Saturday, February 7, 2015

டாஸ்மாக்கும் - ரியல் எஸ்டேட்டும்



குடிப்பழக்கத்தில் இருந்து மீளமுடியாமல் இரண்டு மாணவர்கள் தற்கொலை என்ற செய்தியின் ஈரம் இன்னும் காயவில்லை. அதற்குள் இன்று என்னை டாஸ்மாக் ஒன்றிற்கு விஜயம் செய்யும் வாய்ப்பை வழங்கிவிட்டது இறைநிலை.

இதை மக்கள் முதல்வரின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமெனில் மதியும் விதியும் இணைந்து  எனக்கு எதிராக செய்த சூழ்ச்சி இது !


தமிழனையும் சினிமாவையும் எப்படி பிரிக்க முடியாதோ அதே போன்று டாஸ்மாக்கையும் ரியல் எஸ்டேட்டையும் பிரித்துப் பார்க்க முடியாது என்று நினைக்கிறேன்.

ஒன்று உடல்நலத்தை அழிக்கிறது.
இன்னொன்று வேளாண்மையை அழிக்கிறது. இரண்டிலும் சம்மந்தப்பட்ட உறவுகளும்,நட்புகளும் நம்மை சூழ்ந்து வாழ்வதால் இவ்விடங்களுக்கு சந்தர்ப்ப சூழலினால்  போக வேண்டியிருக்கிறது.
ரியல் எஸ்டேட்டின்பெரும்பாலான முக்கிய வர்த்தக பேச்சுவார்த்தைகள் டாஸ்மாக் வளாகத்தில் தான் முடிவாகின்றன. ரியல் எஸ்டேட் மட்டுமல்ல பல வர்த்தக முடிவு மையங்கள் டாஸ்மாக்கு தான்.

எனக்கும் பெரியபாளையம் வழிச் சாலைக்கும் கிட்டத்தட்ட பத்தாண்டுக்கு மேலான தொடர்பு இருக்கின்றது. எனக்கு வேண்டிய முக்கிய நபர் ஒருவர் அங்கு இறால் பண்ணை வைத்திருந்தார்.

சனி ஞாயிறு மாலை வேளைகளில் இறால் பண்ணை தான் என் பொழுது போக்கு. அப்போது அந்த நிலத்தை சுற்றி பெரும் பசுமைவெளி படர்ந்திருக்கும். பார்ப்பதற்கே ரம்மியமாக இருக்கும். இப்போது அந்த நிலங்கள் எல்லாம் முற்றிலும் அழிந்துவிட்டன. பல பசுமைவெளிகள் காம்பவுண்ட் சுவருக்குள் கிடங்குகளாக சுருங்கிவிட்டன.

அதன் நிலப்பிரபுக்களாக, உரிமையாளர்களாக வலம் வந்த விவசாயிகள் இருப்பதையெல்லாம் தொலைத்துவிட்டு டாஸ்மாக் வளாகத்தில் சுருண்டு கிடப்பதை நேரிடையாக பார்க்கிறேன்.

வேளாண்மை அழியும் போது அந்த தேசமும் அழிந்துகொண்டிருக்கிறது என்பதற்கு டாஸ்மாக்கினுள் விழுந்து கிடக்கும் இந்த மக்களே சாட்சி.


குடி என்பது கொண்டாட்டமான நிகழ்வாகதான் உலகமெங்கும் இருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் குடியை கெடுக்கும் கேடான செயலாக மாறியிருக்கிறது.

எனது பத்தாண்டிற்கு மேலான பெங்களூர் வாசத்தில் சொன்னால் நம்ப மாட்டீர்கள், Bar புகழும் பெங்களூரில் ஒருவரை கூட குடித்துவிட்டு பாரில் விழுந்து கிடந்து பார்த்தது இல்லை.

குடிப்பவர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்ற பிம்பத்தை உடைத்தது பெங்களூர்தான். அதுவும் கெட்டப்பெண்கள் தான் குடிப்பார்கள் என்று சினிமாவை பார்த்து நம்பிக்கொண்டிருந்தேன். குடிப்பதற்கும் குணாதிசயத்திற்கும் தொடர்பில்லை என்று தெளிவானது இங்குதான்.

நான் பெங்களூருக்கு சென்ற நான்காவது மாதமே எனக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது. எனது பிறந்த நாளை தெரிந்துகொண்டு வாழ்த்து சொன்ன என் ஜூனியர் பெண்ணொருத்தி “ சார் ! எப்போ எங்களுக்கு ட்ரீட் ! “ என்றாள்

மதியம் ! என்றேன் “

மதியமாவே...நோ....நோ...சார்..... ஆபிஸ் முடிஞ்சி ஆறுமணிக்கு மேலே “ என்றாள்.

