Tuesday, March 13, 2012

மனம் நிறைய மகிழ்ச்சி - பகுதி இரண்டு



மனம் என்றால் என்ன ?

மனம் ஒரு குரங்கு .

பெரும்பாலும் நாம் சீட்டியடிக்கும் விஷயம் இதுதான்.

மனம் ஒரு குரங்கு என்றால் பெருமைப்படவேண்டிய விஷயம் தான்.

குரங்கு மரத்திற்கு மரம் தாவுவது போல் மனம் ஒரீடத்தில் இருப்புக்கொள்ளாமல் அலைவதை குறிப்பிட இவ்வாறு மனம் ஒரு குரங்கு என்று சொல்வழக்கு வந்திருக்கலாம். ஆனால் உண்மையில் மரத்திற்கு மரம் தாவுவது தானே குரங்கின் இயல்பு. அது எதற்காக அவ்வாறு தாவுகிறது. இருப்பிடம்,உணவு, பாதுகாப்பு மற்றும் உடலின் சுறுசுறுப்பை தக்கவைத்துகொள்ள நோக்கமுடன் தாவும் குரங்கை மனிதனோட ஒப்பிட முடியுமா ?

குரங்கின் மனதை போல மனிதனின் மனமும் இவ்வாறான மேம்பாட நோக்கதுடனா இருக்கிறது ?

மனதிற்கு எண்ணற்ற அறிஞர்கள் பலவிதமான விளக்கங்கள் கொடுத்து இருந்தாலும், எனக்கு சுலபமாக புரிய வைத்தது அருள்தந்தை வேதாத்ரி மகரிஷியின் விளக்கம் தான்.

அருள் தந்தை வேதாத்ரி மகரிஷி “மனம்” ஒரு காந்தம் என்கிறார். நமது உடல் இயக்கங்களின் போதும் ஏற்படும் மின் ஆற்றலால் ஒரிடத்தில் குவிந்து அது இந்த பிரபஞ்சவெளியோடு தொடர்பு கொண்டு மனம் என்ற நிலையை உருவாக்குகிறது.

அதாவது மனம் என்பது உடல் சார்ந்த விஷயம் மட்டுமல்ல, அது பிரபஞ்சவெளியோடு இந்த உடலை இணைக்கும் ஆற்றல். எவ்வளவு அழகான அருமையான விளக்கம்.

நான் சிந்தனை செய்வது, நான் எண்ணுவது என்னுள் மட்டும் ஏற்படும் செயல் அல்ல, அது இந்த பிரபஞ்ச வெளியோடும் தொடர்புடையது. அதாவது நான் மதுரை என்று ஒரு ஊரை நினைக்கிறேன் எனில் என் மனம் அதிவிரைவாக கடந்த முறை மதுரையை தரிசித்த நினைவுகளை கொண்டு வருவதோடு, இப்போதும் மதுரைவரை பயணித்து அங்கு மோதி பிரதிபலித்து திரும்புகிறது.
இது ஒரு வினாடியில் நிகழ்ந்து விடுகிறது. ஒரு இடத்தை மட்டுமல்ல, நீங்கள் விரும்பும், நினைக்கும் எதன் மீதும் இதுதான் நிகழ்கிறது.

நான் ஒரு பெண்ணை நினைக்கிறேன் எனில் எனக்கு அறிமுகமானவள் எனில் அவளை முன்பே நினைத்த அந்த நிகழ்ச்சியும். இப்போது அந்த பெண் இருக்கும் இடத்திற்கும் என் எண்ணம் பயணித்து அவளை சார்ந்த நினைவலைகளை எழுப்புகிறது.

சமீபத்தில் இந்த ஆற்றல் பற்றி உலக சந்தையில் சக்கைப் போடுகிறது ஒரு புத்தகம். அதன் பேர் “THE SECRET” ரோண்டா பைன் என்பவர் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.

