Wednesday, January 14, 2015

மாதொருபாகனும் மன்னிக்க முடியாத பாதகமும்


முப்பத்தியெட்டாவது புத்தக திருவிழா களைக்கட்டிக்கொண்டிருக்கும் வேளையில் பெருமாள் முருகனின் மாதொருபாகன் நூல் ஏற்படுத்திய சர்ச்சையால் ஜனநாயகம் மன்னிக்கமுடியாத பாதகநிலைக்கு சென்றுகொண்டிருக்கிறது.

சர்ச்சை என்று சொல்வதைவிட அதிர்வு என்று சொல்லலாம்.அறிவுபுரட்சியின் வீரியத்தை சிலாக்கும் வேளையில் ஒரு சமூகம் பின்னோக்கி சென்று ஒரு அறிஞனை சாதியைவிட்டு தள்ளிவைத்திருப்பதாக சொல்கிறது.
அறிவு ! நிமிர்ந்து நிற்கவே. புதைக்கப்ப்ட்டாலும் விதைக்கப்பட்டதாக வீறுகொண்டு எழவேண்டிய ஒரு அறிஞன் தான் செத்துவிட்டதாக பிரகடனம் செய்துகொள்கிறான். இரண்டுமே கேலிக்குரியது. பாரதியும், பெரியாரும், ..சியும் நிமிர்ந்து நின்ற மண். அதே திமிரும், அதே விவேகமும் ஒரு அறிஞனுக்கு அவசியம். தாழ்ந்து போய் கழிவிறக்கம் தேடுதல் அழகல்ல.
அப்படி என்ன இருக்கிறது மாதொருபாகனில். குழந்தைபேறு இல்லாத ஒரு தம்பதி, அதற்காக பல்வேறு சடங்குகள், சம்பிரதாயங்கள் என நம்பிக்கைகளை பின்பற்றுகிறது. இறுதியில் ஒரு சம்பிரதாயமாக விசாகதிருவிழா பொழுதில் அர்த்தநாரி வீற்றிருக்கும் கோயிலில் போய் தங்கி, விரும்பியவனுடன் உறவுகொண்டு பிள்ளைப்பெற்றுகொள்வார்கள் என்ற ரீதியில் அந்த நாவலின் போக்கு செல்கிறது. இது எங்கள் சமூகத்தை அவமதிக்கிறது என்கின்றனர் அச்சமூக மக்கள். இதை நான் யாரையும் அவமதிக்கும் நோக்கில் எழுதவில்லை. நிகழ்ந்ததாக கருதப்படும் ஒரு சடங்கை என் ஆய்வின் அடிப்படையில் கிடைத்த ஆதரங்களை கொண்டு எழுதினேன் என்கிறார்.
பாலுறவு சார்ந்த நிகழ்வுகளை முறையற்ற முறையில் பதிவு செய்திருக்கிறார் என்பது குற்றச்சாட்டு. உண்மையில் இன்றைக்கு பாலுறவு பற்றிய நிலை தமிழ்நாட்டில் உள்ளொன்று புறமொன்றாகதான் இருக்கிறது.ஆனால் சங்ககாலம்தொட்டே பாலியல் தொடர்பான விடயங்கள் தமிழ்நாட்டில் வெளிப்படையாக விவாதிக்கப்பட்டதை போல் வேறங்கும் விவாதிக்கப்பட்டதில்லை.திடீரென்று திரை போட்டு பாவனையில் வீழ்ந்தது எப்போது என்று யுகிக்கமுடியவில்லை. மாதொருபாகனில் நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்ததாக சொல்லப்படும் சம்பங்கள் இன்றும் பல இடங்களில் நாகரீக போர்வையில் ஜோடிமாற்றங்கள் Socialism என்ற பெயரில் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன.ஊடகங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் திருமண ஆகும் முன்பே ஒரே வீட்டில் வசிப்பது, பதினெட்டு வயதிற்குள்ளேயே பாலுறவு, முறையற்ற உறவுகள் என தினம்தினம் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. உண்மையில் பாலியல் சுதந்திரத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன இவற்றை இன்றும் பல இயக்கங்கள் விமர்சித்துகொண்டுதான் இருக்கின்றன. இது விவாதிக்கப்படவேண்டிய பொருளாக இருக்கிறது. இத்தகைய நிகழ்வைதான் பெருமாள்முருகன் மாதொருபாகனில் கையாண்டிருக்கிறார்.
