Wednesday, January 14, 2015

காட்பாதர் தருணங்கள் - என்னைப் பற்றி எடிட்டர் நண்பர் அருண் துரைராஜ்

காட்பாதர் தமிழ்திரைக்கதை நிகழ்வில் என்னைப் பற்றி பேச எனது நண்பர்களை அஜயன் அண்ணன் அழைத்து பேச சொன்னது உண்மையிலேயே எனக்கு பெரும் ஆச்சர்யமான எதிர்பாராத நிகழ்வு.

என் நண்பன் அருண். திரைத்துறை பெயர் அருண் துரைராஜ். படத்தொகுப்பாளர்.
புகைப்படம்
முரண்
பச்சை என்கிற காத்து
உலோகம்
தொட்டால் தொடரும்
உலா
என குறுகிய காலத்தில் வரிசைக்கட்டி நிற்கின்றன அருண் பணியாற்றிய படங்கள். படித்தது மென்பொருள் என்றாலும் சினிமாவின் மீது கொண்ட காதலால் படத்தொகுப்பு பணியை தேர்ந்தெடுத்து அதில் அனுபவம் பெற்று இன்று முன்னனி படத்தொகுப்பாளாராக முன்னேறிக்கொண்டிருக்கிறார்..

தன்னைப்போலவே நல்ல தொழில்நுட்ப கலைஞர்களை உருவாக்க வேண்டும் என்ற தனியாத ஆவல் கொண்டவர் அருண். எப்போதும் ஒரு இளமை பட்டாளத்தை தன்னுடனே வைத்திருப்பார்.

ஒருநாள் அவரின் படத்தொகுப்பு அரங்கிற்கு சென்றிருந்தேன். அப்போது அமேசானில் இருந்து சில நூல்கள் வந்திருந்தன.

என்ன புத்தகம் அருண் ?”

எடிட்டிங் பத்தி தான் பாஸ் “ என்றார்

யோவ் ! நீதான் ஏற்கனவே எடிட்டர் ஆகிட்டியே...அப்புறம் எதுக்கு இன்னும் புத்தகம் படிக்கபோறே “

அதுக்காக....அப்டேட் இல்லாம விட்டுட முடியுமா பாஸ்...”

இதுதான் அருண்.
புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள எப்போதும் ஆர்வமுடன் இருப்பார். நியுயார்க் பிலிம் ஸ்கூலில் ஒர்க் ஷாப் ஆகட்டும் Adobe இன் ஒர்க் ஷாப் ஆகட்டும் சென்னை அதன் சுற்றுபுறத்தில் எது நடந்தாலும் அவருடன் சேர்த்து எனக்கும் ஒரு இருக்கையை முன்பதிவு செய்துவிடுவார்.
உண்மையில் ஒரு கலைஞனுக்கு தேவை எப்போதும் தன்னை புதுப்பித்துகொண்டு இருக்கும் மனோபாவம் தான். ஹாலிவுட்டில் எண்பது வயதுக்கு மேலும் அசத்தலான படங்களை கொடுப்பதற்கு காரணம் , அவர்கள் எப்போதும் தங்களை புதுப்பித்துக்கொண்டே இருப்பதுதான். தன்னை புதுப்பித்தல் என்கிற பாவனை பல நேரங்களில் நம்மிடம் இருந்து காணமல் போய்விடும். ஆனால் அது என்னிடம் கொஞ்சமேனும் இருக்கிறது எனில் அந்த பாவனை உண்மையில் அருணிடம் இருந்துதான் எனக்கு வந்திருக்க கூடும்.

அருண் உலகின் சிறந்தப்படங்களை வரிசை படுத்தி வைத்திருக்கிறார். ஒருநாள் நான் கேட்டபோது கொஞ்சமும் யோசிக்காமல் “ ஒரு ஹார்ட் டிஸ்க் கொடுங்க பாஸ், தருகிறேன் ! என்றார் “ கொடுத்த அடுத்த நாள் எனக்கு படங்கள் வந்தது.

