Tuesday, January 13, 2015

காட்பாதர் தமிழ் திரைக்கதை வெளியீடு - சில நெகிழ்வான தருணங்கள்

பிள்ளைப்பருவத்திலேயே ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தாம் என்னவாக வேண்டும் என்ற தீர்மானம் உருவாகிவிடுகிறது.
அவர்களின் செயலும் வெளிப்பாடும் அதை நோக்கியே செல்லும்.
அதனை உணர்ந்து பெற்றோர்கள் சுதந்திரமாக அவர்களை செயல்பட விடும்போது, அவரவர் விரும்பிய துறைகளில் அவர்களால் வெற்றிகரமாக பரிமளிக்க முடிகிறது.

அவர்கள் இருவரும் பள்ளிச்சிறுவர்கள். வெவ்வேறு கிராமத்தை சேர்ந்தவர்கள்.அருகில் உள்ள உள்ள சின்ன நகரத்தில் அமைந்துள்ள பள்ளிக்கூடத்துக்கு படிக்க செல்லவேண்டும்.
வேவ்வேறு ஊரில் இருந்து காலை வேளைகளில் வெவ்வேறு நேரங்களில் பள்ளிக்கு வந்தாலும். மாலை பள்ளி முடிந்தவுடன் பேரூந்து நிலையத்திற்கு ஒன்றாகவே திரும்புவார்கள். அவர்கள் இருவருக்குமே ஒரு பழக்கம் இருந்தது. அது புத்தகம் வாசிப்பு.!
அவர்களுக்கு காமிக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். ஜேம்ஸ்பாண்ட் கதைகள் என்றால் அலாதிபிரியம். அந்த காமிக்ஸ் புத்தகங்களை வாங்க அவர்களிடம் காசு இருக்காது. அதற்கு ஒரு உபாயம் கண்டுபிடித்தார்கள். அதுதான் கடைக்காரனிடம் வாடகைக்கு எடுப்பது. இரண்டு ரூபாய் கொடுத்து புத்தகம் வாங்கும் காசு இல்லாததால் ஆளுக்கு நாலாணா போட்டு ஐம்பது காசு கொடுத்து இரண்டு நாள் வாடகைக்கு அந்த புத்தகத்தை வாடகைக்கு எடுப்பார்கள். ஆளுக்கு ஒருநாள் என்று படித்துவிட்டு மடிப்பு களையாமல் புத்தகத்தை கடைக்காரனிடம் கொடுத்துவிடுவார்கள். கடைக்காரன். சில நேரங்களில் காமிக்ஸ் வெளியாகும் நாளில் அதிக வீட்டுப்பாடம் வந்துவிட்டால் குறிப்பிட்ட நேரத்தில் படிக்க முடியாது. அத்தகைய சூழல்களில் புத்தகத்தை திருப்பி தர ஒருநாள் கூடுதலாகும். கடைக்காரனின் கிடிக்கிபிடியில் தப்பிக்க பஸ் ஸ்டேண்டில் புத்தகத்தை மறைத்து வைத்துகொண்டு, மறந்துட்டேன்...நாளைக்கு கொண்டு வர்றேன் என்று எஸ் அடிப்போம்.
அதில் ஒருவனுக்கு திடீரென்று கதை எழுதும் ஆர்வம் வந்தது. ஒரு ஆட்டுக்குட்டி கோயிலுக்கு பலி இடுவதை எதிர்த்து கதை எழுதினான். உண்மையில் எப்படி கதை எழுதுவது என்று கூட தெரியாது. பக்கத்துக்கு எத்தனை வரி எழுத வேண்டும் ? ஒரே பக்கத்தில் மட்டும் எழுதவேண்டும் என்ற விவரம் கூட தெரியாமல், வெள்ளை நோட்டுப்புத்தகத்தின் நடுப்பக்கங்களை கிழித்து கதை எழுதினான்.
கதை எழுதியாயிற்று அதற்கு எப்படி படம் போடுவது ?
அந்த வயதில் அவர்களுக்கு தெரியாது கதை மட்டும் அனுப்பினால் போதும் தேர்ந்தெடுக்கப்பட்டால் படத்தை இதழ் வெளியீட்டாளர்களே போடுவார்கள் என்று. உடன் வந்த நண்பனுக்கு காட்சியியலில் விருப்பம் அதிகம். காமிக்ஸ் படிப்பதோடு அதில் இடம்பெறும் கதைப்படங்களை கூடுதலாக ரசிப்பான். அவன் முடிவெடுத்தான். நண்பனுக்காக படங்கள் போடுவது என்று. ஒருவன் கதை எழுத, இன்னொருவன் படம் வரைய அவை வார , மாத இதழ்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.
அது வெளியானதுமில்லை, திரும்பி வந்ததுமில்லை. ஆனால் அவர்கள் இருவரும் ஒன்றாய் படிக்கும்வரை நம்பிக்கையுடன் தொடர்ந்துகொண்டே இருந்தார்கள்.
பின்னர் கல்வியின் பொருட்டு இருவரும் வெவ்வேறு இடங்களுக்கு பிரிந்துசென்று விட்டார்கள். சிறிது காலம் கழித்து சந்திக்கும் போது அந்த நண்பர்களில் ஒருவன் ஒளிப்பதிவு இயக்குனராகவும், இன்னொருவன் ஊடகவியலாளனாக மற்றும் இயக்குனராக மாறியிருந்தான்.
அந்த ஒளிப்பதிவு இயக்குனர் புகைப்படம்,மாத்தியோசி, தொட்டால் தொடரும், அழகு குட்டிசெல்லம் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள விஜய் ஆம்ஸ்ட்ராங்.
அந்த இயக்குனர் தமிழ் மற்றும் கன்னடத்தொலைக்காட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளை இயக்கியுள்ள ராஜ்மோகன்.
பால்ய கால நட்புக்காக ஆம்ஸ்ட்ராங் காட்பாதர் விழாவில் கலந்துகொண்டான். அவன் என்னைப் பற்றி குறிப்பிடும்போது இந்த உண்மை நிகழ்வுகளை நினைவுப்படுத்தினான். உண்மையில் எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.
காட்பாதர் படம் வெறும் பொழுது போக்கு அல்ல. காட்பாதரின் ஒவ்வொரு கதாபாத்திரமும் கதை நிகழும் காலகட்டத்தின் சமூகவியல் பிரதிபலிப்பு. முடிந்தவரை அதன் மூலத்தின் உணர்வு மாறாமல் நமது தாய்மொழியில் வெளிப்படுத்தியுள்ளேன்

No comments:

Post a Comment

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...