Monday, January 19, 2015

சுமார் எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும் ; அஜயன் பாலா



ஒரு நல்ல புத்தகம் நூறு நல்ல அனுபவங்களுக்கு சமமானது.

பல அனுபவங்களே தொகுப்பாக வந்தால் எப்படியிருக்கும் ?

அது தான் “ சுமார் எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும்” கட்டுரைகளின் தொகுப்பு. எழுத்தாளரான அஜயன்பாலா தன் வாழ்வில் நிகழ்ந்த சுவரஸ்யமான தகவல்களை அழகான கட்டுரைகளாக வடித்திருக்கிறார்.

ஒல்லி பெல்லி நடிகை சிம்ரன் மீதான் ஆரம்பகால ஈர்ப்பு, பின்னாளில் அதே சிம்ரன் குண்டு பூசனையாக இருக்க யாரென்றே சரியாக அடையாளம் தெரியாமல் அவர் முன் உட்கார்ந்து,சந்தேகமுடன் கதை சொல்லிவிட்டு ஆமா ! நீங்கள் சிம்ரன் தானே என்று அவரிடமே கேட்ட அப்பாவித்தனம் என நகைச்சுவையுடன் ஆரம்பிக்கிறது முதல் கட்டுரை.

தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிரவேசம் அவரின் வாழ்வில் எத்தகைய தன்னம்பிக்கையை விதைத்தது என்பதை விவரித்து, அவரின் ரசிகனாக உருமாறி, இப்போதைய நாட்களில் ரஜினியின் செயல்பாடுகளின் தெளிவின்மையை அவரின் கோடனான கோடி ரசிகர்களின் முதல்வராக முன்னின்று கேள்வி கேட்கிறார் எழுத்தாளர் அஜயனபாலா.

ஒவ்வொரு மனிதனுக்கு ஒரு தனித்துவம் உண்டு. ஒவ்வொரு மனிதனும் தனித்துவம் வாய்ந்த இன்னொரு மனிதனுடனான தனது வாழ்வு முழுவதும் பயணித்துகொண்டே இருக்கிறான். இதுதான் சமூகத்தின் செயல்பாடு.

ஒரு சராசரி மனிதன் தன் வாழ்வில் நிகழ்வுகளை கவனிப்பதை விட ஒரு எழுத்தாளன் கவனிக்கும் போது அது முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது. அவ்வகையில் எழுத்தாளர் அஜயன் பாலாவின் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்கள் அவரின் அனுபவங்களாக பல்வேறு இதழ்களில் வெளியாகின. அவற்றின் தொகுப்பே சுமார் ”எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும்”

இது வெறும் நிகழ்வுகளின் தொகுப்பு அல்ல. சமூகத்தின் பிரதிபலிப்பு.

சினிமா, அரசியல், பெண்ணியம், கலை, இலக்கியம் என வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு மனிதர்களுடனான தனது பிரதிபலிப்புகளை எளிய எழுத்துநடையில் நகைச்சுவையும் சுவரஸ்யமும் பொங்க விவரிக்கிறது இத்தொகுப்பு.

பாலுமகேந்திரா மற்றும் பாலச்சந்தரை நினைவு கூறும் அவரின் கட்டுரைகள் மனதில் இனம்புரியாத கனம் சேர்க்கின்றன. பிரபலங்கள் மட்டுமின்றி முகம் தெரியாத எளிய மனிதர்களின் வாழ்வியலையும் இக்கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர்.

பிரபல கலை இலக்கிய விமர்சகர்  வெளி ரங்கராஜனின் பார்வையில் இந்நூல்

தன்னுடைய அழகியல் ஈடுபாடுகளின் பல திறப்புகளைப் பகிர்ந்து கொள்வதின் மூலம் அவருடைய பல்வேறு மன எழுச்சிகள் பார்வைக்கு வருகின்றன . வாசிப்புகள் அவதானிப்புகள், நட்புகள் , மற்றும் பயணங்களின் ஊடக அவர் பெறும் படைப்புப் பொறிகள் அவரைப் பல இடங்களுக்கு அழைக்கின்றன். நடைமுறையில் உலகின் ஏமாற்றங்களும் இரவுபொழுதுகளும் நண்பர்களின் உரையாடல்களும் அவருக்கு பல செய்திகளை சொல்லியபடி உள்ளன. தேடல்கள் மேலும் கூர்மைப்படுகின்றன. பிரமிள், ஸ்ரீராம் மற்றும் மருது போன்ற படைப்பாளிகளின் ஆழ்ந்த அழகியல் சித்திரங்களை இனம் காண்பது சாத்தியமானதாக இருக்கிறது “

ஒரே நூலில் ஒன்பான் சுவையையும் அனுபவிக்க விரும்பும் வாசகர்களுக்கு சுமார் எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும்  நல்ல பொங்கல் விருந்து.

நாதன் பதிப்பகத்தின் வெளியீடான இந்நூல் புத்தக கண்காட்சியில் டிஸ்கவரி புக் பேலஸ், எதிர் வெளியீடு, டிங்கு புக்ஸ், பரிசல், பனுவல் இன்னும் பல கடைகளில் கிடைக்கிறது.





Saturday, January 17, 2015

புத்தக திருவிழா - எந்த வகை வாசிப்பாளர் நீங்கள் ?

புத்தக கடைகளை பார்த்தவுடன் பலகார கடைக்குள் நுழைந்த சின்ன பையன் மாதிரி அது வேண்டும் இது வேண்டும் என்று மனம் ஆர்ப்பரிக்க தொடங்கிவிடும். படிக்கிறமோ இல்லையோ ஏதாவது ஒரு தலைப்பு மனசை சுண்டியிழுத்தால் உடனே  கடன் அட்டை தேய்ந்துவிடும்.

