Sunday, June 14, 2020

பி.கண்ணன் ( ஒளிப்பதிவாளர் ) பசுமை நாயகர் !

பி.கண்ணன் சார் பற்றி பேச என்னிடமும் சில அனுபவங்கள் இருக்கிறது.
எம்.ஆர்.பாரதி சாரிடம் உதவியாளராக இருந்த நேரம். பாரதி சார் பப்ளிகேஷன் ஆரம்பித்த புதிது. பூந்தமல்லி பக்கம் ஒரு கல்லூரிக்கு புத்தகம் வழங்க சென்றிருந்தோம். பாரதி சார் சொன்னார் திரும்பி போகும் போது கண்ணன் சாரை பார்த்துவிட்டுபோவோம் என்றார்.
பாரதிராஜாவின் கண்களை பார்க்கபோகிறோம் என்ற பரபரப்பு எனக்குள் ஒட்டிக்கொண்டது. இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறார் ? நேரில் எப்படி இருப்பார் என்ற ஆர்வம் என்னுள் அதிகரிக்கதொடங்கிவிட்டது.
திருநீர்மலை என்று நினைவு இல்லை குன்றத்தூராக இருக்கவேண்டும். ஒரு வயலுக்கு அருகே வண்டியை நிறுத்திவிட்டு எம். ஆர். பாரதி சார் ஒருவரை பார்த்து கையசைத்தார்.
அங்கிருந்து அந்த மனிதர் " வாங்க பாரதி ! " என்று நேசமுடன் கையைசைத்தார்
பட்டாபட்டி டிரவுசர், ஒரு முண்டா பனியன், கையில் விவசாயகருவியுடன் வயற்காட்டில் நின்றிருந்த அந்த மனிதர்தான் பி.கண்ணன் என்று என்னால் நம்பவே முடியவில்லை.
சென்னைக்கு அருகே கூப்பிடும் தூரத்தில் ஒரு விவசாயம் செய்துகொண்டிருக்கிறார். அவருக்கு சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதை அவருடன் பேசியபோது எனக்கு புரிந்தது. அப்பொழுது விவசாயத்தின் மீது எனக்கு பெரிய மதிப்பு இல்லை . பின்னாட்களில் வேளாண்மைகுறித்த சிந்தனை ஓடும் போதெல்லாம் பி. கண்ணன் சார் நினைவுக்கு வருவார்.
பிறகு பல ஆண்டுகள் கழித்து நானும் vijay armstrong ங்கும் ராஹெத் பிளாசாவில் அமர்ந்து பேசிகொண்டிருந்தோம். ஆம்ஸ் அப்பொழுது ஏதோ படத்தின் ஷூட்டிங்கிற்கு கேமராமேனாக சென்று திரும்பியிருந்தான்.
அவனிடம் ஒரு குட்டி பொடியன்களின் கதையை சொல்லியிருந்தேன். அடுத்து அவன் பி. கண்ணன் சாரை பார்க்கும் போது சொல்லியிருக்கிறான். கதை கேட்டு அவர் உற்சாகமாகிவிட்டார். இதை நல்ல புரடியுசருக்கு சொல்லலாம் ஆம்ஸ்....அவரிடம் புராஜக்ட் தயார் செய்துகொண்டு வரச்சொல்லுங்கள் என்றார்.
அடுத்த நாள் நானும் ஆம்ஸும் ஒரு புராஜக்ட ரிப்போர்ட்டுடன் அவரை சந்தித்தோம். வாங்கி படித்தவர் மகிழ்ச்சியுடன் சொன்னார்.
நிச்சயம் ஒரு நல்ல புரடியுசரை பிடித்துவிடுவோம். அடுத்து மூன்று மாதங்கள் தொடர்ந்து யாரையாவது சந்திக்க செய்துகொண்டே இருந்தார் பிறகு அமெரிக்கா சென்றுவந்தவுடன் சந்திக்கலாம் என்றார். நான் தான் பின்னர் சந்திக்கவில்லை.
நீண்டநாட்களுக்கு ....வருடங்களுக்கு பிறகு சென்னை திரைப்பட விழாவில் கடந்த டிசம்பர் மாதத்தில் தேவி தியேட்டரில் அதே டிரெட் மார்க் ஷார்ட்ஸ் மற்றும் புன்னகையுடன் ஒரு ஹலோ சொன்னார்.வாங்க வீட்டுக்கு டைம் கிடைக்கும் போது என்றார். ஆம்ஸ் பற்றி பேசினார்.
அன்று ஆம்ஸிடம் சாரை பார்த்தேண்டா என்றேன். ஆமாண்டா !இன்னைக்கு பேசினேன் என்றான்.
இன்னொரு விஷயத்தை சொல்லவேண்டும். நான் யாரைப் பார்த்தாலும் வாழ்க வளமுடன் சொல்வேன். அப்படி ஒருநாள் அவரிடம் வாழ்க வளமுடன் என்றேன்.
உடனே அவரின் முகம் பிரகாசமாகிவிட்டது. ஹே...நீங்கள் வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலையை பயின்று இருக்கிறீர்களா ? என்றார்
ஆமாம் ! சார் நான் அதில் மாஸ்டர்...அருள்நிதி என்றேன்.
உடனே கலகலவென சிரித்த அவர். நான் தான் மாஸ்டர் !!! நான் தீட்சை எடுத்த காலத்தில் நீ பிறந்திருக்கவே மாட்டாய் என்றார் கலகலப்புடன். பின்னர் எழுபதுகளில் சுவாமிஜி சைதைபேட்டையில் இருந்தபோது அவரை சந்தித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அவருடன் திரைப்பட ஜாம்பாவன்கள் பி. லெனின் சார், இளையராஜா சார்,இயக்குனர் எஸ் பி எம் சார் அனைவருமே தீட்சை எடுத்தவர்கள் என்றார்.
வேதாத்திரி மகரிஷி பற்றி அவரிடம் விரிவாக பதிவு செய்யவேண்டும் என்று பல முறை யோசித்துகொண்டே இருப்பேன். ஆனால் அது கனவாகிவிடும் என்று நினைத்துபார்த்ததில்லை. 
பூமிக்கு எல்லோரின் பயணமும் தற்காலிகமானதுதான்.
ஆனால் அவர்கள் பிரபஞ்சத்தில் அறிவாக நிறைந்திருப்பார்கள்
அவரவர் வாழ்க்கையில் அவர்கள் ஏதேனும் பிரதிபலிப்பை உருவாக்கிகொண்டே இருப்பார்கள்.
கண்ணன் சார் என்றால் அவரின் ஒளி ஓவியங்கள் நினைவுக்கு வரலாம். ஆனால் எனக்கு பசும் வெளிகளும், வயற்புறமும், வேளாண்மையும் பார்க்கும் போது எப்பொழுதும் பசுமையுடன் நினைவில் நிற்பார்.

No comments:

Post a Comment

பாஜகவின் தனித்து போட்டி தற்கொலை முயற்சியா ?

  மக்கள் கையில் ஊடகங்கள் வந்த பின்னர் பாரம்பர்ய ஊடகங்கள் பின்னோக்கி நகரத்தொடங்கிவிட்டன. அதிமுகவுடன் மல்லுக்கட்டிப் பார்த்து கேட்ட இடங்கள் கி...