Saturday, March 17, 2012

சத்யம் எஸ்கேப்பின் கர்ண மோட்சம்



இந்த வார ஆனந்த விகடனுக்காக காத்திருக்கிறேன்.

**************

இரண்டு நாட்கள் ஆகியும் இன்னும் பிரமிப்பில் இருந்து விலக முடியவில்லை.......!

************

சுண்ட கஞ்சி .....சல்பேட் ......சோடா ...நொச்சிகுப்பம்.....மாம்பலம் ....மயிலாப்பூர்.....சவுகார்பேட்.....மிண்ட்.... போட் கிளப்....கானகம்....என்று சென்னைப்பட்டினத்தின் சாயலில் இருந்து முற்றிலும் மாறுபட்டு......

சிங்கப்பூரா...மலேசியா....லண்டனா...அமெரிக்காவா......கனடவா....என்று யோசிக்க வைக்கும் பிரமாண்டம்....

சென்னையின் எக்ஸ்பிரஸ் அவன்யூ மால்... உண்மையில் கபாலீஸ்வரர் கோயிலுக்குள் பட்டுப்புடவைகளில் சரசரக்கும் மாமிகளுக்கிடையே ஒரு மெக்ஸிகோ மோகினியைப் பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது.

காபி ஷாப்

டாட்டு பார்லர்

கே.எப்.சி

பேஷன் ஸ்டோர்ஸ்

கீழே ஒன்று மேலே ஒன்று என்ற சறுக்கி விளையாடும் எஸ்கலவேட்டர்....

மேலே மட்டும் முழங்கால் தெரிய உடையணிந்து நடமாடும் ஹை ஃபை கேர்ள்ஸ்…..நம்ம ஊரு பிரவுன் நிறப்பெண்களுடன், பிரவுன் கண்களுடன் நடமாடும் பல பல மஞ்சள் நிறப் மங்கைகளும்….இன்னும் பிற….

இங்கிலிஷ்

இந்தி

மராத்தி

தெலுங்கு

கன்னடம்

கொஞ்சம் கொரியன்

சின்னதாக சீனம்…

இவைகளுடன் தேமதுர தமிழோசை.

இங்குள்ள சத்யம் சினிமாஸின் எஸ்கேப் திரையரங்கம் இன்னொரு மாயலோகம். இருக்கும் அஞ்சு ஸ்கீரீனில் திரையிடப்படும் இருபதுக்கும் மேற்பட்ட காட்சிகளில் ஒரு ஊறுகாய் அளவுக்கு தான் தமிழ்படம் தேறும்.

பிரமாண்டமான ஸ்கீரின்….பிரமிப்பூட்டும் ஒலியமைப்பு….பரபரப்பூட்டும் அனுபவங்கள் நிச்சயம் பார்ப்பவர்களுக்கு உண்டு. இங்கு பெரும்பாலும் தமிழ் படங்களைப் பார்ப்பது எரிச்சலூட்டும் செயல்தான்.

வாய்க்கால், வரப்பு, கத்தி, கபடா, தொப்புள் ஆம்லெட் என்று இதன் உயரிய தொழில்நுட்பத்திற்கு ஈடுகொடுக்கும் படைப்பு தமிழில் இல்லை என்பது தான் இதன் காரணம். இது ஒரு குறையும் கூட.
இந்த குறையை சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்பு ,அதாவது என் பெற்றோர்கள் பிறந்து சேர்ந்து என்னை உருவாக்க யத்தனித்த பல்லாண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஒரு தமிழ்பட போக்கியிருக்கிறது.

உண்மையில் தமிழ்நாட்டின் தலைநகரில் அமைந்த ஒரு திரைப்படக்கூடம் அத்தகைய படத்தை

திரையிட்டு கர்ண மோட்சம் அடைந்து இருக்கிறது எனலாம்.

அந்த சிறப்பு வாய்ந்த படம் கர்ணன். வெள்ளிக்கிழமை சென்னையில் பார்த்தது. பெங்களூர் திரும்பி
இரண்டு நாட்கள் ஆகியும் பிரமிப்பு அடங்கவில்லை.