இதில் Law of attraction என்ற ஆற்றலைப்பற்றி விவரமாக அலசியிருக்கிறார்கள்.
Law of attraction என்பது பெரிய சமாச்சாரம் இல்லை. முகவசியத்தை தான் ஆங்கிலத்தில் இப்படி சொல்கிறார்கள்.

முகவசியம் மற்றும் ஜகவசியம் பற்றியும் நம் முன்னோர்கள் ஏகமாக சொல்லி சென்றிருக்கிறார்கள்.
இந்த முகவசியம் அதிகரிக்க வள்ளலார் சுவாமிகள் பல சிறப்பு பயிற்சிகளையும் சொல்லியிருக்கிறார்கள்.

முகவசியம் என்றால் என்ன ?

பேர் & லவ்லியும், பேசியலையும் பூசிக்கொண்டு பளபளவென இருப்பதா ?

முகவசியத்திற்கு அழகிற்கு சம்மந்தமே இல்லை.

கடந்த ஞாயிற்றுகிழமை காஞ்சிபுரத்திற்கு ஒரு திருமணவிழாவிற்கு நண்பர்களுடன் காரில் வந்துகொண்டிருந்தேன். இடையில் உணவிற்காக வேலூரில் நிறுத்தினோம். உணவுக்கு பின் வண்டியை ஸ்டார்ட் செய்தால் உய்ய்ய்ய்...என்று பெரும் விசில் சத்தம்.

வேறொன்றுமில்லை, ஆட்டோமெடிக் டோர் லாக்கில் உள்ள பேட்டரி தீர்ந்த்விட்டதால் theft அலாரம் ஓசை எழுப்பியது. வண்டி ஒரே இடத்தில் ஜாம் ஆகி நின்றுவிட்டது. ஒரே வழி ரிமோட்டில் உள்ள பேட்டரியை மாற்றவேண்டும். அன்று ஞாயிற்றுகிழமை மதியம் இரண்டுமணி.

ஒரு இரண்டு செண்டி மீட்டர் நீளமுள்ள மெல்லிய பேட்டரி. பத்துக்கடைகள் ஏறி இறங்கியும் எங்கு கிடைக்கவில்லை.

எலக்ட்ரிஷியன் கிடைத்தால் theft alaram இணைப்பை துண்டித்து அதன் மூலம் வண்டியை இயக்க முடியும் என்ற நிலை.

மெக்கானிக்கை தேடிக்கொண்டிருக்கும் நிலையில் ஒருவர் வந்தார். என்ன விஷயம் என்று கேட்டார்.
”சார் ! இன்னைக்கு ஞாயிற்றுகிழமை அதனால் கடை கிடையாது, மெக்கானிக்குங்க பாதி பேரு டாஸ்மாக்குல தண்ணியை போட்டுட்டு மட்டையாகி இருப்பானுங்களே...” என்றவர் எதிர்பாரத சூழலில் “ ஒரு காரியம் பண்ணுங்க...என்னோட ரிமோட் பேட்டரியை கழற்றி தரேன்..,போட்டு வண்டியை ஸ்டார்ட் பண்ணி எடுத்துட்டு போங்க...நான் நாளைக்கு வாங்கி போட்டுகிறேன் “

எவ்வளவு சார் ?

காசெல்லாம் வேண்டாம் சார்.

அவர் யார் என்று கூட தெரியாது.

முன்பின் பார்த்தது இல்லை.

இந்த உதவி எப்படி நிகழ்நத்து.

அவரின் மனதில் இந்த எண்ணம் எப்படி நிகழ்ந்தது.

இதன் பெயர் தான் முகவசியம்.

அதாவது அறிமுகம் இல்லாத நபர்களை கூட நம்முடன் இணைத்து நமக்கு தேவையான உதவியை பெற்று தரும்.

இதுவும் மனதின் ஒரு மந்திர சக்தி தான்.இந்த முகவசியத்தை எல்லாராலும் பெற முடியும். ஏன் எல்லோர் வாழ்விலும் நடந்திருக்கும். ஆனால் எப்போதும் நடந்திருக்காது. எப்போதாவது நடந்திருக்கும். எப்போதும் நடைபெற செய்ய என்ன செய்யவேண்டும்.

