Saturday, March 31, 2012

கூடங்குளம் - போர்குணம் விதைக்கப்பட்டுள்ளது ! புதைக்கபடவில்லை !



இரண்டு மாதங்களில் கூடங்குளம் தனது உற்பத்தியை துவங்கும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் அறிவித்துவிட்டார். பெரும்பாலான போராட்டக்காரர்களை கைது செய்து சிறையில் அடைத்தபின்னும்,சாகும்வரை உண்ணாவிரதம் என்று உட்கார்ந்த எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூட  எழுந்துசென்றுவிட்டார். அவர் எழுந்துசென்ற கையோடு மத்திய உளவுத் துறையும் உதயக்குமாரின் வீட்டில் சோதனையிட்டு சென்றுவிட்டது.

கூடங்குளம் மீட்பு போர் என்று அறிவித்து திருநெல்வெலியில் இருந்து புறப்பட்டுச் சென்ற பல்வேறு அரசியல் கட்சிகளும் மூன்று கிலோமீட்டர் தாண்டும் முன்பே கைது செய்யப்பட்டு விடுதலையாகி வீட்டிற்கு திரும்பிவிட்டனர்.

இனி கூடங்குளம் போராட்டத்தின் கதி என்ன ?

தென்மாவட்டம் முழுவதும் இனி வயிற்றில் நெருப்பைக்கட்டிக் கொண்டு உறங்கவேண்டியதுதான். வழக்கமாக  சென்னையில் இருந்து பாண்டிச்சேரிக்கும் கிழக்கு கடற்கரை சாலை வழியே செல்லும் போதெல்லாம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தை கடக்கையில் ஏதோ பேய் பங்களாவைக் கடக்கும் மனோபாவம் என்னுள் தொற்றிக்கொள்ளும். இனி என் திருநெல்வேலி பயணங்களிலும் இந்த பயம் ஒட்டிக்கொள்வதை தவிர்க்க முடியாது.

என்னடா உனக்கு உயிர் மேல் அவ்வளவு ஆசையா ? என்று நீங்கள் கேட்கலாம். அருள்தந்தை வேதாத்ரி மகரிஷி சொல்வது போல் வரும்போதே ரிடர்ன் டிக்கெட்டுடன் வந்தவர்கள் தான் நாம் அனைவரும், வந்த கடமையை முடித்து  திரும்புதல் பயணம்  அந்த வந்த இடத்தை  நோக்கி மிகவும் ஆத்மார்த்தமாக முழுநிறைவுடன் இருக்கவேண்டும். மதியால் முழுமையாக வாழ்ந்த பின்பு விதியின் தீர்ப்பை ஏற்கவேண்டும்.

ஆட்சியாளர்களின் முட்டாள்தனமான முடிவுகளால் மாற்றி எழுதப்படும் தீர்ப்புகளில் அல்ப ஆயுசில் போவதற்கு அடியேனுக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை.

இந்தப் புகைப்படத்தில் இருக்கும் சிறுமியைப் பாருங்கள். இந்த மூன்று வயதுக் குழந்தையின் பெயர் அபி, கல்பாக்கத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் சத்ராஸ் குப்பம் எனும் கிராமத்தை சேர்ந்தவர். இந்த ஆத்மா என்ன நோக்கத்தோடு இந்த பூமிக்கு  வந்ததோ தெரியவில்லை, அதற்குள் இந்தப் பாழாய்ப் காலன்....ஐயெம் சாரி......கல்பாக்கம் அணுமின்நிலையத்தின் கதிர் வீச்சு இந்த பச்சைப்பிள்ளைக்கு நாள் குறித்துவிட்டது. இவர் ரெட்டினோபிளாஸ்டுமா ( Retinoblastoma ) என்ற கண்புற்றுநோயாளால் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறார். வறுமையிலும், உடல்தான விழிப்புணர்வு பெற்ற இவளின் தந்தை மகளின் உறுப்பை தானம் செய்வது எப்படி என்று விசாரித்துகொண்டிருக்கிறார். பிறந்து மூன்று வருடங்களுக்குள்ளேயே திரும்பி செல்ல எந்த ஆத்மாவுக்காவது விருப்பம் இருக்குமா ? தனக்கு என்ன என்று தெரியாமல் இறந்துகொண்டிருக்கும் கொடுர நிலைக்கும் இந்த பிள்ளையை கொண்டு வந்தவர்கள் யார் ?