எனக்கு பெரும்பாலான சந்திப்புகள் அண்ணாசாலை பக்கம் தான். ஒரு சந்திப்புக்கும் இன்னொரு சந்திப்புக்கும் இடையே நேரம் கிடைத்தால் லேண்ட் மார்க்கில் தஞ்சம் அடைவேன். நேரம் கடத்தவே உள்ளே நுழைந்து இருக்கிறோம். சும்மா வேடிக்கைப் பார்த்துவிட்டு போகவேண்டும் என்று உறுதியான சங்கல்பம் ஏற்று உள்ளே நுழைந்தாலும் அது நிலைத்து நிற்காது. பத்து நிமிடம் உலாத்திக்கொண்டு இருந்தால் போதும் ஏதோ ஒரு தலைப்பு அல்லது புத்தகவாசனை விழியில் விழுந்து இதயம் நுழைந்து கடன் அட்டை தேயும். லேண்ட் மார்க் மூடிய கொஞ்ச நாட்கள் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. இப்போது எக்ஸ்பிரஸ் அவன்யூவில் ஸ்டார் மார்க் தொடங்கியபின் மீண்டும் அந்த பழக்க தொற்றிக்கொண்டது.

புத்தகம் படிப்பது என்பது ஒரு பழக்கமோ இல்லையோ புத்தகம் வாங்கி குவிப்பதும் ஒரு போதையாக மாறிவிட்டது. என்னைப் போல எத்தனை பேர் இந்த பழக்கத்தில் வீழ்ந்துகிடக்கிறார்கள் என்று தெரியவில்லை.

வாசிப்பாளர்களை மூன்று விதமாக பிரிக்கலாம்.

தீவிர வாசகர்கள். தொடர்ந்து வாசித்துகொண்டே இருப்பார்கள். ஒரு நூலை எடுத்தால் படித்து முடித்துவிட்டு. அடுத்த நூலை எடுத்து படித்துகொண்டு இருப்பார்கள். அல்லது பாத்ரூமில் ஒன்று,பெட்ரூமில் ஒன்று ( சில வீட்டில் இங்கு இவர்களால் படிக்கப்படவேண்டிய புத்தகம் சும்மனே தூங்கிக்கொண்டிருக்கும் ), காபி டேபிளில் ஒன்று, காரில் ஒன்று, பால்கனியில் ஒன்று என இரைந்து கிடக்கும். மாற்றி மாற்றி படித்துக்கொண்டிருப்பார்கள்.

படிக்கும் பழக்கம் உள்ளவர்கள். பிடித்தமான நூல்களை வாங்கிவைத்துகொண்டு நேரம் கிடைத்தாலோ, நேரம் ஒதுக்கி வைத்துக்கொண்டோ படிப்பவர்கள்.

பொழுதுபோக்கு வாசகர்கள். நேரத்தை கடத்த புத்தகத்தை படிப்பார்கள். இவர்கள் தீவிர வாசகர்கள் போல் நிறைய அழுத்தம் கொடுத்துக்கொள்ளமாட்டார்கள்.

இப்படி வகைப்படுத்தினால். மாதம் எத்தனை நூல்கள் படிக்கிறோம் அல்லது எத்தனை பக்கம் படிக்கிறோம் என்று கணக்கு வரும். ஒரு தீவிர வாசகனாக நாளொன்று நூறுபக்கம் என்ற கணக்கில் மாதம் 3000 பக்கங்கள் படித்துவிடுபவராக இருந்தால். ஆண்டுக்கு 35000 முதல் 50000 பக்கங்கள் வரை படிப்பவராக இருப்பார். இவர்கள் நூறு முதல் இருநூறு புத்தகங்கள் வரை 100 பக்கத்தில் இருந்து 500 பக்கங்கள் உடையதாக வாங்கி வைத்துக்கொள்ளலாம்.

இதே போல் கணக்கு போட்டு அவரவர் படிக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப வாங்கி வைத்துகொள்ளலாம். ஆண்டுக்கு வெறும் 3000 பக்கங்கள் மட்டுமே படிப்பேன் என்பவர்கள் நூறு புத்தகங்கள் வாங்கி வைப்பதால் அறை நிறையுமே தவிர மனம் நிறையாது.

இப்போதெல்லாம் சமையல், ஜோதிடம் போன்ற நூல்களே அதிகம் விற்பனையாகின்றன. நவீன இலக்கியம் என்ற புனைவில் திகட்ட திகட்ட செக்ஸ் இருந்தால் இளந்தாரிப்புள்ளைகள் ( நமக்கு தியரி சரிபட்டு வராது ) எல்லாம் விழுந்தடித்து வாங்கிக்கொள்கின்றன. சில சில்வண்டுகள் திருட்டு விசிடி திருட்டு டிவிடி போல் pdf எப்பில் தரவிறக்கம் செய்கின்றன. பெருமாள் முருகனின் மாதொருபாகன் பிரச்சனைப் பற்றி எல்லோரும் ஒப்பாரி வைத்துகொண்டிருந்த போதே சிலர் லஷ்மிமேனன் புது வீடியோ வந்திருக்கு வேணுமா என்கிற ரீதியில் pdf இருக்கு அனுப்பவா என்று கேட்கிறார்கள்.

காசுக்கொடுத்து வாங்குங்க சுவாமி பதிப்பாளர் பாவம் பொல்லாது !