முடியுமா என்றால் ? முடியும் !

அதற்கு முகவசியத்தை அதிகரிக்கும் மனப்பயிற்சி தேவை. அது என்ன என்பதை பிறகு பார்ப்போம்.


சரி ! போதும் வளவள கொல கொல...

சீக்ரெட் புத்தகம் சொல்லும் செய்தி என்ன ?

நீங்கள் நினைப்பதெல்லாம் நடக்கும் ! கேட்பதெல்லாம் கிடைக்கும் ! என்பதே.

இந்த புத்தகத்தின் விலை சுமார் 300 ரூபாய், இந்திய விலையில். இந்த புத்தகம் ஆங்கிலத்திலும் இந்தியிலும் டிவிடியாகவும் கிடைக்கிறது. அதன் விலை சுமார் 700 ரூபாய்.

இந்த புத்தகத்தை எழுதியவர் இதனை உருவாக்க, அமெரிக்கா முழுவதும் கடும் பயணம் மேற்கொண்டு எண்ணற்ற அறிஞர்களை சந்தித்து பேசி, இந்த ரகசியத்தை தெரிந்துகொண்டதாக அந்த நூலில் குறிப்பிடுகிறார். இந்த புத்தகத்தின் மூலம் அவர் பலகோடிகளுக்கு அதிபதி ஆகியிருப்பார்.

ஆனால் சிவானந்தர் எழுதிய எண்ணம் என்ற புத்தகத்தை படித்த எவரையும் அந்த புத்தகம் கவராது.
ஏன் எனில் வெறும் முப்பது ரூபாய் விலையில் சிவானந்த எழுதிய எண்ணம் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள பல தகவல்களை தான் அவர் கொஞ்ச அழகியல் சேர்த்து சந்தைப் படுத்தியுள்ளார்.
பெரும்பான்மையான மேற்கத்திய நாடுகளில் இருந்து வரும் மனோத்துவ நிபுணர்கள், இங்குள்ள பாரம்பர்ய பாரத யோகமுறைகளை அறிந்துகொண்டு சென்று அங்கு கொஞ்சம் மேற்கத்திய சுவையை ஊட்டி, தங்களது படைப்பாக, தங்களின் கண்டுபிடிப்பாக வெளியிடுகின்றனர்.

நமது மதிப்பையும் மரியாதையும் உணராத நாம் பல ஆயிரங்கள் கொட்டி இதனை வாங்கி, சிலாக்கிக்கிறோம்.

நினைப்பதை தீர்க்கமாக எந்தவித சலனமும் இன்றி நினைத்தால், கேட்பது கிடைக்கும் ! நினைப்பது நடக்கும் !

நமது மில்களில் 500 ரூபாய்க்கு விற்கபடும் துணிமணிகள் தான் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு , அங்குள்ள பிராண்டுகளோடு திரும்பவும் இந்தியாவிற்கு இரண்டாயிரம், மூவாயிரம் என்ற விலையுடன் வருகிறது.

இங்கு 500 என்ற விலையை நிராகரித்த நாம் மூவாயிரம் கொடுத்து அதேப் பொருளை பெருமையுடன் வாங்கி அணிகிறோம்.

அது போன்று தான் நமது வாழ்வியல் முறைகளும் இப்போது சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது.

திருவள்ளுவர் சொல்லாததை

ஒளவையார் சொல்லாத தகவலை

கொன்றை வேந்தன் சொல்லாத ஒன்றை

இந்த உலகின் எந்த இலக்கியமும், யோகமுறைகளும் சொல்லவில்லை.
இந்த சீக்ரெட் புத்தகத்தைவிட மேம்பட்ட பயிற்சிமுறைகள், மிக எளிமையான வடிவங்கள் நமது யோகமுறையில் உள்ளன.