கூடங்குளம் திறந்தால் மின்வெட்டு ஒழிந்துவிடும் என்ற போலி மாயையை உருவாக்கி மக்களின் எதிர்ப்பலையை குறைய செய்த தமிழக அரசு கல்பாக்கம் அணு உலை இதுவரை என்ன சாதித்தது என்பதை ஆராய்ந்து பார்த்ததா ?

1984 ஆம் ஆண்டு 1000 மெகாவாட் மின்சாரம் என்ற இலக்குடன் தொடங்கப்பட்ட  கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் உற்பத்தி இன்று வரை 440 மெகாவாட்டைத் தாண்டவில்லை.இதோ வருகிறது வசந்தகாலம் என்ற ஆசைக்காட்டுவது போல் இன்னும் 500 மெகாவாட் உற்பத்தி விரைவில் தொடங்கும் என்று இன்று வரை சொல்லிகொண்டிருக்கிறார்களே தவிர, இதுவரை ஒரு ஆணியையும் பிடுங்கினதாக தெரியவில்லை. அதற்குள் எண்ணற்ற விபத்துக்கள்.

கல்பாக்கம் அணு ஆட்டத்தின் சில உதாரணங்கள் இதோ...

1995 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு அணுகசிவில் வாசுதேவன் மற்றும் தயாநிதி என்ற இரு ஊழியர்கள் இயல்பான கதிரிவீச்சு அளவைவிட ஐம்பது மடங்கு அதிகமான கதிர்வீச்சுக்கு உள்ளாகி  கல்பாக்கம் அணுமின்நிலைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

1999 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் தேதி இரண்டாவது அணு உலையில் கே5 என்ற யூனிட்டில் கசிந்த தண்ணீரில் அளவுக்கு அதிகமாக கதீர்வீச்சு கண்டறியப்பட்டது.இதில் சுமார் ஏழு ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

2001 ஆண்டு மே  மாதம் ஒன்றாம் தேதி சிவக்குமார் என்ற ஊழியர் உபயோகித்த நியோபிரேன் ( Neoprene ) என்ற கையுறையில் ஏற்பட்ட விரிசல் காரணமாக அவரின் உண்ட உணவினுள் கதிர்வீச்சுக் கலந்து பாதிப்புக்கு உள்ளானார்.

2002 ஆம் ஆண்டு ஜூலைமாதம்  ஏழாம் தேதி,செல்வக்குமார் என்ற ஊழியரின் இடது முற்றிலு எரிந்து போனது. ஒரு கதீர்வீச்சு மிகுந்த உலோகத்தை தள்ளிவிட முயன்றபோது ஏற்பட்ட விபத்து காரணம்.

2002 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி ஏற்பட்ட ஒரு விபத்தில் மதுசூதனன் மற்றும் ராஜன் என்ற ஊழியர்கள் உள்ளுறுப்புகளில்  தீவிரமான கதிர்வீச்சுக்கு உட்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதெல்லாம் ஒரு  ஜு..ஜுபி விபத்துக்கள்.

