Tuesday, October 22, 2013

சீனா அண்ணன் தேசம் - திருமதி சுபஸ்ரீ மோகன்

இமயம் எனக்கு இன்னொரு வாசஸ்தலமாக மாறிக்கொண்டிருக்கும் சூழலில் என்னை மிகவும் ஈர்த்த பகுதி திபெத்திற்கு உட்பட்ட இமயபகுதிதான். இமயத்தின் உச்சியில் இத்தனை உயரமான  நாட்டில் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கும் சாலைகள் என்னை பிரமிப்பில் ஆழ்த்தும்.நேபாள- திபெத் எல்லையான ஷாங்மூ முனையை தாண்டிய வினாடியில் இருந்து ஆங்காங்கே ( ஹாங்காங் இல்லே  நம்ம லாங்குவேஜில் அங்கங்க.. இதுவும் ஆவ்…எப்படி சொன்னாலும் சீனா சவுண்டுதான் வருது…) பறக்கும் அஞ்சு நட்சத்திர சிவப்பு கொடிகள் என் கண்ணை உறுத்தும்.இப்படி அநியாயமா இந்த  சீனாக்காரன் திபெத்தை ஆக்ரமிப்பு செய்திருக்கிறானே என்று கோபம் வரும். சீனாக்காரன் கட்டுப்பாட்டில் இருக்கிறதாலதான்  திபெத் ஜொலிக்கிறது…இல்லையென்றால் குளிக்க கூட தெரியாத இந்த மக்கள் இதனை இன்னும் மோசமாகதான் வச்சிருப்பாங்க என்று என் அண்ணன் பி.ஆர்.சந்திரன் முன் வைக்கும் கருத்துக்களுடன் மோதல்களை நிகழ்த்தினாலும் நாளடைவில் சீனாவின் ஈர்ப்பு  சீனப்பெண்களைப் போலவே என்னுள் ஊடுருவி நிற்க ஆரம்பித்துவிட்டது. அடுத்தடுத்த பயணங்களில் பயணம் இலகுவாக கொஞ்சம் சீனமொழி கற்றுக்கொள்ளுவோமே என்று சீனப்பயணம் சென்று வந்த அண்ணன் பொன்.காசிராஜனிடம் கேட்டபோது, அதுக்கு என்னடா தம்பி ! நான் ஒரு அக்காவை அறிமுகம் செய்கிறேன் என் பேஸ்புக் லிங்கில் இருக்காங்க என்று அறிமுகம் செய்யப்பட்டவர்தான் திருமதி சுபஸ்ரீ மோகன். அவரின் இன்பாக்ஸில் விவரம் தட்ட படபடவென்று பல இணைப்புகளை பரிந்துரை செய்தார். சீனமொழியை எத்தனை சுலபமாக கற்றுகொள்ள முடியுமோ அத்தனை சுலபமாக கற்றுகொள்ள உதவும் தளங்கள் அவை. ஆச்சர்யமாக தமிழ் மொழியில் கூட சீனமொழியை கற்றுக்கொள்ள பல இணைப்புகளை தந்தார்  அவர்.நம்மை சீனப்பெண்கள் ஈர்த்த வகையில் அந்த மொழி இன்னும் ஈர்க்கவில்லை. அதன் சிரமம் உணர்ந்து ச்சீ..ச்சீ…இந்த பழம் புளிக்கும் நரியாய் நழுவி…..எனினும் ஷி ஷி ( தாங்க்ஸ் ) என்ற ஒரு வார்த்தையை சிரமப்பட்டு கற்றுகொண்டு எதிர்பட்ட சீனப்பெண்களிடம்  சொல்லி… ஜொள்ளி… சின்னப் புன்னகையில் ஜென்ம சாபல்யம் அடைந்த கதை தனி.  திருமதி சுபஸ்ரீ மோகன் பழக்கமான கதை இதுதான்.அதன் பிறகு அவரின் பதிவுகளுக்கு சில லைக்குகள், எப்போதாவது ஒரு ஹாய்  சொல்வதுண்டு சேட்டிங்கில்.சமீபத்தில் அவர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார் .