மிடம் இருக்கும் பொருட்களை விற்று அதில் வரும் பணத்தை, அவர்களின் பணமாக மாற்றி , அதனை கொடுத்து அந்த பொருட்களை வாங்கி துய்ப்பது. இவ்வாறு செய்யும் போது, அவர்களிடம் இருந்து பெறும் பொருட்களின் மதிப்பும், நாம் ஏற்றுமதி செய்யும் பொருட்களின் மூலமாக வரும் வருவாயின் மதிப்பும் நிகராக இருப்பின் பெரும் பிரச்சனையில்லை. மாறாக இறக்குமதிக்கு செலுத்தவேண்டிய தொகையும், ஏற்றுமதியின் மூலம் உருவாக்கப்படும் வருவாய், பின்னர் அதனை அவர்களின் பணமாக மாற்றும் போது ஏற்படும் செலவினம் இது அவர்களின் மதிப்பை விட குறைந்து இருந்தால் இங்கு ஒரு பற்றாக்குறை நிலவும். இந்த பற்றாக்குறை தொடரும் போது அங்கு இறக்குமதிக்கு அனுமதிப்பவரின் பொருளாதார நிலையில் ஒரு ஏற்றதாழ்வு ஏற்படும்.
உதாரணத்திற்கு 100 லிட்டர் டீச்சல் 55000 ரூபாய் என்று வைத்துகொள்வோம். நாளை அவர்கள் இதனை அறுபது ஆயிரம் என்று சொன்னாலும், நமது பணத்தில் கொடுக்கும் போது ஒரு ஐந்தாயிரம் மட்டுமே பற்றாக்குறை ஏற்படும். இதையே நீங்கள் டாலரில் கணக்கீடு செய்யுங்கள். 55000 என்பது 1000 டாலர் என்று வைத்துகொள்ளுங்கள். நீங்கள் நிர்ணயித்த 1000 டாலர் பொருளை பெறும்போது இந்திய பணத்திற்கு எதிரான மதிப்பில் உயர்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்,  அதாவது ஒரு டாலர் 55 இந்திய ரூபாய் என்பது, 60 என்றோ அல்லது 62 என்றோ உயரும் போது, இரண்டுவிதங்களில் செலவினங்கள் நிகழ்கிறது.அதாவது டாலரில் உயர்ந்த தொகை. இரண்டாவது இந்திய மதிப்பிலான ரூபாயை டாலராக மாற்றும் போதிலான பரிவர்த்தனை தொகை. இது ஒருநாள் ஆட்டமல்ல, நிரந்தரமற்ற தினம் ஒரு ஏற்றத்தாழ்வு ஏற்படும் போது, ஒவ்வொருநாளும் பரிவர்த்தனையில் பற்றாக்குறை ஏற்பட்டுகொண்டே இருக்கும். இந்த பற்றாக்குறையின் எதிரொலி, பெட்ரோல் சார்ந்த ஏனைய தொழில்களிலும் எதிரொலிக்கும். விளைவு ! ஏனைய பொருட்களில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக உயரும். இதன் முடிவு உள்நாட்டில் பணவீக்கம் ஏற்படும். இதுமட்டுமின்றி, இந்நிலை தொடரும் போது பரிவர்த்தனைக்காக வைத்திருக்கும் குறிப்பிட்ட டாலர்கள் விரைந்து செலவாகி, டாலரின் இருப்பு குறைந்து, அதற்கான பற்றாக்குறை ஏற்படும். அவர்களுக்கு டாலரில் செலுத்த கடன் வாங்க நேரிடும்.அப்போது டாலரின் மதிப்பு உயர,உள்நாட்டு பணத்தின் மதிப்பில் சரிவு ஏற்படும்.
பணத்தின் மதிப்பு பொளாதார ஏற்றதாழ்வின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது வர்த்தகம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, பணவீக்கம்,வேலைவாய்ப்பு, வட்டிவிகிதம், வளர்ச்சி விகிதம், வர்த்தக பற்றாக்குறை,சந்தை வர்த்தக செயல்பாடு.வெளிநாட்டு பரிவர்த்தனை இருப்புநிலை, பொருளாதார கொள்கை, அயல்நாட்டு முதலீட்டு, வங்கி முதலீடு, பொருட்களின் விலைவாசி மற்றும் அரசியல் சூழல்கள் இவைகளே ஒரு நாட்டின் பண மதிப்பை தீர்மானிக்கின்றன.
இறக்குமதி என்பது ஒரு நாட்டிற்கு அவசியம் தான். ஆனால் என்னென்ன இறக்குமதி செய்யவேண்டும். எந்த அளவில் இறக்குமதி செய்யவேண்டும் என்பதில் ஒரு கட்டுபாடு தேவை. இது மீறும் போது இறக்குமதி பெருகி, உள்நாட்டு உற்பத்தி முற்றிலும் பாதிக்கபடும்.இன்று இந்தியா ஒரு திறந்தவெளி சந்தையாக மாறி, உள்நாட்டு பொருட்களை விட வெளிநாட்டு பொருட்களுக்கு உகந்த இடமாக மாறிவிட்டது. 75 லட்சத்திற்கும் அதிகமான நிலப்பரப்பை கொண்டு தமிழகத்தில் கூட பெரும்பாலான உணவு பொருட்கள், குறிப்பாக பருப்பு வகைகள் இறக்குமதி செய்யப்படுவது வேதனையான உண்மை.
இந்தியா போன்ற  நாடுகளுக்கு உள்கட்டமைப்பு, புதிய திட்டங்கள்,வசதி வாய்ப்புகளை பெருக்க பெரும் முதலீடு தேவைப்படுகிறது. இந்த முதலீட்டை நம்மால் மட்டுமே பூர்த்தி செய்யமுடியாத சூழலில் நாம் அந்நிய முதலீட்டை அனுமதித்தோம். ஆனால் அதில் ஒரு ஒழுங்குமுறை பின்பற்றாததால், அந்நிய முதலீட்டாளர்களும், அவர்களுடன் கூட்டணி அமைத்து தனியார் நிறுவனங்களும் தேசத்தை கபளிகரம் செய்ய தொடங்கிவிட்டன.


இந்நிலை மாற தேசபற்றுமிக்க ஒரு ஆட்சிமுறை வரவேண்டும். அதற்கு மக்களும் விழித்துகொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...