கிராமத்து அப்பாவியான எனக்கு மதியம்னா நல்லாவே வயிறு நிறைய ஒரு பிரியாணி வாங்கி கொடுத்துவிடலாம். ஆறுமணிக்குன்னா டிபன் தானே இருக்கும் ,பாவம் அந்த புள்ளைக்கு வயிராற சோறு போட முடியாதே ! என்ற யோசனை.

ஆறு மணி ஆனதும் தான் உண்மை தெரிந்தது.

நான் பக்கத்தில் இருக்கும் சாகர் ஹோட்டலுக்கு போகலாம் என்று சொல்ல, அவள் என்னைப் பார்த்து நக்கலாக சிரித்தபடி

சார் ! சாகர்ல பீர் கிடைக்காது....Will go to beer cafe mg road or to pressclub cubbon park “ என்றாள்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

சே...சே....பொம்பளை புள்ளைங்க குடிப்பதா ? “

இன்னும் நான்கு ஐந்து ஆட்கள் ( அதில் மூன்று பெண்கள் ) என கூட்டம் சேர அவர்களின் நக்கலுக்கு பயந்து வற்புறுத்தலுக்கு இணங்க,அங்கு போனபின்புதான் தெரிந்தது .

பெண்கள் பீர் மட்டும் அல்ல தம்மும் அடிப்பார்கள் என்று.

முதலில் குழப்பமும் உதறலும் இருந்தாலும். பின்னர் Socialismத்தில் ஐக்கியமாக கற்றுக்கொண்டேன்.

நாளடைவில் நான் எங்கு நிற்கவேண்டும் என்ற தெளிவுடன் நின்றதால் யாரும் என்னை எதற்கும் நிர்பந்திப்பதில்லை.

பெங்களூர் மட்டுமல்ல. இந்தியாவிற்கு வெளியேவும்,நான் பார்த்தவரை குடி என்பதை ஒரு கொண்டாட்ட அளவிலோ, அல்லது உணவின் ஒரு பகுதியாகவோ தான் பல நகரங்களில் பாவிக்கின்றனர்.

அதன்பின் பெங்களூரில் பல கொண்டாட்டங்கள், விழாக்கள்.

சூப்பர் மார்கெட்டுகளில் கூட மதுபானங்கள் விற்கப்படுவது எனக்கு வியப்பைத் தரும். விதவிதமான வடிவமைப்புள்ள பாட்டில்களில் புது புது நிறங்களில் பார்ப்பதற்கு உண்மையில் அழகாகவே இருக்கும். குடிப்பழக்கம் இல்லாதவர்கள் கூட அதனை ரசிக்கும் வகையில் இருக்கும். நண்பர்களுடன் செல்லும்போதெல்லாம் அதனை பார்த்து பார்த்து பல பிராண்டுகளின் பெயர், விலை, வகை எனக்கு அத்துபடி.

பெங்களூரின் படுமட்டமான கடைகள் கூட ஓரளவு காற்றோட்டமும் சுகாதாரமும் உள்ளதாக இருக்கும்.

தமிழ்நாட்டுக் கடைகளின் நிலை வெட்ககேடு.

சில மாதங்களுக்கு முன்பு நக்கீரன் வார இதழ் வெளியிட்ட உண்மைநிலை. தமிழ்நாட்டு பார்களில் விற்கபடுவது முழுவதும் எரிசாராயம் என்ற தகவல் அதிர்ச்சியை தந்தது.

மது தயாரிக்கபடுவதற்கென கடுமையான வழிமுறைகள் உண்டு. பெரும்பாலும் மலரில் இருந்தோ, பழத்தில் இருந்தோ குறிப்பிட்ட காலத்தில் தயாரிக்கப்படவேண்டும்.

ஆனால் இந்த முறைகளில் எல்லாம் தயாரிக்க காலமும் அதிகமாகும் செலவும் அதிகமாகும், அதனால் நேரிடையாக எரிசாராயத்துடன் உரிய அளவில் ஒவ்வொரு மதுவகைக்கு உரிய வாசனை வஸ்துவைக் கலந்து நேரிடையாக புட்டிகளில் அடைக்கப்படுவதாக சொன்னது நக்கீரன் வார இதழின் அந்த கட்டுரை.
முறையாக தயாரிக்கப்பட்ட மதுவை அளவோடு பருகும்போது பெரும் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. ஆனால் இதுபோன்ற வகைகளை அருந்தும்போது நிச்சயம் கல்லீரலை கரைக்கும். உயிருக்கு உத்திரவாதம் இல்லை.

சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற ராணுவ ஆள் சேர்க்கும் பணியில் கலந்துகொண்ட அத்தனை பேரும் சொத்தையாக போனது இதனால்தான்.

ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனுஷனை கடித்த கதையாக, நேற்று முன் தினம் இரண்டு மாணவர்களின் தற்கொலை இன்றைய தமிழ்நாட்டின் நிலையை மேலும் மோசமாக வெளிப்படுத்துகிறது.