இது இப்படி இருக்க சில பதிப்பகங்கள் செய்யும் அட்டூழியம் கேட்க மாளாது. புத்தக கண்காட்சிக்கு முன்னால் எனக்கு இரண்டு நூல்கள் தேவைப்பட்டன. ஒன்று சிறுபாணற்றுப்படை, இன்னொன்று பெரும்பாணாற்றுப்படை. இதனை தேடி அலைந்த போது ஒரு பதிப்பகத்தை சொன்னார்கள். அங்கு வாங்க சென்றேன். நான் கண்ட காட்சி பதிப்பக தொழிலில் இப்படியும் நடக்குமா என்று அதிர்ச்சி தந்தது. அட்டையே இல்லாமல் உள்ளடகத்தை மட்டும் அடித்து வைத்துகொள்கிறார்கள். புத்தக திருவிழா நெருங்கும் போது மட்டும் விலையை கூட்டி தேவையான அட்டையை அடித்து ஒட்டி அதனை கண்காட்சியில் வைத்துவிடுகிறார்கள். உதாரணமாக இருபது ரூபாய்க்கு அடிக்கும் புத்தகம் கடையில் நாற்பது ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள். இதில் கடை விற்பனை கழிவு இதர செலவுகள் என பாதி போய் லாபம் குறைவாகத்தான் கிட்டும். புத்தக கண்காட்சிக்கு வரும் போது அதே புத்தகம் அறுபது ரூபாய் விலை தாங்கி வரும். அதில் பத்து சதவீதம் கழிவுப் போனால் கூட ஐம்பத்து நாலு ரூபாய்க்கு விற்கப்பட்டு நேரடியாக பதிப்பாளருக்கு முப்பத்திநாலு ரூபாய் லாபம் கிடைக்கிறது. இது எல்லோரும் செய்கிறார்கள் என்று சொல்ல முடியாது. வித்தை தெரிந்தவர்களின் வியூகம் இது. இதை எல்லோராலும் செய்யவும் முடியாது. பெரும்பாலும் சமையல், ஜோதிடம், தந்திர கதைகள், பாலியல் கதைகளில் இது நிகழ்கிறது.

ஆனால் நல்ல சில புத்தகங்கள் குறைந்த அளவே அச்சடிக்கபடுகின்றன. அதை வாங்கி வைத்துகொண்டு படிக்காமல் இருப்போம். இன்னொருவர் அந்த புத்தகம் எங்கு கிடைக்கும் என்று அலைந்துகொண்டிருப்பார். இப்படி ஒரு பாவத்திற்கு ஆளாகாமல் இருக்க, தேவையான புத்தகங்களை மட்டுமே வாங்குவது உத்தமம்.

ஐபோன் டேப்லெட் என்று வந்தபின்பு புத்தகம் வாங்கு பழக்கம் குறைந்துவிட்டது என்று ஒரு பொதுவான கருத்து பரவுகிறது. என்னைப் பொறுத்தவரையில் அப்படி ஒரு நிலை ஏற்பட்டு மீண்டும் புத்தகத்தை நோக்கிய பயணம் திரும்புகிறது என்று நினைக்கிறேன். சமீப மலேஷிய பயணத்தின் போது KLCCயில் கினோ கின்யா ( Kinokunya ) எனும் ஜப்பானிய புத்தக கடைக்கு சென்றேன். பெரும் பிரமாண்டம். உலகம் முழுவது தொடர்கடைகள் அமைப்பதில் மும்முரமாக உள்ளார்கள். இந்தியாவில் டில்லிக்கும் வந்துவிட்டதாக கூறினார்கள்.

நம்ம ஊரில் லேண்ட்மார்க் போன குறையை ஸ்டார்மார்க் வந்து நிரப்புகிறது. ஆன்லைன் வர்த்தகத்தால் கடைகள் பாதிப்பதாக கூறுவதும் ஏற்புடையது அல்ல. ரஜினிப்படம் ரிலீஸ் மாதிரியான பாவனைகளால் தான் இது. நியாயமாக 100ரூபாய்க்கு விற்க வேண்டிய டிக்கெட்டை 1000 த்திற்கு விற்றால் என்ன நிகழுமோ அதுதான் இங்கும் நிகழும். ஆன்லைன் வர்த்தகத்தின் வீச்சை புரிந்துகொண்டு சில பதிப்பகங்கள் குறைந்த செலவில் ஆன்லைனுக்கும் தரமுடன் அழகான காகிதத்தில் கடைக்களுக்கும் அச்சடிக்க தொடங்கிவிட்டன.

சமீபத்தில் நான் Badluck Good Luck என்றொரு புத்தகம் ஆன்லைனில் வாங்கினேன். நூற்றி ஐம்பது ரூபாய் புத்தகம் ஆன்லைன் ஆபர் எழுபத்தி ஐந்து என்றார்கள். ஆனால் கடையில் இருக்கும் புத்தக தரத்திற்கும் ஆன்லைனிற்கு இடையே நூறு வித்தியாசங்கள் இருந்தன. ஜெரக்ஸ் எடுத்து கலர் அட்டை போட்டு தந்தது போல இருந்தது.

அச்சடித்த காகிதத்தில் படிக்கும் ஆனந்தம் வேறு எதிலும் இல்லை.  நாம் விரும்பிய நிலையில்  இருந்து படித்துக்கொள்ளலாம். எத்தனை கேரண்டி கொடுத்தாலும் எலக்ட்ரானிக் பொருளில் இருந்து வெளிப்படும் ஒளி கண்களுக்கு உகந்ததா இல்லையா என்ற பட்டிமன்றம் நடந்துவரும் நிலையில்  Tablet,Ipad யோசிக்கவேண்டிய ஒன்றுதான்.
        ஆயிரம்தான் நவீனங்கள் புகுந்தாலும் கையால் எழுதுவதும் காகிதத்தில் படிப்பதுமான பழக்கங்களை அவ்வளவு சீக்கிரம் அழிக்க முடியாது. புத்தக திருவிழா நேற்றுதான் ஆரம்பித்தது போல் இருக்கிறது. இன்னும் இரண்டுநாளில் முடிய போகிறது.

     போனவருஷம் வரை வாசகனாக இருந்த நான் இந்த வருஷம் நாதன் பதிப்பகம் புண்ணியத்தில் ஒரு எழுத்தாளனாக களம் இறங்கியிருக்கேன். இன்னைக்கு நல்ல பதிப்பகங்கள் படும் பாட்டிற்கு எல்லோருக்கும் Compliment copy எல்லாம் அனுப்ப முடியாது. அதனால் ஒழுங்கா கடையில் வாங்கி படிச்சிட்டு ரிவீயூ எழுதுங்க.