சீனா அண்ணன் தேசம் என்ற அந்த புத்தகத்தை விகடன் பிரசுரம் (http://books.vikatan.com/index.php?bid=2133) வெளியிட்டுள்ளது என்பதை முகநூலில் அறிந்து ஒரு ஷேர் மட்டும் செய்து விட்டுவிட்டேன்.இன்று கனெக்‌ஷன் புத்தக கடையில் அந்த புத்தகத்தை பார்த்தபோது அதன் மஞ்சள் நிறமும் செந்நிற எழுத்துக்களும் நூலாசிரியரான திருமதி.சுபஸ்ரீ மோகன் என்பதாலும் உடனே வாங்க தோன்றியது. வாங்கிய கையோடு எதிரில் இருந்த அண்ணாநகர் டவர் பூங்காவில் சென்று அமர்ந்துகொண்டேன். இரண்டு நாள் மழை ! விட்டும் தூவானம் விடாத வானம் ! ஜில்லென்று உடலில் ஊடுருவும் காற்றில்  மனதை வருடும் எழுத்து நடையோடு என்னை உள்ளே  இழுத்துகொண்டது சீனா அண்ணன் தேசம்.பின் அட்டையில் பாஸ்கர் சக்தி அண்ணனின்  பின்னுரை ( முன்னுரைதான் அதை பின் அட்டையிலும் போட்டிருக்காங்க ) புத்தகத்தின் வலிமையை எளிமையாக உணர்த்தியது.சுமார்  90 நிமிடங்கள் சென்றதே தெரியவில்லை. என்னை மீறிய ஒரு magical realistic உலகிற்கு பயணித்த அனுபவத்தை தந்தது  இந்த புத்தகம். திருவாளர் மணியன் மற்றும் எழுத்தாளர் லேனா தமிழ்வாணனின் பயணக்கட்டுரைகளை படித்திருக்கிறேன். அதைப் போன்றே எளிய அழகிய தமிழில் தெளிவாக பல தகவல்களை தருகிறார் நூலாசிரியர். காதை சுத்தி மூக்கை தொடாமல்  எதை சொல்லவேண்டுமோ, அதை மிகவும் நேர்மையாக சொல்லியிருக்கிறார்.பயணக்கட்டுரை என்றும் இதனை கருதலாம் அல்லது அனுபவக்கட்டுரைகள் என்றும் எடுத்துகொள்ளலாம். இதுபோன்ற நூல்கள் எழுதும் போது இருக்கும் சிரமம், எழுதுபவர் அந்த இடங்களை பார்த்து பரவசப்பட்டிருப்பார், ஆனால் அதனை எழுத்தில் கொண்டுவந்து தான் பார்த்து ரசித்த இடங்களை, தகவல்களை பார்க்காத ஒருவருக்கு பார்த்த அனுபவத்தை தரும் வகையில் எழுதவேண்டும். அது எல்லோருக்கும் கைவரும் கலையல்ல. இதன் நூலாசிரியர் சுபஸ்ரீ மோகன்  இந்த நுட்பத்தில் கை தேர்ந்தவராக இருக்கிறார். இந்த நூல் ஒட்டுமொத்த சீனாவையே எளிமையாக சுருக்கி விவரிக்கிறது.  சீனா தேசத்தை முழுவதும் சுற்றிப்பார்த்த அனுபவத்தை தருகிறது அண்ணன் தேசம் சீனா.