இதனைவிட பெரிதாக ஒன்று இருக்கிறது என்கிறது, கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் ஊழியர்கள் சம்மேளனம், 2003 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் தேதி இங்கு நடந்த ஒரு விபத்து குறித்து விளக்கம் கேட்டு,இந்த அணு உலையை நிர்வகிக்கும் மும்பை பாபா அணு அராய்ச்சி மையத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ள கடிதம். ( ரகசிய கோப்பு எண் (BARCFEA/ 03/03/131 dated 24 January 2003 )அந்த கடிதத்தை வெளியிட்டு இருக்கிறது தில்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டெகல்கா புலனாய்வு இதழ். அந்த கடிதத்தின் சாரம்சம் இதுதான். அணுமின் நிலையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றும் டாக்டர் சீனிவாசராஜுவை குறைந்த கதிர்வீச்சுக்கான வாய்ப்புள்ள ஒரு பகுதியில் இருந்து ஒரு குறிப்பிட்ட திரவத்தில்  பொருளை எடுத்துவரும்படி உத்திரவு இடுகிறார் அவரின் மேலதிகாரி. அந்தபகுதியில் கதிர்வீச்சைக் கண்காணிக்கும் கருவி பொறுத்தப்பட்டிருக்கவில்லை. இதனை அறியாமல் சீனிவாச ராஜு சுமார் பன்னிரெண்டு மணியளவில் தனது கைகளால் அந்தப் பொருளை எடுத்து சென்று உள்ளே இருக்கும் ஆய்வுக்கூடத்தில்  வைத்திருக்கிறார். அப்போது அங்கிருந்த அணுவீச்சு கண்காணிக்கும் கருவி அபாய நிலையில் கதிர்வீச்சு அதிலிருந்து வருவதை எச்சரித்து இருக்கிறது. இதனை அறியாமலேயே சுமார் ஒரு மணிநேரம் அந்தப் பொருளோடு ஆய்ந்த சீனிவாச ராஜுக்கு தான் கடுமையான கதிர்வீச்சில் தாக்கப்பட்டு இருக்கிறோம் என்பதை உணர கூடுதலாக இன்னும் ஒரு மணிநேரம் ஆனது. அன்று அவர் மட்டுமல்ல,  ஒரு பெண் உட்பட் மொத்தம் ஏழு பேர் கடும் பாதிப்புக்குள்ளாகி, அணுமின்நிலைய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனில்லாம் உயிரையையும் விட்டார். இந்த விபத்து குறித்த விளக்கத்தைதான் ஊழியர்கள் அமைப்பு கேட்டுள்ளது. அடுத்த எட்டு மாதங்கள் இதனை மறைக்க முயன்று தோற்றுப் போய், இறுதியில் பாபா அணுமின்நிலையத்தின் அப்போதைய இயக்குனர்  பட்டாச்சார்யா, இது இந்திய அணு உலைகளில் நடந்த விபத்துக்களிலேயே மிகவும் மோசமான விபத்து என்று ஒப்புக்கொண்டார்.

இன்னும் என்னென்னமோ நடந்திருக்கலாம். கல்பாக்கம் அணுமின்நிலைய மருத்துவமனையின் கோப்புகளை உண்மையுடன் ஆராய்ந்தால், பல அதிர்ச்சிகள் வெளிவரலாம்.

அணுமின் நிலைய ஊழியகளுக்கு மட்டும்தானா பாதிப்பு ? தற்போது கல்பாக்கத்தை சுற்றியிருக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் பெரும்பாலானோர்  புற்றுநோய், மலட்டுத் தன்மை, கண் பார்வை குறைபாடு என்று பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எல்லாம் கடல் மற்றும் விவசாயம் என இயற்கையோடு இயந்து வாழும் பாமர மக்கள். ஒரு சின்ன ஜுரம் தலைவலி என்றால் கூட ஒரு கஷாயமோ அல்லது சுட சுட கருவாட்டு குழம்போ வைத்து கூழுடன் கலந்து உண்டு நோய்க்கு பை ! பை ! சொல்லும்  இயற்கை வாழ்வில் திளைப்பவர்கள்.