”ஐ” அசத்தலும் பொத்தலும்



ஐ யின் வெற்றிக்கு எமி ஜாக்சன் என்ற ஒற்றை அழகி போதும்.

""ஸ்கீரிம் உருகும் கண்களும் காந்தப்புன்னக"ஐ”யும் ஐ – க்கு செலவழித்த பிரமாண்டங்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விடுகின்றன.

- யின் அசத்தல்கள்.

அழகும் அகோரமும் தாண்டி நிற்பதுதான் உண்மை காதல் என்ற ஒற்றை வரிதான் ஐ.

இந்த ஒற்றை வரிக்கதையை வைத்துக்கொண்டு பிரமாண்ட பேண்டஸியை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

இயக்குனர் ஷங்கருக்கு ஒரு பூங்கொத்து.

கதையின் உயிர்நாடியே விக்ரம் தான். அந்த அகோரமான மேக்கப்பையும் மீறி காதல், சோகம், ஆக்ரோஷம் என கலந்துகட்டி மெர்சலடிக்கிறார். அதுவும் இந்த வயதில் ஜிம்முக்கு போய் உடற்கட்டை ஏற்றி இறக்கி. விக்ரம் சார் நிச்சயம் உங்களின் உழைப்புக்கு உண்டு பலன்.


அடுத்து ஜில்ஜில் ஏஞ்சல் ! எமி ஜாக்சன். ஒல்லி பெல்லி. அந்த பார்வை....அந்தப் புன்னகை...அந்த நடை....அந்த நளினம்....அட போங்க பாஸு ! மார்கழி குளிரெல்லாம் இதுக்கு முன்னாடி ஜு ஜு பி.

இது எல்லாம் பிளாஷ்பேக்கில்தான். ஆனால் கடத்தபட்ட பின்பு நடிக்க பெரிய ஸ்கோப் இல்லை. எமிக்கிட்டே எல்லாம் நடிப்பை எதிர்பார்க்கலாமா ? இருந்தாலும் முயற்சி செஞ்சிருக்கார். இறுதியில் அகோரமானால் என்ன ஐ லவ் யூ Still ! என்று விக்ரமை கட்டிக்கொண்டு அவரை சரிபடுத்த மெனக்கெடுகிறார். ஏதோ பழைய புரதான நாடகத்தில் இதுபோன்ற ஒன்றை பார்த்த ஞாபகம்.

ஒளிப்பதிவு கூல் ! கூல் !

இந்தியாவின் டாப் பத்து ஒளிப்பதிவாளர்களை எடுத்துகொண்டீர்களெனில் அதில் எட்டு பேர் இவரின் சீடர்களாகதான் இருக்கவேண்டும். அவர் வேறு யாராக இருக்க முடியும். அவர்தான் பி.சி.ஸ்ரீராம். இவரின் சீடர்கள் முப்பத்திரெண்டு அடி பாய்ந்துகொண்டிருக்க அதைவிட அதிகமாக ஒவ்வொரு படத்திலும் பாய்ந்துகொண்டிருக்கிறார். போர் அடிக்கும் காட்சிகளில் எல்லாம் இவரின் ஒளிப்பதிவும் அழகியலும் தான் காப்பாற்றுகின்றன. நான்கு லைட் கொடுத்தாலே மனுஷன் பின்னி பெடலெடுப்பார். இப்படி ஒரு பிரமாண்டமான படத்தைப் பற்றி கேட்கவேண்டுமா என்ன ?

இவருடன் சேர்ந்து ஆர்ட் டைர்க்டருக்கும் ஸ்டண்ட் இயக்குனருக்கும் நிச்சயம் ஒரு சலாம் போடவேண்டும். உயிரை கரைத்து உழைத்து இருக்கிறார்கள்.

இப்படி பல அசத்தல்கள் இருந்தாலும் பல பொத்தல்களும் இருக்கின்றன.

.ஆர்.ரகுமான் சார் உங்களுக்கு தேவை சின்ன பிரேக். “ஐ “ மீன் இடைவெளி. ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க. காதல் படங்களில் நீங்கள் எப்படி பூந்து விளையாடுவீங்கன்னு தெரியும். இதுல உங்க சோர்வுதான் தெரியுது.

வலுவற்ற கதையை சுவரஸ்யமாக மூன்று மணிநேரம் இழுக்க, காட்சிகளும், சம்பவங்களும் முக்கியமான ஒன்று. ஐ யில் அத்தகைய சுவரஸ்ய சம்பவங்களோ காட்சி தோரணைகளோ இல்லை. இருப்பினும் அடுத்தது ஷாட் எப்படி இருக்கும் என்ற கதையின் போக்கை மீறி காட்சியின் மீது ஈர்ப்பை ஏற்படுத்துகிறது ஒவ்வொரு பிரேமும்
.
ஷங்கர் என்றால் குட்டி குட்டி ஐடியாக்கள். மெர்சலாயிட்டேன் பாடலில் எமி ஜாக்சன் பலவிதமாக உருமாறுவது அசத்தல் ஐடியா எனினும் முந்தைய பல படங்களின் பிரதிபலிப்பு தெரிகிறது.

பழிவாங்குகிறேன் பேர்வழி என்று வில்லனகளை எல்லோரையும் விகாரமாக்கி காண்பித்திருப்பது கொஞ்சம் டூ மச் ! குழந்தைகள் எல்லாம் அலறுகின்றன ஷங்கர் சார். இதுக்குதான் யு/ஏ  ஆக்கிட்டாங்களோ ?  

திரைக்கதையின் பாணி அரதபழசு. எதிர்பாரத ஒரு கடத்தல். ஏன் கடத்துகிறான், எதற்காக கடத்துகிறான் என்ற முடிச்சை ஒவ்வொன்றாக சுவரஸ்யமாக அவிழ்க்கவேண்டும். கடத்தல் நிகழ்ந்தவினாடியே நம்மால் கதையை யுகிக்க முடிகிறது. Intercut ல் கதை சொல்லும் பாணி கொஞ்சம் வேகத்தை குறைக்கிறது. எனினும் ஒவ்வொரு பிரேமும் காட்சிப்படுத்தபட்டுள்ள விதம் இதையெல்லாம் பூசி மறைக்கிறது.