சீனாவில் வாழ இந்தியர்களுக்குள்ள வாய்ப்புகள், அக்கரைச் சீமை சீனாவின் சிறப்புகள் ( அக்கறை சீனா என்று கூட சொல்லலாம்…வெளிநாட்டினர்  மீது அவ்வளவு அக்கறையுடன் இருப்பதை சுட்டிகாட்டுகிறார் நூலாசிரியர் ). அந்த தேசத்தின் நேர்மை, பொறுப்புகள். சீனா விழாக்கள், சுற்றுலா என பல்வேறு தகவல்களை சுவரஸ்யமாக அடுக்கிறார். The Last Emperor படத்தில் விவரிக்கப்பட்ட Forbidden City  பற்றிய விவரங்கள் அவரின் ஆழ்ந்த ஆராய்ச்சியை வெளிப்படுத்திகின்றன. ஒரு நூலாசிரியராக அவர் வெளிப்பட்டாலும்  சீனாவின் விருந்தினராக  அவர் எதிர்கொண்ட அனுபவங்கள் அடக்கமுடியாத சிரிப்பை வரவழைக்கின்றன. அந்த வகையில் ஒன்றுதான் அவர் கலந்து கொண்ட சீனத் திருமணம் , அதற்கு அவர்கொண்டு போன பரிசும் விளைவுகளும் . ( நாம ஒண்ணு நெனச்சா….சீனா ஒண்ணு நெனக்குதுடா சாமி ! ). ஏழாம் அறிவுப்  புண்ணியத்தில் போதி தர்மர் பற்றி நாம் எல்லாம் அறிந்திருக்கிறோம். நூலாசிரியர்  சீனாவின் அமைந்திருக்கும் சிவன் கோயில் பற்றிய குறிப்புகளை தந்து நம்மை அசத்துகிறார். அந்த சிவன் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமான்  திருக்கதாலீஸ்வரன் உதயநாயனார் என்பதும் அவர் அங்கு சென்ற கதையையும்  கேட்கும் போது தென்னாடு உடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற பாடல் எத்தனை உண்மையானது என்பது நிரூபணமாகிறது. மேலும் பாண்டிய மன்னன் காலத்திலும் சீனர்களுடனான உறவு புலனாகிறது.சீனாவில் எல்லாமும் சீன மொழிதான் என்ற தகவலுடன் அவர்கள் பிறநாட்டுக் கலாச்சாரம் மொழிக்கு எத்தகைய மரியாதை செய்கிறார்கள் என்ற  தகவல் சீன வானொலியின் பிறமொழி பற்றிய ஒலிப்பரப்பு செயல்பாடுகளை விளக்கமாக தருகிறார் நூலாசிரியர். குறிப்பாக இந்திய மொழிகளில் தமிழிலும் இயங்கும் சீன வானொலி, அங்கு பணிபுரியும் சீனர்களும் தங்கள் பெயரை தமிழில் மாற்றிகொண்டு தமிழர்களாகவே வெளிப்படும் பாங்கு என்பது மொழிபற்று எப்படி இருக்கவேண்டும்,மொழிவெறி எப்படி இருக்க கூடாது என்பதை நமக்கு உணர்த்துகிறது.பெய்ஜிங், ஷாங்காய்,ஹாங்ஹாங், குவாங்சோ,சென்ஷேன்,தியான் ஜின், திபெத்,குயிலின்,ஷாங்கய்குவான் என்று பல்வேறு கலாச்சாரங்கள், பொருளாதார நிலைகளில் மாறூபட்டு நிற்கும் சீனநகரங்களை அவர் விவரிக்கும் விதம் நாமும் அருகில் நின்று ரசிக்கும் அனுபவத்தை தருகிறது.இதற்கு வலிமை சேர்க்கும் விதமாக பளிச்சிட்டு கவர்கிறது அண்ணன் பொன்.காசிராஜனின் புகைப்படங்கள். சீனாவின் கலாச்சாரம், மொழி பற்று, பிறநாட்டினரை மதிக்கும் பண்பு, தொழில்நுட்ப அறிவு, மூத்தோர்களுக்கு செலுத்தும் மரியாதை, விளையாட்டு மற்றும் பிறத்துறைகளின் ஆர்வம் என்று அனைத்தையும் அச்சு பிசகாமல் முன்வைக்கிறார் நூலாசிரியர். பல இடங்களில் நம் தேசம் இதற்கு நிகராக உயரவேண்டும் என்ற ஆதங்கமும் அவர் எழுத்துக்களில் மறைமுகமாக வெளிப்படுகிறது. நூலின் தலைப்பை பார்த்தவுடன் “ சீனா அண்ணன் தேசம்” என்பது எனக்கு கொஞ்சம் முரணாக பட்டது. படித்து முடித்த பின்பு சீனாவைப் பற்றி நல்ல தெளிவும், பொருத்தமான  தலைப்பைதான் நூலாசிரியர் வைத்திருக்கிறார் என்பது புரிந்தது.