இவர்களுக்கு புற்றுநோய், மலட்டுத் தன்மை,தோல் நோய் என்றால் என்னவென்று கூட தெரியாது. ஆனால் இப்போது இந்த அணுஉலையின் கதிர்கள் இதனையெல்லாம் பரிசளித்து இருக்கிறது.

தமிகத்தின் முதல் அணுமின்நிலையத்தினால் ஏற்படும் பாதுகாப்பு அம்சங்களே தகினதத்தம்  போடும் சூழலில், கூடங்குளம் ஏற்படுத்தப் போகும் பாதுகாப்பு பாதிப்புகள் இப்போதே வயிற்றில் புலியைக் கரைக்கின்றது.

சரி ! இப்போது கூடங்குளம் விஷயத்திற்கு வருவோம்.

இரண்டாயிரம் மெகாவாட் வரை மின்சாரம் தயாரிக்கலாம், அதில் ஆயிரம் மெகாவாட் தமிழகத்திற்கு கிடைக்கும் என்று முழங்குகிறது அணுமின் கழகமும் , அரசும்.  இதெல்லாம் அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்ற கதைதான்.
ஆமாம் ! கூடங்குளம் போராட்டம் நீர்த்துப் போய்விட்டதா
மக்கள் மனதில் பற்றவைக்கப்பட்ட எந்த ஒரு போராட்டமும் நீர்த்துப் போனதாக சரிச்த்திரம் இல்லை .ஆட்சி அதிகாரத்தின் இரும்பு பிடி. மின்வெட்டினை ஏற்படுத்தி, அது தீர்வு அணுமின்நிலையம் தான் என்ற தந்திர பிரச்சார யுக்திகள். அடக்குமுறைகள் மூலமாக போராட்டம் தணிந்தது போல் தோன்றினாலும் இன்னும் கிராமங்களில் மக்கள் மனதில் அது ஆழமாக ஊறிக்கொண்டே தான் இருக்கிறது.

அணுமின் நிலையம் செயல்படத்துவங்கும் சூழலில் சுமார் முப்பதாயிரம் பேர் அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றப்படுவதற்கான சாத்தியகூறுகள் இருப்பதாக கூறுகிறார் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாள உதயக்குமார்.

அவ்வாறு மக்களை இடம்பெறச்செய்யும் போது இந்த பிரச்சனை மேலும் தீவிரமடையும். மேலும் அ.தி.மு.க.வின்  பெரும்பான்மை பலம், அடுத்து அடுத்து உள்ளாட்சி, இடைத்தேர்தல் வெற்றி தமிழக அரசுக்கு இத்தகைய நடவடிக்கைக்கு துணிச்சல் தந்திருந்தாலும், எதிர்வரும் காலங்களில் அரசு செய்யும் சிறு பிழையின் போது ஏற்படும் போராட்டங்களின் போது கூடங்குளமும் தொற்றிக்கொள்ளும்.

மக்களுக்கு இருக்கும் கடமை, ஒவ்வாத ஒன்றை அரசு திணிக்கும் போது அதனை இடைவிடாமல் இறுதிவரை போராடி தடுக்கும் மனவுறுதியும், கட்டுக்கோப்பும்.
நான் சென்னையில் பத்திரிகையாளனாக சுற்றி திரிந்தபோது நடந்தது இது. மலேசியா சுற்றுலாத்துறை சார்பாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு. இந்தியாவில் மலேசியா சுற்றுலா வளர்ச்சியைப்  பரப்பும் நோக்கில் அந்நாட்டின் அப்போதைய சுற்றுலா அமைச்சர் மாண்புமிகு படுக்கா முகம்மது அப்துல் காதர் பின் அவர்கள் வந்திருந்தார்கள்.

மலேசியாவில் பிறந்து தமிழகத்தில் புகழ்பெற்ற நடிகர் ரவிச்சந்திரனும் சிறப்பு விருந்தினர். விருந்து உபச்சாரம் கொண்டாட்டங்களின் இடைவெளியில் மலேசியா அமைச்சருடன் பர்சனலாக பேச நேரம் கிடைத்தது.