கதை தான் ஒரு திரைப்படத்தின் உயிர்நாடி, அதுதான் எனக்கு முக்கியம் என்பவர்களுக்கு ஐ நிச்சயம் ஏமாற்றம்தான். ஒரு மூன்று மணிநேரம் பொழுதுபோக்கிவிட்டு வர விரும்புகிறேன் என்ற மனோநிலையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் ஐ ஏமாற்றம் தராது.படத்தின் பிரமாண்டத்தையும், தொழில்நுட்ப கூறுகளையும் பேசாமல் இருக்க முடியாது.

சினிமா யதார்த்ததின் பிரதிபலிப்பு என்பது எத்தனைக்கு எத்தனை ஒப்புக்கொள்ள வேண்டிய ஒன்றோ அதே போன்று அது மிகைப்படுத்தப்பட்ட பேண்டஸி என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும். மனித மனம் விரும்பு அந்த பேண்டஸி உலகினில் நம்மை சஞ்சரிக்க அழைத்து செல்கிறது ஐ யின் பிரமாண்டம்.

அசத்தல்களையும் பொத்தல்களையும் விட்டுட்டு இப்படி யோசித்து பாருங்க. 
டாம் குரூஸும் ஏஞ்சலினா ஜோலியும் நடிக்க இது ஹாலிவுட்டில் வெளியாகி இருந்தா என்ன சொல்லுவீங்க,

அப்புறம் இதை உண்மையில் ரசிக்கவேண்டும் எனில் திருட்டு விசிடியிலோ டிவியிலோ நிச்சயம் முடியாது. தியேட்டரில் அகன்ற திரையில், ஆரோ டிஜிட்டலில் மட்டுமே முழுமையை உணரமுடியும். எவ்வளவோ செலவு பண்ணிட்டோம். பேஸ்புக் டுவிட்டர் கமெண்ட் எல்லாவற்றையும் புறம் தள்ளிவிட்டு ஒருமுறை தியேட்டர்ல் போ பாருங்க.

ஐ” will appreciate you !




.








Friday, January 16, 2015

காட்பாதர் தமிழ் திரைக்கதை வெளியீடு - என்னை பத்திரிகையாளனாக ஆக்கிய எனது வாத்தியார் ஜி.கெளதம்

நூல் அறுந்த பட்டம் போல் ஆரம்பமானது வாழ்க்கை. இப்படி திரிந்த பட்டத்தை பிடித்து வியூகம் அமைத்து போட்டிகளில் கலந்துகொள்ள செய்து ஒரு அடையாளத்தை தந்தவர் ஜி.கவுதம்.