கடந்த இரண்டு மாதங்களாகவே கடுமையான பணிச்சுமை. புத்தகங்களின் பக்கம் போக கூட முடியவில்லை. ஒரு அலுவல் சந்திப்பிற்கு நண்பர்களுடன் சென்று, அவர்களை மட்டும் அனுப்பிவிட்டு இறுக்கமாக காத்திருந்த வினாடிகளில்  ஒரு புத்தகத்தை வாங்கி, அதனை முழுமையாக படித்து முடித்து அதனால் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என்னை இறக்கிவிடும் போது என் முகத்தை இறுக்கமாக பார்த்த நண்பர்கள், மீண்டும் வாகனத்தில் ஏற்றிகொள்ளும் போது இலகுவான புன்னகையுடன் இருப்பதைக் கண்டு  காரணம் என்ன ? என்று வினவியபோது இந்த புத்தகத்தை படித்தேன் ஏனோ ஒரு சந்தோஷம் வந்துவிட்டது என்றேன். ஒரு புத்தகம் படித்ததால் சந்தோஷமா என்று அவர்களால் நம்பமுடியவில்லை. ஆனால் உண்மை !சீனா என்றவுடன் நம்முள் ஒரு வெறுப்புணர்வு எழுகிறது. அது காலம் காலமாக அரசியல்வாதிகள், மற்றும் ஊடகங்கள் முன்வைத்த பிம்பம் என்பதை உடைக்கிறார் நூலாசிரியர். எப்போழுதோ நிகழ்ந்த ஒன்றை நினைத்து நினைத்து மேலும் இறுகினால் வெறுப்புணர்ச்சிதான் மிஞ்சும். இத்தகைய இறுக்கமான சூழல்களை நல்ல படைப்புகளும், படைப்பாளிகளாலும் தான் மாற்ற இயலும். அந்த வகையில் ஒரு சீரிய பணியை செவ்வனே செய்துள்ளார் நூலாசிரியர் சுபஸ்ரீ மோகன். நம்முடைய நட்புறவு நாடானா சீனாவுடன் நாம் நட்பு பாராட்டுவதின் மூலம் ஏராளமான விடயங்களை சாதித்துகொள்ள முடியும்.  நட்பு பாராட்டுதல் இறுகி நின்றால் எல்லை மீறும் தொல்லைகள் கூட குறையும். இந்த நிலை மாற மக்கள் மனதில் மாற்றம் தேவை. அந்தவகையில் சீனா பற்றிய பிம்பத்தை மாற்றும் எளிமையான படைப்பாக முன் நிற்கிறது அண்ணன் தேசம் சீனா. என் அறிவுக்கு எட்டியவரை சீனா பற்றி எளிமையாக, இத்தனை சிறப்பாக ஒரு நூல் வெளிவந்ததாக தெரியவில்லை. இந்த நூலை படிப்பவருக்கு நிச்சயம் சீனா மீது ஒரு நம்பிக்கையும் நேசமும் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. நல்ல நூல்கள் நல்ல சமூகத்தை மாற்றும். இதற்கு ஒரு படி அமைத்த திருமதி சுபஸ்ரீ மோகனுக்கு ஒரு ரெட் சல்யூட் !


2 comments:

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...