Tuesday, January 13, 2015

மனவளம் ! மனோபலம் !


மனவளம் என்பது தான் மனோபலம்.
ஒரு சாதாரண அரசு ஊழியர் தன் வீட்டில் இருந்து அலுவலகம் செல்வதற்கு குறைந்த பட்சம் இரண்டு மணிநேரம் பயணத்தில் செலவழிக்கிறார். பயணத்தில் இடையூறு. மேலதிகாரிகளின் பாராபட்சம். பணிச்சுமை என மனோபலம் குறையும் தாக்குதல்களில் தினந்தோறும் சிக்குகிறார்.

மனவளம் மிகுந்தால் மனோபலம் கூடும். மனோபலம் கூடும் போது செயலில் தெளிவும், விளைவில் முழுமையும் நிகழும்.
நேற்று ஒரு பணி தொடர்பாக தலைமை செயலகம் செல்லவேண்டியிருந்தது. தமிழ்நாட்டு அரசமைப்பின் மூளை இங்கிருந்துதான் செயல்படுகிறது.
பல்வேறு துறைகள். பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள். ஒருமித்த சிந்தனையும் மாநிலத்தின் வளர்ச்சிக்காக இயங்கிகொண்டிருந்தது.. நான் ஊழியர்களின் முகத்தை கூர்ந்து பார்த்தேன். பத்தில் எட்டு பேரின் முகம் சோர்ந்து போயிருந்தது.அரசு ஊழியர்கள் என்றவுடன் போராட்டம், ஊதிய உயர்வு போன்ற நிகழ்வுகள் தான் நினைவுக்கு வந்து அவர்களின் மேல் ஒரு வெறுப்புணர்ச்சியை தரும்.
அரசு ஊழியம் என்றால் அலட்சியம் என்று போகிற போக்கில் சொல்லிவிட முடியாது. ஒரு பத்து சதவீத ஊழியர்கள் அப்படி இருக்கலாம்.. மீதி அவதூறுகள் பொதுமக்கள் கொண்டிருக்கும் மனோபாவமாக கூட இருக்கலாம். எல்லோரும் கொடுத்த பணியை முடிப்பதில் மும்முரமாக தான் இயங்கிகொண்டிருக்கிறார்கள்.
எட்டு மணிநேரம் பணி. பல்வேறு கோப்புகள் சான்றுகளை சரிபார்க்கவேண்டும். பத்து நிமிடத்திற்கு ஒரு கோப்பு என்று கணக்கிட்டால். ஒரு மணி நேரத்தில் ஆறு கோப்புகள் பார்க்கலாம். எட்டு மணி நேரத்தில் தோராயமாக ஒரு ஐம்பது கோப்புகள் பார்க்க முடியும். ஆனால் கடைநிலை ஊழியர் முதல் முதன்மை செயலர் வரை எல்லோர் அறையிலும் குறைந்தது நூறு கோப்புகளாவது குவிந்து கிடக்கிறது. இதற்கு காரணம் அவர்களின் மெத்தனம் அல்ல. ஒரே நபர்களிடம் குவியும் கூடுதல் பொறுப்பு.
உண்மை இதுதான் ! அரசு ஊழியர்கள் அதீத பணிச்சுமையை சந்திக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இது தவிர்க்க முடியாத ஒன்று. இதே நிலையில் இவர்கள் வேலைகளை செவ்வனே செய்யவேண்டும் எனில் அதீத மனோபலம் தேவை.
இவர்களுக்கான மனவளத்தை வலிமைப்படுத்துவதின் மூலம் மட்டுமே மனோபலத்தை கூட்ட முடியும்.
பெண் ஊழியர்களை எடுத்துக்கொள்ளுவோம். கடைநிலை ஊழியர்களை நிச்சயம் நடுத்தரவர்க்க மாகவே கருத முடியும். காலையில் எழுந்து புருஷன், புள்ளைகள், குடும்பம் என்று தயார் செய்துவிட்டு அலுவலக வரவேண்டும். இங்கேயே அவர்களுக்கு அந்த நாளின் ஐம்பது சதவீத சக்தி விரையமாகிவிடும். அடுத்து இவர்கள் பெரும்பாலும் பேரூந்தையே உபயோகப்படுத்துகிறார்கள். காலையில் அலுவலக நெரிசலில் பேருந்தோ ரயிலோ ஏறி அலுவலகம் வந்து சேரும் போது நிச்சயம் அடுத்து இருபது சதவீத சக்தியை இழந்து நிற்பார்கள். அடுத்து இருக்கும் கொஞ்சம் நஞ்சம் சக்தியும் ஊசலாட மேலிட அழுத்தம், வரும் பொதுமக்களின் கேள்விகள் என அவர்களின் முழு சக்தியையும் அதில் செலவிட முடியாமல், எப்படா ஆபிஸ் முடியும் ? எப்போது வீட்டிற்கு போகலாம் என்ற மனோநிலையே மிகுந்தெழும்..
ஆண்களுக்கும் இதேதான். ஆனால் அதில் பாதிபேர் மாலையில் சோமபான திருவிழாவில் கலந்துகொண்டு சக்தியோடு பொருளையும் துறந்துவிட்டே வீட்டினுள் நுழைகிறார்கள். இந்த நிலையை மாற்றவேண்டும் எனில் தனிமனித மனவளத்தை பெருக்க வேண்டும்.
பழமையான வேலை வாய்ப்பு முறை மட்டும் வேலை முறைய முற்றிலும் மாற்றி அமைக்கவேண்டும். கடைநிலை ஊழியரோ முதுநிலை அலுவலரோ, சிரமமின்றி வீட்டில் இருந்து அலுவலகமும், அலுவலகத்தில் இருந்து வீடோ சென்றடைய நல்ல போக்குவரத்தை உறுதி செய்வது அவசியமாகிறது.
பணி செய்யும் இடத்திலும் ஆரோக்கியமான மனோநிலைக்கு உத்திரவாதம் இருக்கவேண்டும். சுகாதாரமான அலுவலக சூழல்.நல்ல கழிப்பறை, சிரமமின்றி உபகரணப்பொருட்கள்,.துறை சார்ந்த பயிற்சிகளோடு உளவியலை வலிமைப்படுத்தும் பயிற்சிகள். இவையெல்லாம் அவசியம். ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ஒட்டுமொத்த பணியாளர்களும் ஒன்று கூடி அளவளாவ அதிகார் மட்டத்திற்கும் பணியாளர்களுக்கு இடையேயா இடைவெளி களையப்படவேண்டும்.
இத்தகைய ஒன்று கூடல் மூலம் அரசின் நோக்கம், பணியாளர்கள் செய்யவேண்டிய சேவை இரண்டும் தெளிவாக விளக்கப்பட்டு இலக்கு வைத்து நகர்த்தபடவேண்டும்.
மனவளம் தான் மனோபலம். அரசு ஊழியர்கள் என்பது அரசின் அச்சாணி போன்றவர்கள். சலிப்பு நீங்கி சக்தியுடன் இயங்கவேண்டும். இது நிகழும் போது அவர்களின் முழுமையான சக்தி மாநிலத்திற்கு பயன்படும்.


No comments:

Post a Comment

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...