சிவாஜிகணேசன், தேவிகா, சாவித்திரி, முத்துராமன், அசோகன் நடித்து பி.ஆர்.பந்துலுவின் இயக்கத்தில் 1964 –ல் வெளிவந்த அதே கர்ணன் தான்.

புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன்,டி.டி.எஸ் ஒலியமைப்புடன் இயக்குனர் பி.ஆர். பந்துலுவின் நூற்றாண்டையோட்டி இப்படம் மறுபடியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

சிறுவயது முதல் கேட்டு, டிவிக்களில் பார்த்து பழகிய படம் தான். எனது வாழ்நாளில் இப்போது தான் பிரமாண்டமான திரையில் கர்ணன் படத்தைப் பார்க்கிறேன்.

சினிமாவின் இருக்கிறோம்,சினிமாவை சுவாசிக்கிறோம்,என்று பெருமைப்பட்டு கொண்டு அலையன்ஸ் பிரான்ஸிஸ், மாக்ஸ்முல்லர் பவன் என்று உலக சினிமா கதை பேசி திரிவதை பெருமையாக நினைத்துகொண்டிருந்த எனக்கு எனது மொழியில் எனது மண்ணில் இத்தனை பிரமாண்டம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்நதுள்ளது முழுவதும் கவனத்தை கவராமல் போனது துரதிஷ்டமான ஒன்றுதான்.

ஒரு முழுமையான தொழில் நுட்ப படம் என்பார்களே. அந்த பெருமையை கர்ணன் படத்தை ஒப்பிடலாம். அந்த காலத்தில் பற்றாக்குறையாக கிடைத்த தொழில்நுட்பத்திலேயே இத்தனை அசத்தல் என்றால், இப்போது பி.ஆர்.பந்துலு போன்றோர் இருந்தால் எப்படியெல்லாம் அசத்தியிருப்பார்கள் என்று பிரமிப்பாக இருக்கிறது. குந்திதேவி தனக்கும் சூரியனுக்கும் ரகசியமாக பிறந்த குழந்தை தனது குலத்திற்கு இழுக்கு என்று மறைத்து கங்கையில் விடுவதிலிருந்து துவங்கி, அதே குந்தி தேவி மகனே என்று எல்லாரும் அறியும் வண்ணம் கர்ணனை ஏற்றுக்கொள்ளும் வரை ஆன் நேர்த்தியான கதையமைப்பு. திரைக்கதையின் தெளிவு சக்தி.டி.கிருஷ்ணசாமி என்பவர் தான் கதை சொல்லியாம் ! தாத்தா உங்களை உண்மையிலேயே மிஸ் பண்றோம் !

அந்தகாலத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட மிட்செல் கேமாரவை வைத்துகொண்டு நாம் யூகிக்க முடியாத கோணங்களில் காட்சியமைப்புகளில் பிரமாண்டம் காண்பித்திருக்கிறார்கள். இப்போதைய லேட்டஸ்ட் டிஜிட்டல் கேமராக்களை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால் மிட்செல் கேமராக்கள் யானை கணம் கணக்கும். அதனை கொண்டு பல்வேறு கோணங்களி படம்பிடித்துள்ள விதம், அந்த காலத்து மனிதர்களின் உழைப்பே உழைப்பு தான்.

சிவாஜி கணேசன் தொடங்கி எல்லாரின் நடிப்பை பற்றி எழுதும் அளவிற்கு நான் பெரியவன் இல்லை. அது நம்ம பார்த்திபன் சார் பாணியில் சொல்லப் போனால் சூரியனுக்கே டார்ச் அடிப்பது மாதிரி ஆகிவிடும். ஆனால் இன்றைய நடிகர்கள் நிச்சயம் இவர்களின் படத்தை பார்த்து பழகவேண்டும்.
லிப் டூ லிப் கிஸ் அடித்தால் தான் காதல் என்று இன்றைய தமிழ்ப்படங்கள் வழிமொழியும் சூழலில் ஒரு நளின பார்வை, ஒரு சிறு உதட்ட அசைவு, சின்னதாக உடல் மொழி.... அய்யோ சான்ஸே இல்லை !

