Wednesday, March 28, 2012

வேதாத்ரி எனும் சமுக துறவி !



அருள் தந்தை வேதாத்ரி மகரிஷி மண்ணுலக சேவைகளை முடித்துக்கொண்டு விண்ணுலக சேவைக்கு பொறுப்பேற்றுச் சென்று இன்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைகிறது.

அருள்தந்தை என்னுள் ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம். தாயும் தந்தையும் உயிரையும் உடலையும் மட்டும் கொடுப்பதில்லை. நம் முன்னோர் வழி வந்த பல்வேறு பாவப்பதிவுகளையும் சேர்த்தே நமக்கு தருகின்றனர். இவ்வாறு புனிதமானதாக போற்றப்படும் தாய் தந்தை உறவுகள் கொடுத்த பாவப்பதிவுகளை கூட அகற்றி, தூய்மையான ஆத்மாவை உருவாக்கும் ஆற்றல் ஒருவருக்கு உண்டென்றால் அது குருமார்களுக்கு மட்டுமே உண்டு.

பேராசை, கடும்பற்று, பெருஞ்சினம், உயர்வு தாழ்வு மனப்பான்மை, முறையற்ற பால்கவர்ச்சி, வஞ்சம் என்று தறிகெட்டுத் திரிந்துகொண்டிருந்த என் மனதில் நீக்க வேண்டியதை நீக்கி, கூர்மைப்படுத்த வேண்டியதை கூர்மைபடுத்தி இதோ பிறப்பெடுத்த பெரும் பயனை முறையாக கடக்க இன்னமும் கைபிடித்து அழைத்து சென்று கொண்டிருக்கும் எனது ஆன்மிக தாத்தா வேதாத்ரி மகரிஷி.

வேதாத்ரி மகரிஷி உலகிற்கு என தனியாக எந்த செய்தியும் சொல்லவில்லை. அவர் தனிமனிதனுக்கு சொன்ன செய்திகள் அனைத்தும் உலகத்திற்கு பொருந்தும் செய்தியாகிவிட்டது. உலகை ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக திருத்த முடியாது என்பது மகரிஷிக்கு தெரியும். அதனால் தான் தனி மனித அமைதி ! அதன் மூலம் உலக அமைதி என்று மிக துல்லியமாக பாதை அமைத்தார்.

அணு உலை எதிரிப்புக்கான போர் பாமர மக்களிடையே உக்கிரமாக நடைபெற்று வரும் சூழலில் இந்த ஆன்மிக சாதகரின் தீர்க்க தரிசனம் என்னை வியக்க வைக்கிறது.

சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பே அணு உலைகளுக்கு எதிராக முழங்கியவர் அருள் தந்தை அவர்கள். வெறும் முழக்கமாக மட்டுமில்லாமல் “அணுவிஷம்” என்ற தலைப்பில் ஒரு நாடகமும் இயற்றியுள்ளார். சுவாமிஜி ஏராளமான புத்தகங்கள் எழுதி இருந்தாலும் அவர் இயற்றிய ஒரே நாடகம் இது தான்.

பாமரனுக்கு எளிமையாக இதன் கொடுமை புரியவேண்டும் என்பதாலே அவர் இதனை நாடகப் பாணியில் எழுதியிருக்கிறார். அணுவை வியாபாரமாக்கினால் “வீட்டோ” அதிகாரம் பெற்ற நாடுகள் எல்லாம் எப்படி வளரும் நாடுகளை நசுக்கி பிழைக்கும் என்பதை நக்கலும் நையாண்டியுமாக விலாசியிருப்பார்.அன்று அவர் எழுப்பிய முழக்கம் தான் இன்று பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறதோ என்று ஆச்சர்யமூட்டுகிறது.

சீனா அருணாச்சல பிரதேசத்தில் ஆக்ரமிக்கிறது என்று அலறுகிறார்கள். திபெத்தை ஏற்கனவே கபாளிகரம் செய்தாகிவிட்டது. இந்த எல்லைப் பிரச்சனை இந்தியாவில் மட்டுமா இருக்கிறது. உலகம் முழுவதும் வியாபித்து நிற்கிறது. வேதாத்ரி மகரிஷி இதற்கும் வழி காட்டியுள்ளார். அவரின் “ உலக சமாதானம் “ என்னும் நூலில் எல்லைகள் இல்லா உலகம் தேவை என்கிறார். எந்த ஒரு நாட்டிற்கும் எல்லை கோடுகளே இருக்க கூடாது என்கிறார்.