ஜனநாயக நாடு என்பது கருத்து சுதந்திரத்தையும், பேச்சு சுதந்திரத்தையும் தழைக்கசெய்யவேண்டும். அதே போல் மாற்றுக்கருத்தும் மதிக்கபடவேண்டும். ஒரு கருத்தியலை தன் நாவலில் புகுத்த பெருமாள் முருகனுக்கு எத்தனை உரிமை இருக்கிறது. அதே உரிமை அதனை மறுக்கவும் எதிர்க்கவும் மற்றவர்களுக்கு உரிமை இருக்கிறது. அது ஜனநாயகத்தின் அளவுகோளோடு நிற்கவேண்டும். அதனை மீறி தனிநபரின் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் செயல்படுவது ஜனநாயகத்தை படுகொலை செய்வதற்கு ஒப்பாகும்.
பெருமாள்முருகனின் படைப்பில் மாறுபட்ட கருத்து இருந்தால், அதனை ஊடகங்கள் வாயிலாக, ஆதரபூர்வமான சான்றுகள் வாயிலாக பதிவு செய்யலாம். அதைவிட்டு ஊரைவிட்டு தள்ளிவைப்பது, நெருக்கடி தருவது என்பது ஏற்றுக்கொள்ளதக்கதல்ல.
பெருமாள் முருகன் விடயத்தில் இயக்கங்கள் செய்த எதிரலை எதற்கு உதவி இருக்கிறதோ இல்லையோ புத்தக விற்பனையை அதிகரித்துவிட்டது. ஆனால் பெருமாள் முருகன் தன் கருத்தை இன்னும் ஆதரப்படுத்தாமல் திடீரென பின்வாங்குவது முரணானது.
2005 ஆம் ஆண்டு அல்லது 2006ஆம் ஆண்டாக இருக்கலாம். பெங்களூர் மாநகரில் நடந்த நிகழ்வு இது.சாகித்ய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி வெளியில் செல்கிறார். அப்போது ஒரு எருமை அவர் வாகனத்தை குறுக்கிட எரிச்சலாகிறார். சுற்றி பார்த்தால் சாலையில் இன்னும் சில எருமைகள் மேய்ந்துகொண்டிருக்கின்றன. அதே எரிச்சலுடன் வீட்டிற்கு செல்ல,அங்கே ஒரு பத்திரிகை நண்பர் வந்திருக்கிறார். அவரிடம் யூ.ஆர். அனந்தமூர்த்தி இதனை பகிர்ந்துகொள்ள, நகரில் பெருகி வரும் மாடுகள் தொல்லை என்று யூ.ஆர்.அனந்தமூர்த்தியின் கருத்தாக  மிகப்பெரிய செய்தியாகிறது. அப்போது முதல்வராக இருந்தவர் தேவகவுடாவின் மகன் குமாரசுவாமி. இரவு இந்த செய்தியை படிக்கிறார். அவரை இது கடுமையாக பாதிக்கிறது. மறுநாள் காலை தன் பரிவாரங்களுடன் புறப்பட்ட குமாரசுவாமி நேராக யூ.ஆர்.அனந்தமூர்த்தியின் வீட்டிற்கு செல்கிறார். நிகழ்ந்தவைக்கு மன்னிப்பு கோரி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறுகிறார். உடன் இருந்த அப்போதைய பெங்களூர் மேயர் நாகராஜாவை அறிமுகப்படுத்துகிறார். அவரும் அனந்தமூர்த்தியிடம் மன்னிப்பு கேட்க, உடனடியாக தறிகெட்டு திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு காப்பங்களில் அடைக்கப்படுகின்றன. அன்று மாலையே எடுத்த நடவடிக்கைகள் அனந்தமூர்த்திக்கு தெரிவிக்கப்படுகிறது.
நம் அண்டை மாநிலத்தில் நிகழ்ந்த நிஜசம்பவம் இது. ஒரு இலக்கியவாதியை, ஒரு படைப்பாளியை எந்த அளவிற்கு ஒரு மாநிலம் மதிக்கிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். நம்ம ஊரு கலைஞர்களை நாம் மதிக்காத சூழலில் அவர்களை வரவழைத்து பெங்களூர் ஹப்பா என்ற பெயரில் கர்னாடக கொண்டாடிய நிகழ்வுகளை நான் பார்த்து அகமகிழ்ந்து இருக்கிறேன்
       அந்த மாநில மக்களிடம் நம் மக்கள் கற்றுக்கொள்ளவேண்டிய முக்கிய செய்தி இது.ஒரு படைப்பாளிக்கு தன் கருத்தை வெளிப்படுத்தும் முழு சுதந்திரமும் தரப்படவேண்டும். படைப்பாளியை மதிக்காத சமூகம் முன்னேறியதாக வரலாறு இல்லை.




1 comment:

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...