வைட் ஆங்கிள் லென்ஸுகளில் விளையாட பெரும்பாலும் எல்லோரும் யோசிப்பார்கள். காட்சிக்குள் வரும் விஷயங்கள் நேர்த்தியாக இல்லை எனில் பிரமாண்டம் விலகிப் போய் பல் இளிக்கும்.
ஆனால் பிரமாண்டத்தை உணர்த்த நிறைய இடங்களில் வைட் ஆங்கிளில் விளையாடி இருக்கிறார்கள். கர்ணனின் அரண்மனை, துரியோதனின் அரண்மனை , போர்களம் என கலை இயக்குனர் இயக்குனருக்கு நிகராக மெனக்கட்டு இருக்கிறார்.குறிப்பாக அர்ஜுனனும், கர்ணனும் வில் வித்தையை காட்டும் காட்சியின் அரங்கை பல்வேறு இடங்களில் நிர்மாணித்து இருக்கிறார். செஞ்சிக்கோட்டையின் பின்னனியில் மிகவும் நேர்த்தியாக இயல்பு மாறாமல் அவர் அமைத்து இருக்கும் விதம், செஞ்சிகோட்டைக்காரனான எனக்கே இது நம்ம ஊரு ...என்று கண்டு பிடிக்க தாமதமாயிற்று.

பழையப் படங்களை நவீன தொழில்நுட்ப மெருகேற்றலோடு மறு வெளியீடு செய்த திவ்யா பிக்ஸர்ஸ் நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள். இதே போன்று அந்த கால பிரமாண்டங்களான நாடோடி மன்னன், வீர பாண்டிய கட்டபொம்மன், தில்லனா மோகனாம்பாள்,சிவகங்கை சீமையிலே போன்ற படங்களை காண ஆசை.

சத்யம் போன்ற அதி நவீன தொழில் நுட்பம் நிறைந்த அரங்குகளில் இப்படங்களில் பார்க்கும் போது தான், நமது முன்னோர்கள் திரைத்துறையில் எத்தகைய சாதனைகளை செய்துள்ளார்கள் என்று நமக்கு தெரிகிறது.

இன்னொரு முக்கிய விடயம், திரையரங்கில் என்னுடம் படம் பார்த்த கூட்டத்தில் ஒரு சில வயோதிக வாலிபர்களை தவிர ஏனையோர் அனைவரும் இளைஞர் கூட்டமே.படத்தைப் பார்க்கும் போது ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் அசத்தலான கைதட்டல். இறுதி காட்சிக்கும் பிறகு ஒரு நிசப்தமான அமைதியுடன் அனைவரும் கலைந்து சென்றனர். ( ஹய்யோ...இப்போது நடிகர் திலகம் நம்முடன் இல்லையே ...! )




அறுபதுகளில் வெளியான இத்திரைப்படம் நிச்சயம் அந்தக்காலத்தில் வெளியான உலக திரைப்படங்களுக்கு நிகரான ஒன்றுதான். என்ன ? சந்தைப்படுத்துதல் என்ற ஒரு வித்தையை நம்ம ஆட்கள் அறியாத சூழலில் இது உலக அரங்கைத் தொடாமல் போயிருக்கிறது என்பதே துரதிஷ்டம்.
வெறும் மொக்கை படங்களை உலக அளவில் ரிலிஸ் செய்து மகிழும் விநியோகஸ்தர்கள், இப்படங்களை மீண்டும் உலக அரங்கில் நிறுத்த முயற்சிக்க வேண்டும்இவர்கள் செய்கிறார்களோ இல்லை, இன்று உலகம் முழுவதும் பரவி நிற்கும் ஈழத் தமிழ்மக்கள் இதனை நிச்சயம் செய்வார்கள். ஏனெனில் இந்திய தமிழர்களை விட ஈழமக்களுக்கு தான் நடிகர் திலகம் சிவாஜியின் மதிப்பு தெரியும்.

அந்த காலத்தில் இந்தப் படத்திற்கு ஆனந்த விகடன் என்ன மதிப்பெண் போட்டிருக்கும் என்று அறிய ஆசை. பெட்டகம் பகுதியில் அது வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆனந்தவிகடனுக்காக காத்திருக்கிறேன்.

No comments:

Post a Comment

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...