அப்போது அவர் சொன்னது “ இந்தியாவில் இந்தியர்களுக்கு தனது நாட்டின் மதிப்பு தெரியவில்லை. இதோ தமிழ்நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள், சுமார் ஆயிரம் கிலோ மீட்டர்  நீளத்திற்கு கடல்  பரந்து விரிந்துள்ளது. ஆனால் இதனால் யாருக்கும் பலனே இல்லை. இந்த கடல் பரப்பு மட்டும் மலேசியாவில் இருந்திருந்தால், நாங்கள் இன்னும் பத்து மடங்கு முன்னேறி இருப்போம் என்றார்.

அவர் அப்படி கூறும் போது எரிச்சலாக இருந்தாலும்,  இன்று வரை நினைத்துப் பார்க்கும் போது அதில் நிறைய உண்மை இருக்கிறது.

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ...ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் என்று பாடி திரியும் இனம் தான். ஆனால் உண்மையில் இந்த மண்ணிற்கே உரிய வளத்தையும் பலத்தையும் அறியாமல் இருக்கிறது.

கூடங்குளம் பிரச்சனையும் அப்படிதான். தமிழ்நாடு போன்ற மிதமான தட்பவெட்ப நிலையுள்ள மாநிலத்தில் மாற்று எரிபொருளின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்பு ஏராளமாக இருந்தாலும் அணு ஆற்றலை மட்டுமே கட்டிக்கொண்டு அழுவது வேதனை தரக்கூடியது தான்.

தாமிரபரணி மண் அதி சக்தி வாய்ந்த ஒன்று.

தாமிரம் என்ற தாதுபொருளின் தன்மை பூமிக்குள் ஓடுவதாலும், தாமிரபரணி என்ற ஆற்றின் பெயர் காரணத்தோடு ஆன்மிக நெறியும், இயற்கையோடு இணைந்த வாழ்வும் பின்னி பிணைந்தது.

நெல்லையப்பர் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில் மற்றும் இலங்கையின் யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோயில் மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பதின் சூட்சுமமும் இதுதான். இதன் மூன்றிற்கு இடையே வான்காந்த ஆற்றல் நேர்கோட்டில் இருக்கும் வகையில் அமைத்தனர் கட்டிடக்கலையில் தலைசிறந்து விளங்கிய நமது முன்னோர்கள்.இதுமட்டுமின்றி நோயற்ற வாழ்வை பெற நெல்லையப்பர் கோயினுள் தாமிர பொற்சபை என்ற ஆற்றல்மிகு அமைப்பும் உள்ளது. நோயுள்ளவர்கள் இதன் கீழ் அமர்ந்து தியானம் செய்து வந்தால், நாளடைவில் உடலில் நோய்குறி மாறி ஆரோக்கியம் மேம்படும்.

உடலின் எத்தகைய நோய் ஏற்படினும் அதனை தீர்க்கவல்லது தாமிரபரணியின் தூய்மையான சுவைமிகு நீர். இங்கிருந்து வெளிபடும் காற்றும் அத்தகைய வலிமை வாய்ந்தது. நெல்லைப் பகுதியில் நீங்கள் ஒரு மோசமான கையேந்தி பவனின் சென்று சாப்பிட்டால் கூட தேவமிர்தமாக சுவைக்கும். எல்லாம் இங்கு  பூமிக்குள் ஓடும் நீரின் தன்மையும் அதனுள் ஒளிந்திருக்கும் பரிசுத்தமும் தான்.
ஏற்கனவே கோவையை சுற்றி தோல் பதனிடும் தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகளின் நீரை ஒழுங்குப்படுத்தாமல் சிறூவாணியின் சுவையை ஐ.சி.யூ.வில்  வைத்திருக்கிறார்கள். இப்போது தாமிரபரணிக்கும் வாய்க்கரிசி போட நாள் குறித்து இருக்கிறது அரசின் செயல்பாடு.