பன்னிரெண்டு வகுப்பு முடிந்தவுடன் எல்லோரையும் போல மென்பொருள் படிக்கதான் எனக்கு விருப்பமாக இருந்தது. கலந்தாய்வு முடிந்து ஒரு பிரபல ஆன்மிக மையம் நடத்தும் பொறியியல் கல்லூரியிலும் இடம் கிடைத்தது.கலந்தாய்வில் சொன்ன கட்டணத்தைவிட கல்லூரி வளாகம் சொன்ன கட்டணம் அதிகமாக தெரிந்ததாலும் அதனை கட்டும் சூழல் அன்றைய தினத்தில் என் குடும்பத்தில் இல்லாததாலும் என் பொறியியல் கனவு தகர்ந்தது.
நண்பர்கள் எல்லோரும் ஏதோ ஒரு கல்லூரிக்கு படிக்கப் போக எனக்கு வீட்டில் இருப்பது கூச்சமாக இருந்தது. நண்பர் ஒருவர் உதவியுடன் சென்னைக்கு ஒரு எண்ணெய் கடைக்கு கணக்கெழுத வந்துவிட்டேன். தி.நகர் கண்ணாம்மாபேட்டை சுடுகாட்டு பின்னால் அந்த கடை. அங்கேயே அறைகொடுத்து இருந்தார்கள். முதல் மாடி அறையை திறந்தால் சுடுகாட்டில் பிணம் எரிவது தெரியும். ஜன்னல் கதவை மூடிவிட்டாலும் பிணவாடை வீசும். ஆறுமாதம் இப்படிதான் போனது சென்னை வாழ்க்கை. இங்கிருந்து ஒரு எஸ்டிடி பூத்திற்கு தாவினேன். இந்த நிகழ்வும் என் வாழ்வில் முக்கியமானதுதான். இதுபற்றி பின்னர் சொல்கிறேன்.
எஸ்டிடி பூத் கொஞ்சம் சாவகாசமாக இருந்தது. அங்கிருந்து நந்தனத்திற்கு மாதம்தோறும் தொலைபேசி பில் பணம் கட்ட செல்லவேண்டும். அப்போதுதான் எனக்குள் ஒரு புது மன அழுத்தம் உருவானது. எஸ்டிடி பூத் வைத்திருப்பவர்கள் பணம் கட்ட வருபவர்கள் பெரும்பாலும் மாற்றுத்திறனாளிகள். கையும் காலும் நன்றாக இருக்கும் நான் ஒரு எஸ்டிடி பூத்தில் இருப்பது எனக்குள் ஒரு குற்ற உணர்ச்சியை தோற்றுவித்தது. இருப்பினும் உடனடியாக என்ன வேலை தேடுவது என்று தெரியவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவனுக்கு என்ன வேலை கிடைக்கும்.அங்கிருந்தபடியே பொறியியல் கல்லூரியில் இருந்து திருப்பி பெற்ற என் சான்றுகளை வாங்கி அஞ்சல் வழியில் பி.பி.. அப்ளை செய்துவிட்டு எப்படியாவது வாழ்க்கையில் சாதித்துவிடவேண்டும் என்ற ஆவலுடன் காத்திருந்தேன்.
அப்போது இயற்கை அறிமுகப்படுத்திய முக்கிய நபர் தான் கவுதம் சார். இவருக்கு நான் வைத்திருக்கும் செல்லப்பெயர் வாத்தியார்.
அப்போது அவர்கள் ஆனந்தவிகடன் பத்திரிகையில் இல்லை. கவுதம் சார், திருப்பதிசாமி சார், சுபாக்கா இன்னும் சிலர் இணைந்து தொலைக்காட்சி ஊடகத்தில் ஒரு பரிசோதனை முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். அது ஒரு செய்திமலர் போன்றது. நிஜம் என்ற தலைப்பில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிகொண்டிருந்தது. Reality Show அல்லது Current Affairs என்று சொல்லமுடியாத சுவரஸ்ய கலவை. அதன் படத்தொகுப்பு கே.பி.சுனில் சாரின் டெலிஜூம் ஸ்டியோவில் நடக்கும். அது நான் பணிபுரிந்த எஸ்டிடி பூத்தில் அருகில் இருந்தது. தொலைபேசி செய்ய குழு இந்த கடைக்கு வரும். அப்போது அந்த வார தொகுப்பு பற்றி காரசாரமான விவாதங்கள் நடக்கும். அப்படி அங்கு அறிமுகமானவர் தான் கவுதம் சார். சிறிது காலத்தில் நான் எஸ்டிடி பூத் பணியை விட்டுவிட்டேன்.
எனக்கு பத்திரிகையில் சேரும் ஆர்வம் இருந்தது. ஊருக்கு சென்று சிறிது காலம் இருந்துவிட்டு திரும்பி வந்து கவுதம் சாருக்கு போன் செய்தேன். அப்போது விகடனில் அவர் இல்லை எனினும் என்னை உதவியாளராக சேர்த்துகொண்டார். கவுதம் சார் விகடனில் இல்லையெனினும் ஆனந்தவிகடனின் இணைப்பாக வந்துகொண்டிருந்த Shopping Plus இதழின் பொறுப்பாசிரியராக இருந்தார். உண்மையில் அங்குதான் எனக்கான இதழியல் பாலப்பாடம் ஆரம்பித்தது. அதற்கு முன்பே பாக்யாவில் ஒரு சிறுகதை எழுதிவிட்டு எழுத்தாளன் என்ற கெத்தில் திரிந்துகொண்டிருந்த எனக்கு இதழியலின் யதார்த்தங்களை புரியவைத்தது கவுதம் சார்தான். நாம் எழுதுவதெல்லாம் எழுத்தல்ல, ஒவ்வொரு வரியும் ஒன்றை உணர்த்தவேண்டும். வார்த்தை பிரயோகம், வரிகள் பிரயோகம் என்று எல்லாம் அவர் கற்றுத் தந்ததுதான். நாம் எழுதும் எழுத்து பக்கமாகி, அச்சாகி புத்தமாக பார்க்கும் அந்த ஆச்சர்ய தருணங்கள் எனக்கு ஆனந்தவிகடனில் நிகழ்ந்தது. இப்படி ஆனந்தவிகடனின் தத்துபிள்ளையாக என்னை சுவகரித்து விகடன் பேப்பரில் செய்தியாளனாக சேர்த்துவிட்டு எனக்கான ஊடக வாழ்வை தொடங்கிவைத்தவர் கவுதம்.
அவரை சந்திக்கவில்லையெனில் நான் என்ன ஆகியிருப்பேன் என்று தெரியவில்லை. ஊடக வாழ்க்கையில் இருந்திருப்பேனா ? இல்லை எஸ்டிடி பூத், பேன்சி கடை அல்லது ஊருக்கு திரும்பி இருப்பேனா என்பது தெரியவில்லை. முழுக்க முழுக்க ஒரு பத்திரிகையாளனாக என்னை உருமாற்றியது கவுதம் சார்தான். ஆனால் எப்போது அவருடன் பல நேரங்களில் முரண்பட்டவனாகவே இருந்திருக்கிறேன்.
காட்பாதர் நூல் வெளியீட்டு விழாவில் கவுதம் சார் என்னைப்பற்றி பேசும் போது எனது பாஸிடிவ் பக்கங்களை மட்டுமே பேசினார். எப்படி ஒரு அண்னன் தன் தம்பியை பிறரிடம் பரிந்துரைக்கும் போது அவனின் நல்ல குணங்களை மட்டும் பரிந்துரைப்பாரோ அதே பாவனை. எழுத்து ஆர்வமும் வார்த்தை ஜாலமும் அவர் கற்று கொடுத்த வித்தை. இன்னும் மேலும் உயர்ந்து அவருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற பொறுப்பை அவரின் பேச்சுக்கு பின்னர் உணர்கிறேன்.
கவுதம் சார் பத்திரிகையாளனாக ஆக்கியபின்பு அதன் மீது சிரத்தையின்றி திரிந்த எனக்குள் ஒரு தூண்டுதலை விதைத்து எழுத்தாளன், மொழிபெயர்ப்பாளன் எனும் தனி அடையாளம் தந்திருக்கிறார் அண்ணன அஜயன் பாலா. வாழ்க்கை எந்த திட்டமிடலும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அவ்வப்போது குறுக்கிடும் நிஜ மனிதர்கள். வாழ்வில் நிஜ உயரத்தில் அமர்த்தி வழிகாட்டிச் சென்றுகொண்டிருக்கிறார்கள்



Thursday, January 15, 2015

விவசாயத்திற்கு திரும்பலாம் வாங்க


சென்னையில் கடும் புகைமூட்டத்தால் ஐம்பதிற்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக
புறப்பட்டது என்ற செய்தி பொங்கல் திருவிழாவின் சந்தோஷத்தை கொஞ்சம் தொந்தரவு செய்ததது.
வழக்கமாக பனிமூட்டமிருந்தால்தான் இப்படி நடக்கும். போகியை முன்னிட்டு சென்னையில் எரித்த புகையின் தாக்கம் பனியுடன் கலந்து புகைமூட்டமாக நகரை சுழ்ந்துகொண்டது. தரையில் இருந்து 500 மீட்டருக்கு அப்பால் பனிபடந்திருந்தால் விமானங்களை இயக்கமுடியும். நேற்று இது 50 அடி உயரத்திலேயே வலிமைப் பெற்று நின்றுகொண்டிருந்ததால் விமானத்தை இயக்கமுடியவில்லை.