அருணுடன் பல டாகுமெண்டரி மற்றும் குறும்படங்கள் பணியாற்றி யுள்ளேன். மிகவும் நேர்த்தியாகவும் சரியாகவும் முடித்துகொடுத்திருக்கிறார்.

என்னைப்பற்றி பேச அழைத்தவுடன் என்ன பேசப்போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தேன். அவர் என்னையும் என்னைத் தேடி வந்த அணில்குட்டிகளையும் பற்றி குறிப்பிட்டார்.

நான் அணில்குட்டிகளுக்காக இந்த மாதம் மாறவேண்டிய வீட்டை மாற்றாமல் இருப்பதாக கூறி அணில்கள் சுதந்திரமாக செல்லும் வரை அதனை பாதுகாக்க வேண்டும் என்றிருந்த என் மனோநிலையை மனிதாபிமானம் என்று குறிப்பிட்டார். ஆனால் இயற்கை வேறு விதமான முடிவை தந்திருக்கிறது அணில் அனுபவத்தில்.

மனிதாபிமானத்தை பற்றி பேசவேண்டுமானால் மீண்டும் காட்பாதர் கதாபாத்திரங்களுக்குதான் செல்லவேண்டும். தீமையை நியாயப்படுத்திய படம் என்று காட்பாதர் மீது ஒரு விமர்சனம் உண்டு. ஆனால் தீமை ? நன்மை ? என்றும் ஏதுமில்லை. எல்லாம் தேவையின் அடிப்படையில் நிகழும் ஒரு யதார்த்தம் என்பது தான் காட்பாதர் சொல்லும் இயல்பு நிலை.

காட்பாதர் பாத்திரங்கள் அனைத்துமே அதனதன் தர்மப்படி உருவாக்கபப்ட்டிருக்கும்.

உதாரணம் டான் கர்லியோன் கதாபாத்திரம். அவர் என்றுமே மக்களுக்கான நியாயத்தை வழங்குவதில் தள்ளிப்போட்டதில்லை. தன் செல்லமகளின் திருமண நாளன்று கூடதன்னை நாடி வந்தவர்களுக்கான நீதியை பெற்று த்தருவதில் மும்முரமாக இருப்பார். தன் மகளை நாசப்படுத்தியவனை கொல்லவேண்டும் என்று போன்சேர கேட்க, அவன் என்ன செய்தானோ அதையே அவனுக்கு திருப்பி செய்யவேண்டும் என்பார். கொலை செய்வது அவனுக்கான கூடுதல் தண்டனை என்பார். வந்தவர் கூடுதலாக பணம் தருகிறேன் என்று போன்சேரா குறிப்பிடும் போது “ நான் பணத்திற்காக கொலை செய்யும் கூலிப்படை இல்லை....இது என் மகளின் திருமண நாளில் வந்து கேட்டிருக்கிறாய்...என் மகளின் திருமண நாளில் என் திருமண பரிசு …! என்பார்.

அமைப்புகள் சார்ந்த நீதியின் மீது நம்பிக்கை இழக்கும்போது நமக்கும் காட்பாதர் மாதிரி ஒருவர் இருந்தால் நன்றாக இருக்குமெ என்ற எதிர்பார்ப்பு எழுகிறது.

காட்பாதர் வெறும் படம் அல்ல. அதனுள் மனித வாழ்வின் உளவியல் சூட்சுமங்கள் அடங்கியுள்ளது. நமக்குள்ளும் ஒரு காட்பாதர் ஒளிந்துகொண்டிருக்கிறா.ர். நாமும் தினந்தோறும் இந்த சூட்சுமங்களின் படியே இயங்கிகொண்டிருக்கிறோம்.



1 comment:

  1. பெருமையாக உள்ளது அருண் அண்ணா!! 😊

    ReplyDelete

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...