இப்படி ஆரோக்கியமும் ஆனந்தமும் நோயற்ற வாழ்வும் நிறந்த நெல்லை சீமைக்கு  இனி கூடங்குளம்  தரப்போகும் பரிசை எண்ணிப் பார்க்கும் போது வேதனையின் உச்சம் தான் தெரிகிறது.

ஏற்கனவே  மணல் கொள்ளையார்களால் தாமிரபரணி அன்னை செத்துப் பிழைத்துகொண்டிருக்கிறாள். கூடங்குளம் மொத்த கணக்கையும் தீர்த்து வைத்துவிடும் போலிருக்கிறது.

அணு உலையால் ஏற்படும் ஒரே நன்மை, அதன் மூலப்பொருளை திரும்ப திரும்ப பயன்படுத்த முடியும் என்பது மட்டுமே ! அதாவது இப்போது பெரும் விலைகொடுத்து யுரேனியம் வாங்கப்பட்டாலும், அதனை எத்தனை முறை வேண்டுமானலும் மறு சுழற்சி செய்யமுடியும், அதனால் நாளடைவில் மூலப்பொருளுக்கான முதலீடு ஜூரோ காஸ்ட்டாக தெரியும்.

இது சாதகமான ஒன்றாக கருதப்பட்டாலும், இந்த நிலையை அடைய நீண்ட நாட்களாகும், இந்தியாவில் உள்ள பெரும்பாலான அணு உலைகள் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து இயங்க முடியவில்லை. ஜூரோ காஸ்ட் நிலையால் ஏற்படுத்தும் நன்மையைத் தவிர இதன் பயன்பட்டால் ஏற்படும் பாதிப்பு பெரும் அளவில் இருக்கும்.

நெல்லை மாவட்டம் தவிர ஏனைய மாவட்டங்களில் வசிக்கும்  சொந்தங்களே, ஏதோ உங்களுக்கு பிரச்சனை இல்லை என்பது போல் இருந்துவிடாதீர்கள்.
கல்பாக்கத்தில் ஒன்று கூடங்குளத்தில் ஒன்று இரண்டுக்குமிடையேயான தூரம் சுமார் 700 கிலோமீட்டர் மட்டுமே. ஏதாவது ஏடாகூடமாக நடந்தால், தமிழ்நாடு என்ற மாநிலமே இந்திய வரைபடத்தில் இருக்காது. புல் பூண்டு முளைக்க கூட இன்னொரு பரிமாணம் எடுக்கவேண்டும்.

எனவே கூடங்குளம் என்பதை நமத்து போன ஒரு விஷயமாக பார்க்காமல், நமது இருக்கைக்கு கீழே எரியும் நெருப்பாக பாவித்து, அணு உலைகளுக்கு எதிரான போரட்டத்தை இன்னும் பல்வேறு வழிகளில் தீவிரப்படுத்தவேண்டும்.
அதுதான் உங்களுக்கு அல்ல, இயற்கைக்கும் , தேசத்திற்கும் நீங்கள் செய்யும் பேருதவி.

எத்தனை அதிகார துஷ்பிரயோகங்கள் வந்தாலும் போராட்டங்கள் என்று புதைக்கபடுவதில்லை. அவை விதைக்கப்படுகின்றன என்றார் சேகுவாரா.
இப்போதைக்கு அதிகாரம் என்ற மண்ணைக் கொட்டி போராட்டாங்கள் புதைக்கப்பட்டாலும். விரைவில் அது முளைக்கும் !

1 comment:

  1. //எத்தனை அதிகார துஷ்பிரயோகங்கள் வந்தாலும் போராட்டங்கள் என்றும் புதைக்கபடுவதில்லை//

    ReplyDelete

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...