பூமி வெப்படைதல் பற்றி வாய் கிழிய பேசிக்கொண்டிருக்கிறோம். அதனை தடுக்க உலக நாடுகள் கோடிக்கணக்கில் கொட்டிக்கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் அர்த்தமற்ற சம்பிரதாயங்களால் பூமியை இன்னும் வெப்பமாக்கும் சூழலைதான் உருவாக்கிகொண்டிருக்கும். கடந்த ஆண்டிற்கு இந்த ஆண்டிற்கும் இடையேயான சுற்று சூழல் மாசுபாட்டின் விகிச்சாரத்தை நீங்கள் அறிந்தால் நீங்கள் வெப்பமடைவீர்கள். இன்று டைம்ஸ் ஆப் இந்தியாவில் போட்டிருக்கும் இந்த சிறிய அட்டவனையைப் பாருங்கள்.

நேற்று பூமியின் மாசு இயல்புநிலையைவிட பலமடங்கு அதிகரித்து இருக்கிறது. இதில் நகைச்சுவை என்னெவென்றால் பொங்கல் திருவிழா என்பது இயற்கையை போற்றும், இயற்கைக்கு நன்றி சொல்லும் திருவிழா. இயற்கைக்கு நன்றி சொல்கிறேன் என்ற பெயரில் இயற்கையை கொன்றுகொண்டிருக்கிறோம்.

போகியில் புகை கூட்டும் பழக்கம் எப்படி மாறிவிட்டது ? போகியின் அடிப்படை மறுநாள் புதியமாதம் பிறக்கும் சூழலில் பழையனவற்றைக் கழிந்துவிட்டு புதியவற்றை தொடங்கவேண்டும் என்பது. பழையன என்பது பழைய பொருட்கள் அல்ல, பழைய பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், செயல்கள், திட்டமிடல்கள் இதனை கழிந்துவிட்டு புதியதை போற்றத்தொடங்குகள் என்பதுதான். இதில் கொஞ்சம் மாற்றம் வந்தது.

போகி தான் மார்கழியின் கடைசி நாள். பெரும்பாலும் மார்கழியில் குளிர் அதிகமாக இருக்கும். அதிகாலை எழுந்திருப்போர் இதனை சமாளிக்க விறகு சல்லிகளை போட்டு எரித்து தனப்பு ஏற்படுத்திக்கொள்ளும் பழக்கம் கிராமங்களில் உண்டு. அது போகியன்று பழைய பாய், முறம் என்று மாறியது. பின்னர் நவீன உபரகரணங்கள் வர சைக்கிள் டயர், பிளாஸ்டிக் பொருட்கள், நைலான் புடவை என்று எரிந்து இன்று சுற்றுசூழலுக்கு கிலி ஏற்படுத்திகொண்டிருக்கின்றன.

உண்மையில் உழவர்களுக்கான திருவிழா பொங்கள். இன்று எத்தனை பேர் உழவர்கள். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 75 லட்சம் ஏக்கர் உழவுநிலம் இருக்கின்றன. அவற்றில் பல நேடுஞ்சாலைகள் அமைக்க கபளீகரமாகிக்கொண்டிருக்கின்றன. நெடுஞ்சாலை வந்த வேகத்தில் அதன் இருபுறமும் இருக்கும் நிலங்கள் எல்லாம் பிளாட்டுகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. நெடுஞ்சாலைகள் போக்குவரத்திற்கு உதவுகின்றன என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் விளைநிலங்கள் பிளாட்டுகளாக மாறுவது எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ளகூடிய ஒன்றில்லை.

இன்று நன்றாக சம்பாதிக்கும் பலரின் முதலீடு இத்தகைய பிளாட்டுகள் மீதுதான். ஏக்கர் மூன்று நான்கு லட்சத்திற்கு வாங்கி பிளாட் போட்டு , ஒரு பிளாட் ஆறு,ஏழு லட்சம் என்று கொழுத்த லாபம் பார்க்கின்றனர். ஒரு இரண்டாயிரத்து சதர அடிக்கு ஏழு எட்டு என அழுதுவிட்டு பின்னர் அதன் விலையும் ஏறாமல், அங்கு குடிபோகவும் முடியாமல் எத்தனையோ பேர் தவித்துகொண்டிருப்பதை பார்க்கும் போது எரிச்சலும் மன அழுத்தமும் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

நகரத்தில் வசிக்கும், நவீன பணியாற்றும் பலரும் கிராமத்தில் இருந்து வந்தவர்கள் தான். நம்மில் பெரும்பாலோரின் முன்னோர்கள் வேளாண்மையை தொழிலாக கொண்டவர்கள்தான்.