பருவ காலத்திற்கு ஏற்ப ஒவ்வொரு நாட்டில் இருந்தும் இன்னொரு நாட்டிற்கு பறவைகள் இடம்பெயர்கின்றன. இவை என்ன பாஸ்போர்ட் ! விசா ! வைத்துகொண்டா திரிகின்றது. பறவைகளே இவ்வளவு சுதந்திரமாக திரியும் போது மனிதனுக்கு ஏன் கட்டுப்பாடு என்று கேட்டவர் வேதாத்ரி.
வேதாத்ரி மகரிஷி விட்டு வைக்காத துறையே இல்லை. எல்லாத் துறைகளையும் எல்லாக் கோணங்களிலும் ஆய்ந்து, எளிமையான முறையில் அதிலிருந்து மக்களுக்கு பயன்படும் கருத்துக்களை சொல்லிச் சென்றுள்ளார்.

வேதாத்ரி மகரிஷி மண்ணுலகில் பூதவுடலோடு இருந்த காலக்கட்டத்தில் கூட இல்லாத எழுச்சி இப்போது அவர் விண்ணுலகில் இருந்து சேவையாற்றும் போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
அவர் வடிவமைத்த மனவளக்கலை. இப்போது தமிழக அரசின் பெரும்பாலான துறைகளில் திறனூக்கப்பயிற்சியாக பயிற்றுவிக்கப்படுகிறது.

இந்தியா மட்டுமின்றி இசுலாமிய நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே யோக முறை மனவளக்கலை மட்டும். ஏன் ? சில ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் யோகா பயிற்சிகள் தடைசெய்யப்பட்ட நிலையிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே யோகமுறை மனவளக்கலை மட்டும்.காரணம் மனவளக்கலை எந்தவித சாதி மத அடையாளங்களையும் கொண்டதல்ல. பெரும்பான்மையான கிறித்துவ கன்னியஸ்திரிகளும் , இசுலாமிய தோழர்களும் பயிலும் ஒரே மார்க்கம் வேதாத்ரியம்.

வேதாத்ரியத்தை போல் பெண்களை ஆராதிக்கும் ஆன்மிக பயிற்சி வேறு ஏதுமில்ல. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதற்கு என்ற கேள்வியை கொளுத்தி பெண்கள் தான் இப்பிரபஞ்சத்தின் சக்தி என்று அவர்களின் வலிமையைம் பறைசாற்றும் ஒரே பயிற்சியும் மனவளக்கலை தான்.

இன்று புதிது புதிதாக யோகா குருமார்கள் உருவெடுத்து வருகிறார்கள். நெடுஞ்சாலைக்கு நெடுஞ்சாலையிலோ அல்லது இயற்கை எழில் கொஞ்சும் பெரும்பாலான மலையடிவாரத்திலோ புதிது புதிதாக ஆசிரமங்கள் உருவெடுத்துகொண்டு இருக்கின்றன.

ஆனால் இப்படியெல்லாம் இல்லாமல் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக ஆசிரமங்களை ஆன்மிக பயிற்சிப்பட்டறை என்ற பெயரில் அழைத்தவர் வேதாத்ரி. பொள்ளாச்சிக்கு அருகே ஆழியாறில் அவர் அமைத்த முதல் ஆசிரமம் இன்று வரை அறிவுத் திருக்கோயில் என்றே அழைக்கப்படுகிறது.

அறிவுதான் தெய்வம். அதனை தவிர வேறு எதனையும் வணங்க அவசியமில்லை என்ற உண்மையை துணிச்சலாக முன்மொழிந்த வீரத்துறவி.