சமீபத்தில் என் நண்பரின் தாயார் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. ஏம்பா ! நீதான் யோகவெல்லாம் சொல்லி தர்றீயே...எனக்கு ஏனோ மனம் நிம்மதியே இல்லை என்றார் (கவனிக்கவும்...ஊருக்கு உபதேசம் செய்யும் அடியேனின் அம்மாவும் இப்படிதான் புலம்புகிறார் )உண்மையில் இந்த வயதில் அவர் கவலைப்பட வேண்டிய காரணங்களே இல்லை.

பிள்ளைகுட்டிகளுக்கு நல்ல முறையில் கல்யாணம் செய்து கொடுத்து, பேரப்பிள்ளைகளையும் பெற்றுவிட்ட சூழலில் ( எங்கம்மாவின் ஒரே கவலை நான் எப்போது கல்யாணம் செய்யபோகிறேன் என்பதே ) அவரின் கவலைப்பட காரணம் பெரிதாக ஏதுமில்லை.

ஆனாலும் அவருக்கு மனதில் சிறு அழுத்தம் இருப்பதை அவர்கள் கண்கள் காட்டிக்கொடுத்தது.
பெரும்பாலும் கவலைப்பட்டு கவலைப்பட்டு பழகியவர்கள், கவலை இல்லாத சூழலில் கூட, கவலைப்பட காரணத்தை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் கவலைகளை நீங்கள் பட்டியலிட்டால். நிச்சயம் அதில் தொண்ணுறூ சதவீதம் அர்த்தமற்றது தான்.

வேதாத்ரி மகரிஷி கவலை ஒழிக்க ஒரு சுலபமான பயிற்சியை தருகிறார். ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

ஒன்று இரண்டு மூன்று என்று வரிசையாக உங்கள் கவலையை எழுதுங்கள்.

பின்னர் அந்த கவலையின் காரணம், அவசியம் எப்படி தீர்க்கலாம், அதற்கான வாய்ப்புகள், கால அளவு என அனைத்தையும் அருகில் எழுதுங்கள். பேப்பரில் எழுதும்போதே பெரும்பாலான கவலைகள் அர்த்தமற்றது என்பதை உணர்வீர்கள்.

மீதமுள்ளவைகளுக்கு காலத்தின் அடிப்படையில் தீர்வு கிடைக்கும்.

சில தீர்க்கமுடியாத கவலைகள் பற்றி கவலைப்பட்டு ஒன்றும் ஆக போவதில்லை. அதனால் அவற்றை தூக்கி குப்பையில் போடுங்கள்.

கவலையை ஒழிக்க சில மனோத்துவ பயிற்சிமுறைகளும் இருக்கின்றன.

அவை என்ன என்பது பற்றி அடுத்தப் பதிவில் பார்ப்போம்....

5 comments:

  1. அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  2. நன்றி அய்யா! வாழ்க வளமுடன்

    ReplyDelete
  3. மேலே கண்ட பேட்டரி விளக்கம், அந்த நபரின் இரக்க குணம்தான் காரணம். 2வது விளக்கம் புக் வியாபாரத் தந்திரம். Am I correct. எந்த உள்நோக்கமும் இல்லையேல், ஜக வசியத்தைப் பற்றி கூறலாம். தாங்கள் சொன்னமாதிரி, வள வள தான். ஜகவசியம் செய்வது எப்படின்னு கேட்ட கேள்விக்கு பதில் இல்லை.

    ReplyDelete
  4. மேலே கண்ட பேட்டரி விளக்கம், அந்த நபரின் இரக்க குணம்தான் காரணம். 2வது விளக்கம் புக் வியாபாரத் தந்திரம். Am I correct. எந்த உள்நோக்கமும் இல்லையேல், ஜக வசியத்தைப் பற்றி கூறலாம். தாங்கள் சொன்னமாதிரி, வள வள தான். ஜகவசியம் செய்வது எப்படின்னு கேட்ட கேள்விக்கு பதில் இல்லை.

    ReplyDelete

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...