உண்மையில் தமிழகத்தின் நிலை படுமோசமாக போய் கொண்டிருக்கிறது. வாழ்வின் அடிப்படையான விளைநிலங்களும் , உடல் ஆரோக்கியமும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்துகொண்டிருக்கின்றன.

உரிய மாற்றங்கள் உடனடியாக தேவை.

மதுக்கடைகளை ஒரே நாளில் மூடிவிட முடியாது. அப்படி மூடும் போது குடித்து பழகியவர்களின் உடல்நல மனநல சிக்கல்களை சமாளிப்பது என்பதும் இயலாத காரியம்.

உடனடி தேவை குடியைப் பற்றிய விழிப்புணர்வு. அடுத்து மோசமான பராமரிப்பு மற்றும் சூழல்களுக்கு காரணம் அதில் புழங்கும் பணமும் அரசியலும். அரசியலில் இருப்பவர்கள் தான் பெரும்பாலும் மதுக்கடைகளின் அருகே பார் நடத்துகிறார்கள்.
அதனால் அங்கு அவர்கள் வைத்ததுதான் சட்டம் என்றிருக்கிறது. அவர்களிடம் இருந்து பிடுங்கி, ஆண்களுக்கு சுய உதவிக்குழுக்கள் அமைத்து ஒரே கண்காணிப்பில் கீழ் கொண்டு வரவேண்டும். இவர்களுக்கு சுகாதார பயிற்சி மற்றும் முதலுதவி பயிற்சிகள் அளிக்கபடவேண்டும். இப்படி சொல்வது சிரிப்பு வரவழைக்கலாம். அல்லது குடிக்கு பரிந்துரை செய்வதை போல் தோன்றலாம். குடிப்பவனே நினைத்து திருந்தும் வரை குடியை முற்றிலும் ஒழிக்க முடியாது.எனினும் குறைந்தபட்சம் வாக்களிக்கவாவது அவன் உயிருடன் இருக்க வேண்டும் என்பதால் அரசு அவன் நலத்தில் அக்கறை கொள்ளவேண்டும்.

அடுத்து ரியல் எஸ்டேட் தொழிலுக்கு வருவோம்

பெருகிவரும் மக்கள் தொகைக்கு நல்ல குடியிருப்புகள் அவசியம்.  இதில் மாற்றுக்கருத்து எதுவுமில்லை.ஆனால் அது முறைப்படுத்த ஒன்றாக நிகழ்வதாக தெரியவில்லை.

சிங்கப்பூரில் ஒரு அடியை கூட அரசின் அனுமதியின்று வாங்க முடியாது. அப்படி உரிமை கொண்டாடினாலும் 99 வருடத்திற்கு பிறகு அது மீண்டும் அரசுக்கு சென்றடைந்துவிடும்.

இங்கு நினைத்தவன் எல்லாம் பிளாட் போடலாம் என்ற நிலை. அப்பாவி விவசாயிகளை மூலை சலவை செய்து அவர்களிடம் நிலங்களை வாங்கி கொள்ளை அடித்துகொண்டிருக்கிறார்கள்.

சொந்தவீட்டு கனவுடன் அலையும் மாதாந்திர சம்பளக்காரர்கள் தான் இவர்களின் இலக்கு. அஞ்சு லட்சம் பத்து லட்சம் கொடுத்து எதிர்காலத்தில் உயரும் என்ற நம்பிக்கையில் ஒரு மனையில் முதலீடு செய்வதை விட, விவசாய நிலங்களில் முதலீடு செய்யுங்கள்.ஒரு விவசாயிக்கு வாழ்வுகொடுங்கள் . அவருடன் இணைந்து வேளாண்மை செய்து உங்களுக்கான உணவு தானியங்களை நீங்களே உற்பத்தி செய்துகொள்வதுடன், விற்பதின் மூலம் பணமும் சம்பாதிக்க முடியும். வார விடுமுறைகளில் அங்கு சென்று இயற்கையான சூழலிலும் கொஞ்சம் வாழ்ந்து வரலாம்.
ஒரு நாட்டை காப்பாற்றுவது அரசிடம் மட்டுமல்ல. மக்களிடமும் தான் இருக்கிறது. மக்களால் ஆனதுதான் அரசு. முதலில் மக்கள் என்னவேண்டும் என்பதை தெளிந்துகொள்ளவேண்டும். வாழ தெரியாதவர்கள் வாழும் நாட்டில் ஆளத் தெரியாதவர்களின் ஆட்சி நடக்கும் என்பார் வேதாத்ரி மகரிஷி.

மேற்கண்ட இரண்டு கேடுகளையும் மக்களே தவிர்க்க முடியும். ஆள்பவர்கள் முறையாக ஆள மக்கள் வாழ தெரிந்துகொள்ளவேண்டும்.


No comments:

Post a Comment

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...