இப்படி முதலீட்டுக்கு ஏதோ ஒரு பிளாட்டில் பணத்தை முதலீடு செய்வதைவிட, ஒரு பத்து லட்சத்தில் இரண்டில் இருந்து ஐந்து ஏக்கர்வரை நிலம் வாங்கலாம். அங்கு ஒரு அழகான பண்ணைவீடு அமைக்கலாம். ஒரு ஏக்கரிலேயே பண்ணைவீடு சாத்தியம். தமிழ்நாட்டின் நீளம் வெறும் 800 கிலோ மீட்டருக்குள்தான் எப்படி சென்றாலும். அதிகபட்சம் எட்டு மணிநேரப் பயணத்தில் எங்கும் அடைந்துவிடலாம். பண்ணைவீட்டில் இயற்கை விவசாயம், அழகிய குடில் அமைத்து விடுமுறை தினங்களில் அங்கு சென்று உங்களை நீங்களே ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். ஆடு, மாடு, கோழி, மீன், பட்டு பூச்சி, தேனீ வளர்ப்பு,மா,பலா, கொய்யா, வாழை என பழமரங்கள், விதவிதமான பூக்ககள்,பாரம்பர்ய பொருட்கள் என ஒருங்கிணைந்த பண்ணைத்திட்டம் செய்ய அரசும் பல்வேறு திட்டங்களை வைத்திருக்கிறது. இதனை உள்ளூரில் ஒரு விவசாயியின் கண்காணிப்பில் அழகாக செய்து உங்களாலும் பொருளீட்ட முடியும், ஒரு விவசாய குடும்பத்திற்கும் உதவி செய்யமுடியும்.

சனி ஞாயிறுகளில் அருகில் உள்ள பப்புகளிலும், விடுதிகளிலும் தங்கி பொழுதை கழிப்பதைவிட இது வாழ்க்கைக்கு மேலும் வளம் தரும்
கண்களை மூடி அமர்ந்து ஒரு சின்ன கற்பனை உலகில் சஞ்சரித்துப் பாருங்கள்.
ஒரு மூன்று நிமிடம் உங்கள் உடலையே கவனியுங்கள்.
அடுத்து மூன்று நிமிடம் உங்கள் மூச்சை கவனியுங்கள்.
இப்போது வாருங்கள் புதிய உலகிற்கு.
அழகான இயற்கை எழில் கொஞ்சும் பண்ணை வீடு.
காண்கிரீட் சுவர் இல்லை, இயற்கையில் அமைந்த மண் குடில்
பிளாஸ்டிக் எவர்சில்வர் பாத்திரமில்லை எல்லாம் மண் பண்டங்கள்.
வாகன இரைச்சல் இல்லை, சுற்றிலும் பறவைகள், அணில் குட்டிகளின் இன்ப ஒலி
பேன், ஏசியின் கார்பன் கலந்த காற்றில்லை, இயற்கை சுமந்த தழை இலையுடன் மண்மணம் சார்ந்த காற்று. இப்போது உங்கள் மனதை உணருங்கள். உங்களுக்குள் ஒரு மென்மையான தன்மை ஊடுருவுகிறதா.?
அழுத்தம் குறைகிறதா ? 
நினைத்தாலே இனிக்கிறதே !
வாழும் போது எப்படி இன்பமாக இருக்கும் ? 
யோசித்து முடிவெடுங்கள்.
இந்த பண்ணைவீடு வாரத்தில் இரண்டு நாட்கள் என்று கணக்கிட்டால் ஆண்டிற்கு ஏறத்தாழ 100 நாட்கள்  அதாவது சராசரியாக மூன்றில் ஒரு பங்கு உங்களை இயற்கையோடு இருக்க வழிவகை செய்யும்.  நோயும் இருக்காது மன அழுத்தமும் இருக்காது. அலுவலக பணிக்கு திரும்பும் போது உங்களுக்குள் ஆற்றல் பெருக்கெடுக்கும். பிள்ளைகளின் வாழ்விலும் மனதளவில், உடலளவில் மாற்றம் தரும்.
பிள்ளைகளுக்கு இயற்கையோடு இயற்கையாக வாழவும் வாய்ப்பைப் பெற்றுத் தரும்
அதுமட்டுமா ?

ஒருங்கிணைந்த பண்ணைத்திட்டத்தை துல்லியமாக கையாண்டால் ஆண்டிற்கு பத்து லட்சம் வரை பணமீட்ட முடியும் என்பதை சாதித்தவர்கள் சொல்கிறார்கள்.

வேளாண்மை உண்மையில் உத்வேகமூட்டும் தொழில். உலகின் மிகப்பெரும் செல்வந்தர்கள் இன்னும் விடாமல் விவசாயம் செய்துகொண்டிருக்கிறார்கள். ஏர் டெக்கான் விமான சேவை வழங்கிய கேப்டன் கோபிநாத் விமான சேவைக்கும் முன்பு பெரும் விவசாயம் தான் செய்தார். விகடனை ஊடகத்தின் உச்சிக்கு கொண்டு சென்ற அய்யா பாலசுப்ரமண்யன் வேளாண்மை செய்வதில் தான் உற்சாகமும், உத்வேகமும் பெற்றதாக கூறினார். பாரதிராஜாவின் ஒளிப்பதிவாளர் கண்ணன் சாரை வீன்ஸ் காலனி வீட்டைவிட திருவள்ளூர் பண்ணைவீட்டில் அரை டிராயர் டீ சர்ட்டுடன் மண்வெட்டிக் கையுடன் பார்க்கமுடியும்.

இனி நீங்கள் இன்சுரன்ஸ்,மெடிக்கல், என செலவு செய்வதுடன் ஒரு திட்டமிடுங்கள். ஊரில் சொந்தமாக குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலம் வாங்கவேண்டும். விவசாயம் செய்யவேண்டும் என்பதை கனவாக கொள்ளுங்கள். இனி சனி, ஞாயிறு விவசாயப்பண்ணையில்தான், திங்கள் ஊருக்கு திரும்பும் போது என் தோட்டத்தில் விளைவித்த பயறுடன் திரும்புவேன் என்பதை சங்கல்ப்பமாக கொள்ளுங்கள்.

ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம்.
ஆனந்தத்திற்கு உத்திரவாதம்.
போகியன்று புகை பெருகாது.

எந்த தொழில் செய்தாலும் ஒரு உழவனாக பொங்கலை முழுமையுடன் கொண்டாடும் மனதிருப்தியும் ஒரு முழுமையையும் உங்களால் எட்டமுடியும். வாங்க விவசாயம் செய்யலாம் !

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...