மலிவான விளம்பர யுக்தி ! கூட்டம் சேர்க்கும் வர்த்தக தந்திரம் ஏதுமில்லாமல் நாடி வருபவர்களுக்கு தேவையான பயிற்சி, அதிலும் சிலர் தொழிலை விட்டுவிட்டு வெகுதூரம் இதை கற்க வருகிறார்களே என்று வருந்தி அவர்களுக்கு தனது கை காசை செலவழித்து உதவி வழி அனுப்பிய வள்ளலாக வாழ்ந்தவர்.
துறவறம் மேற்கொள்ளும் முன்பு சம்சாரியத்தில் இருக்கும் போது கூட அவர் பெரும் வள்ளல் தான். சுதந்திரத்திற்கு முந்தைய காஞ்சி மாவட்டத்தில் ஆயிரத்திற்கு அதிகமான தறிகள், லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டிய போது கூட தொழிலாளர்களையும் லாபத்தில் பங்குதாரர்களாக்கி பெரும் புரட்சி செய்தவர்.

தனக்குரிய பங்கில் ஒரு காரை வாங்கி அதில் எப்போதும் எரிபொருளுடன் ஒரு ஓட்டுனரை அமர்த்தி அவசரக்கால பேறு மற்றும் சிகிச்சைக்கு சென்னை பொது மருத்துவமனை செல்ல அப்போதே இலவச ஆம்புலன்ஸ் சேவை நடத்தியவர்.



வேதாத்ரி மகரிஷி உடலளவில் இன்று நம்மிடம் இல்லை. ஆனால் சுக்கும நிலையில் நம்முடன் தான் இருக்கிறார். அதனால் தான் அவர் இல்லாத சூழலிலும் மனவளக்கலை உலகமெங்கும் அதிவிரைவாக பரவுகிறது.

மனவளக்கலையில் இன்னொரு புரட்சியாக, கிராமங்கள் தத்தெடுப்பு என்று புதிய திட்டம் இம்மாதம் முதல் செயல்படுகிறது. அரசுடன் இணைந்து செயல்படும் இத்திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக மாவட்டத்திற்கு மூன்று கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு அவர்கள் தேவைகள் பூர்த்திச் செய்யப்படுவதோடு, அங்குள்ளோருக்கு மனவளக்கலை பயிற்சிகள் முழுவதும் இலவசமாக கற்பிக்கபடுகிறது.

இவ்வாறு ஒவ்வொரு கிராமத்திற்கும் பிரத்தியோகமாக இரண்டு மனவளக்கலை பயிற்றுநர்கள் நிர்மாணிக்கபட்டுள்ளார்கள்.

இது ஒரு மகத்தான திட்டம், ஒரே நேரத்தில் சுமார் ஆயிரம் நபர்கள் ஆளுமை திறனூக்கம் பெறும் போது அது அடுத்த கட்டத்தில் இன்னும் பலமடங்கு அதிகரிக்கும்.

உலகின் நல்லது கெட்டதிற்கு எல்லாம் காரணம் எண்ணம் தான். பெருவாரியாக நினைக்கபடும் எண்ணங்கள் எல்லாம் சமுகத்தில் பிரதிபலிக்கிறது, மேலும் நடைபெறுகிறது.
மனவளக்கலை பயிற்சியின் மூலம் ஆரோக்கியமான எண்ணங்களின் வலிமை பிரபஞ்சத்தில் வலிமையாக பதியப்படும்.

இதன் மூலம் தீமைகள் குறைந்து மக்கள் விரும்பும் அமைதியான ஆனந்த உலகம் சாத்தியப்படும்.
உடலை விடும் போது வேதாத்ரி சொன்னார் “ நான் பிரபஞ்சத்தோடு இணைந்து இயங்கும் போது இன்னும் அதி வேகமாக செயலாற்றுவேன் என்றார்”

அவர் விண்ணுலக சேவைக்கு பொறுப்பேற்று சென்ற இந்த ஆறாவது ஆண்டுக்குள்ளாகவே மாபெரும் மைல்கற்களை தாண்டி அவரின் வாழ்வியல் முறை வெற்றிக்கொடி நாட்டி வருகிறது.

இதோ இப்போது அவர் கையைப் பற்றியபடியே தான் நடந்துகொண்டிருக்கிறோம். குருவின் கைகளை நாம் பற்றியிருக்கும் போது எந்த தீமையும் நம்மை அணுகாது.

நாம் விரும்பும் இந்த ஆனந்தமான அமைதியான உலகத்தை நோக்கி இதோ நடந்துகொண்டிருக்கிறோம்

வாழ்க வளமுடன் !

No comments:

Post a Comment

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...